இருண்டு கிடக்கும் செம்மணி மீது வெளிச்சம் படச்செய்வோம்!

இருண்டு கிடக்கும் செம்மணி மீது வெளிச்சம்படச்செய்வதற்காக முன்னெடுக்கப்படும் அணையாவிளக்கு போராட்டத்திற்கு  அனைத்து தமிழ் மக்களினதும் ஆதரவையும் ஏற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர்.

நாங்கள் இனப்படுகொலையை  எதிர்கொண்ட இனம், எதிர்கால சந்ததிக்கு இதனை கடத்துவதன் ஊடாக நினைவுகளை கடத்த முயல்கின்றோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அணையா விளக்கினை பலப்படுத்துவோம் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.மெய்நிகர் கலந்துரையாடலின்போதே அவர்கள் இதனை தெரிவித்தனர்.

தமிழ்  இனம் தன்னுடைய விடுதலையை நோக்கி போராட்டத்தில் ஈடுபட்டவேளை  தமிழ் மக்களிற்கு கிடைத்த பரிசுதான் காணாமலாக்கப்படுதலும், மனித புதைகுழிகளும் என தமிழ் சிவில் சமூக அமையத்தின் பொன்சிங்கம் தெரிவித்தார்

அவர் மேலும் குறிப்பிட்டதாவது

அண்மையில் செம்மணியில் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன இது எங்களுக்கு புதிய விடயமல்ல,எத்தனை படுகொலைகளை எங்கள் மக்கள் சந்தித்துள்ளனர்.

சமீபத்தைய அறிக்கையொன்றின் படி ஜேவிபி கிளர்ச்சி காலத்தில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் அடங்கிய மனித புதைகுழிகள் உட்பட  இலங்கையில்  59 மனித புதைகுழிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்குகிழக்கில் 13 பாரிய மனித புதைகுழிகள் உள்ளதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு இனம் தன்னுடைய விடுதலையை நோக்கி போராட்டத்தில் ஈடுபட்டவேளை  தமிழ் மக்களிற்கு கிடைத்த பரிசுதான் காணாமலாக்கப்படுதலும், மனித புதைகுழிகளும்.

காணாமலாக்கப்பட்டோர் விடயத்தை மனித புதைகுழிகளில் இருந்து பிரிக்க முடியாது.

அதன் ஒரு வெளிப்பாடே  மனிதப்புதைகுழிகள்.

செம்மணி மனித புதைகுழிகளை பொறுத்தவரை  மிகவும் ஆச்சரியமளிக்கின்ற விடயம் என்னவென்றால் உடல்கள் அகற்றப்பட்ட பின்னர் பிண்டங்களாக  கொண்டுவந்து தாக்கப்பட்டுள்ளனர்.

எந்த அடையாளத்தையும் காணமுடியவில்லை – எந்த அடையாளத்தையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை.திட்டமிட்ட இனப்படுகொலைக்கான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன.

600 பேரை புதைத்தோம் என  கிருஷாந்தி படுகொலையாளி தெரிவித்திருந்தார்.

12000 பேரை ஒரு சமூகம் தேடி அலைகின்றது.

7 வருடங்களிற்கு மேலாக தேடிக்கொண்டிருக்கின்ற சமூகம் இந்த புதைகுழிகள் குறித்து கேள்விப்பட்டதும்,அனைவரும் அங்கு சென்று தேடியிருக்கவேண்டும் – அதற்கான தேவை உள்ளது.

ஆனால் நாங்கள் எங்கள் இனம் அதனை செய்யவில்லை.

மரணங்களை மதித்து விடைகாண்பதற்கு இந்த விடயம் மிக முக்கியமானது.

இதேகாலப்பகுதியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் விஜயம் முக்கியத்துவம் பெறுகின்றது.

இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை தீர்மானம் செப்டம்பரில் காலாவதியாவதன் காரணமாக  அடுத்த கட்டத்தை நோக்கி செல்வதற்குஅதனை பற்றி அவர் அறிக்கையிடவுள்ளார்.

அவர் இலங்கைக்கு வருகை தரவுள்ளதை அறிந்த கொழும்பை தளமாக கொண்ட சிவில் சமூகத்தினர் அவரது வருகையை பிற்போடுமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

வடக்குகிழக்கை சேர்ந்த சிவில் சமூகத்தினரும் தனிநபர்களும் இதேகோரிக்கையை விடுத்தனர்.

இலங்கை சில விடயங்களை ஏற்றுக்கொண்டால் மாத்திரமே அவர் இங்கு வரவேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுத்தோம்.ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் முன்னெடுத்துள்ள இலங்கை பொறுப்புக்கூறல் திட்டத்தின் அதிகாரிகள் இலங்கை வருவதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதியளித்தால் தான் ஆணையாளர் இலங்கை வரவேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுத்தோம்.

மனித உரிமை ஆணையாளருடன் ஒரு கலந்துரையாடலில் ஈடுபட்டோம்,வருவதை எதிர்க்கவில்லை அவர் வந்தால் செம்மணிக்கு செல்லவேண்டும்,இலங்கை அதிகாரிகளிடம் இது குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தோம்.

சுஜீவன் ( மக்கள் செயல்)

கிருஷாந்தி குமாரசுவாமி குற்றவாளி செம்மணியில்  400 உடல்களை புதைத்தாக தெரிவித்தார்.

பல வருடங்களாக இது தொடர்பில் நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்படாத நிலையில் தற்போது 19 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் சர்வதேச கவனத்தை ஈர்ப்பதே இந்த போராட்டத்தின் நோக்கம்

எமது இளைஞர்கள் மத்தியிலும் இது குறித்த விழிப்புணர்வு இல்லை.

நாங்கள் இனப்படுகொலையை  எதிர்கொண்ட இனம், எதிர்கால சந்ததிக்கு இதனை கடத்துவதன் ஊடாக நினைவுகளை கடத்த முயல்கின்றோம் நினைவுகளை பாதுகாப்பது இனப்படுகொலையை எதிர்கொண்ட இனத்தினை பொறுத்தவரை மிகவும் அவசியமான விடயம்.

பலபடுகொலைகளை தமிழ் சமூகம் எதிர்கொண்டுள்ளது.

செம்மணி இதற்கான ஒரு உதாரணம். இந்த போராட்டத்தின் ஊடாக அனைத்து பிரஜைகளையும்,இளையோரையும் தனிநபர்களையும் உள்ளீர்க்க முயல்கின்றோம்.

இதுவரை காலமும் குறிப்பிட்ட சிலரே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபாட்டை வெளிப்படுத்தி வந்துள்ளனர், பலரை உள்ளீர்த்தல் என்பது இந்த நடவடிக்கையின் நோக்கம்.

மக்களை நோக்கி எங்கள் கருத்துக்களை கொண்டு செல்ல முயல்கின்றோம்.மக்கள் திரட்சியை ஏற்படுத்த முயல்கின்றோம்.

சமூக ஊடகங்கள் ஊடாகவும் எங்கள் போராட்டத்தினை முன்னெடுக்கின்றோம்,இணையவழி மூலம் கையெழுத்து பெறும் நடவடிக்கையினை முன்னெடுக்கின்றோம்.

அணையா விளக்கு போராட்டத்தின் போது கவிதைகள் கட்டுரைகள் சித்திரங்கள்  ஆவணப்படங்கள் என பல வழிமுறைகள் ஊடாக நினைவுகளை நடந்தவற்றை பகிர்ந்துகொள்ளதிட்டமிட்டுள்ளோம்.

உங்கள் பிள்ளைகளை அழைத்து வாருங்கள்.

நாடக ஆற்றுகைக்கும் திட்டமிட்டுள்ளோம். அரசியல் சிவில்சமூக பிரதிநிதிகளின் ஒத்துழைப்புடன் நாங்கள் இதனை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம்.

மூன்று நாட்களும் உங்கள் ஒத்துழைப்பு அவசியம்.ஒன்றிணைதல் கட்டாய தேவை.

மறுக்கப்பட்ட நீதியை முன்னெடுக்கும் களமாக இதனை பயன்படுத்துவோம்,

3 நாட்களும் தொடர்ச்சியாக மக்கள் போராட்டமாக இது இடம்பெறும்.

 

ஜெரா( சிவில் சமூக செயற்பாட்டாளர்)

நாங்கள் பொதுவெளியில் எல்லா தரப்பினதும் ஆதரவை கோரினோம்.அந்த வழியில் சகல தரப்பினரும் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் இவ்வாறான போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக ஊடகங்கள் ஊடாக அறிந்தோம் அதற்கும் எங்களிற்கும் நேரடி தொடர்பில்லை.

ஆனால் அதனை வரவேற்கின்றோம், இங்கு நாங்கள் செய்கின்ற மாதிரி அங்கும் செய்வதை நாங்கள் ஆத்மார்த்தமாக வரவேற்கின்றோம்,

மூன்று நாட்கள் நாங்கள் இந்த போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளோம்,

கடந்தகாலத்தில் எங்கள் பகுதி வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவேளை எல்லோரும் ஒரு குடையின் கீழ் செயற்பட்டோம் , அதன் அடிப்படையிலேயே இந்த முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் முயற்சி உருவானது.

அணையா விளக்கு மூலம் மனித புதைகுழி குறித்து சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்ப்பதும் எங்களின் நோக்கம்.

அணையாள விளக்கு  இருண்டுகிடக்கும் செம்மணிக்கு வெளிச்சம் போடுவதற்கான ஒரு முயற்சியாகும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் சிந்துபார்த்திக்கு வந்தால்  அவரை சந்தித்து ஒரு பட்டயத்தை வழங்க திட்டமிட்டுள்ளோம்.

 

மருத்துவர் உதயசீலன்

 

வாகனங்களில் விலங்குகள் அடிபட்டால் துடித்துப்போகின்ற சமூகத்தவர்கள் நாங்கள் ஆனால் இவர்கள் எங்கள் உறவுகள் ஆனால் யார் என்று தெரியவில்லை.

எதற்காக எந்தவித அடையாளங்களும் இல்லாமல் மறைத்து வைத்தார்கள் என்பது தெரியவில்லை.

இந்த விடயத்தை மக்கள் மயப்படுத்தவேண்டிய தேவையுள்ளது,எல்லோரும் வரவேண்டும்,நீதி கேட்க்கும் மக்கள் என்ற அடிப்படையில் அனைவரும் இணைந்து கொள்ளவேண்டும்.

ஒரு நாள் கதவடைப்பு குறித்து சிலர் கருத்து தெரிவித்தார்கள் ஆனால் தற்போதுள்ள களநிலைமையில்  அது சாத்தியமில்லை, அச்சுறுத்தல்கள் காணப்படுகின்றன.

இதன் காரணமாக அமைதிவழி கவனயீர்ப்பு போராட்டத்தை சட்டத்திற்கு உட்பட்ட விதத்தில் முன்னெடுக்க தீர்மானித்தோம்.

பலதரப்பட்டவர்கள் இந்த போராட்டத்தில் இணைந்துகொள்வார்கள் அவர்களிற்கு ஆபத்துள்ளது. ஆனால் அதனையும் மீறி இந்த செய்தியை உரத்துசொல்லவேண்டும்.

நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள்  ஆதரவை எவ்வழியிலாவது வெளியிடுங்கள்.கருப்பு பட்டியை அணியுங்கள் , விளக்கை ஏற்றுங்கள்  மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டமாக மாற்றுவோம்.

வடக்குகிழக்கில் உள்ள அனைத்து பகுதிகளிலும் படுகொலைகள் இடம்பெற்றன, பலரை கொலை செய்து புதை;துள்ளனர்.

உள்ளுராட்சி தேர்தலில் அனேக கட்சிகள்  தமிழ்தேசியத்தை சொல்லித்தான் ஆட்சிக்கு வந்தன  அவர்கள் அந்த பகுதியில் காணாமல்போனவர்கள் குறித்த தகவல்களை திரட்டவேண்டும், நினைவுச்சின்னங்களை எழுப்பவேண்டும்.

வரலாற்றினை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவோம்.

சமீபத்திய செய்திகள்