ஏக்கியராச்சிய தீர்வு யோசனையும், 13வது திருத்த யோசனையையும், சமத்துவ யோசனையையும், தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் இருந்து எடுக்கக்கூடியவை அல்ல என அரசியல் ஆய்வாளரும், சட்டதரணிமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
அதன் முழு விபரமும் வருமாறு,
கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவை பொது அமைப்புக்களுடன் இணைந்து கடந்த 15ஆம் திகதி அரசியல் தீர்வு தொடர்பாக ஒரு கலந்துரையாடலை நடத்தியுள்ளார்.
பல்பக்க அழுத்தங்களுக்கு முகம் கொடுக்கும் கஜேந்திரகுமார்
அதில். ஏக்கியராசாச்சிய தீர்வு யோசனையை நிராகரித்தல், தேச அங்கீகாரம், இறைமை அங்கீகாரம், சுயநிர்ணய அங்கீகாரம் என்பவற்றை அரசியல் தீர்விற்கு அடிப்படையாகக் கொள்ளுதல், அரசியல் தீர்வின் உள்ளடக்கத்திற்கு முதல் இந்த அடிப்படைகளை ஏற்றுக் கொள்வது பற்றி சிங்களத் தரப்பும், தமிழ்த் தரப்பும் சமூக ஒப்பந்தம் ஒன்றில் மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தத்தின் கீழ் கையொப்பமிடல், திம்புக் கோட்பாட்டை வழிகாட்டியாகக் கொள்ளுதல், தீர்வு யோசனைகள் உட்பட எதிர்கால அரசியல் நிலைப்பாடு பற்றி தமிழ்த் தேசியப் பேரவையும் சிவில் தரப்பும் கலந்து கொள்ளும் பொதுச் சபையில் தீர்மானித்தல் என்பவை தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.

இதற்கு மாறாக முதல் நாள் 14ஆம் திகதி புலம்பெயர் தரப்பில் உள்ள ஒரு பிரிவினரின் ஊக்குவிப்பில் திருமலைப் பிரகடனம் வெளியிடப்பட்டது. உள்ளகப் பொறிமுறைகளை ஏற்றுக் கொள்வதில்லை என்றும், சமஸ்டி என்ற பதத்தை பயன்படுத்தக் கூடாது என்றும், கொள்கை நிலைப்பட்ட விடயங்களையே கோரிக்கையாக முன்வைக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டது.
உள்ளார்ந்தமாக திருமலைப் பிரகடனம் வெளியக சுயநிர்ணயத்தையே வலியுறுத்துவதாக இருந்தது.
இது ஒரு வகையில் தமிழ்த் தேசியப் பேரவையின் “சுயநிர்ணய சமஸ்டி” என்ற கருத்து நிலைக்கு எதிராகவே முன் வைக்கப்பட்டது. தமிழ்த் தேசியப் பேரவையின் கலந்துரையாடலுக்கு முன்னர் திருமலைப் பிரகடனத்தை வெளியிட வேண்டும் என்ற அடிப்படையிலேயே அவசரம் அவசரமாக 14ஆம் திகதி கூட்டத்திற்கு ஒழுங்கு செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
இவை பற்றி சென்றவாரக் கட்டுரையிலும் குறிப்பிடப்பட்டது. குறிப்பாக சொல்வதனால் கஜேந்திரகுமாரின் முயற்சிகளைக் குழப்புவதற்கான எத்தனிப்பு என இதனைக் கூறலாம்.
கஜேந்திரகுமாரைப் பொறுத்தவரை பல்பக்க அழுத்தங்களுக்கு முகம் கொடுக்கின்றார் எனலாம்.
கஜேந்திரன் குமாரின் குற்றச்சாட்டுக்கள்
ஒரு பக்கத்தில் தமிழரசுக் கட்சியினது ஏக்கியராச்சிய அரசியல், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 13 வது திருத்த அரசியல், இன்னோரு பக்கத்தில் புலம்பெயர் தரப்பினரதும் தாயகத்தில் ஒரு பிரிவினரதும் வெளியக சுயநிர்ணய அரசியல 3வது பக்கத்தில் தேசிய மக்கள் சக்தியின் அதிகாரப் பகிர்வு எதுவும் இல்லாத சமத்துவக் கொள்கை அரசியல் இந்த மூன்றிற்கும் நடுவே சுயநிர்ணய சமஸ்டி என்ற அரசியலை முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார்.
ஏக்கியராச்சிய தீர்வு யோசனையும், 13வது திருத்த யோசனையையும் சமத்துவ யோசனையையும் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் இருந்து எடுக்கக்கூடியவைல்ல.
அது முழுக்க முழுக்க சிங்கள – பௌத்த தேசியத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எடுக்க வேண்டியவையாகும். வெளியக சுயநிர்ணய அரசியலை தாயகத்தில் உள்ளோர் மேற்கொள்ள முடியாது. அதற்கு 6வது திருத்தம் தடையாக உள்ளது. புவிசார், பூகோள அரசியலும் அதற்கான இடத்தை வழங்காது.

இந்நிலையில் வெளியக சுயநிர்ணயம் எனக் கூறுவது ஏக்கியராச்சிய அரசியல் தொடருவதற்கே வழிவகுக்கும். இதனைத் தான் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் ஒற்றையாட்சிக்குள் முடக்குவதற்கு ஈழத்தமிழர் உரிமைகள் பெருமன்று முயற்சிக்கின்றது எனக் கூறுகின்றார்.
இக்கூற்றிலும், உண்மைகள் இல்லாமல் இல்லை. ஏக்கியராச்சிய கோரிக்கையும், 13வது திருத்தமும் தமிழ் மக்கள் மத்தியிலிருந்தே வருகின்றது. தேசிய மக்கள் சக்தியின் சமத்துவ அரசியல் கோரிக்கைக்கு பின்னாலும் சிலர் செல்லப் பார்க்கின்றனர்.
இந்நிலையில் இந்த மூன்றையும் ஏற்காத தமிழ் மக்களின் சுயநிர்ணயத்தை வலியுறுத்துகின்ற தரப்புகள் ஓரணியில் நிற்க வேண்டியது அவசியமானதாகும். ஈழத்தமிழர் உரிமைகள் பெருமன்று அதனையும் குழப்புகின்றது.
இந்த நான்காவது தரப்பு பலவீனமடையுமானால் மீதி ஏனையவையே பலமடையக் கூடிய நிலை ஏற்படும். இதனால் தான் ஈழத்தமிழர் உரிமைகள் பெருமன்று மறைமுகமாக ஒற்றையாட்சிக்குள் தமிழ் அரசியலை முடக்க முனைகின்றது என கஜேந்திரன் குற்றம் சாட்டுகின்றார்.
கொழும்பை மையப்படுத்தி முன்னெடுக்கப்படும் அரசியல்
ஏக்கியராச்சியகாரர்களும், 13 வது திருத்தக்காரர்களும், சமத்துவக்காரர்களும், ஒற்றையாட்சியை ஏற்பவர்கள். “ஏக்கியராச்சிய” கோரிக்கையை ஒரு போதும் விட்டுவிட்டு வரப்போவதில்லை. தென்னிந்திய திருச்சபை வழிவந்த யாழ்ப்பாணக் கல்லூரி அரசியல் இருதரப்பினரை உருவாக்கியது ஒரு தரப்பினர் இறைமை அரசியலை முன்னெடுக்கும் தந்தை செல்வா தரப்பினர், அருட்தந்தை ஜெபநேசனும் இதற்குள் அடங்குவார்.
ஆனால் பெரும்பாலோர் இலங்கை தேசியத்திற்குள் நின்று கொண்டு அடையாள அரசியலையே முன்னெடுக்கப் பார்க்கின்றனர். அமெரிக்கா தலைமையிலான மேற்குலக ஆதரவும் அதற்கு உண்டு.

இதற்காக மேற்குலகின் சலுகைகளை தாராளமாகப் பெற்று வருகின்றனர். கொழும்பு மைய அரசியலும், சிறுபான்மையோருக்குரிய அடையாள அரசியலும், மேற்குலகத்தின் சலுகைகளும் சுமந்திரன் ஏக்கியராச்சியக் கோரிக்கையை விட்டுவிட்டு வர ஒருபோதும் அனுமதிக்காது. ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுயாதீன இருப்புக் கொண்ட கட்சியல்ல.
யாருடனாவது ஒட்டிக்கொண்டு நிற்கமுயலும் கட்சி. கொள்கை இறுக்கம் ஒன்றும் அதனிடம் கிடையாது. ஒட்டிக் கொள்ளும் நலனுக்கேற்றபடி கொள்கையை, நிலைப்பாட்டை மாற்றும்.
இந்திய சார்புக் கட்சியாக இருப்பதனால் 13 வது திருத்தத்தை எப்போதும் தூக்கிப் பிடிக்கும். தேசியமக்கள் சக்தி இனப் பிரச்சினையையே நிலவிரிப்புக்குள் தள்ள முயற்சிக்கின்றது.
மாகாணசபைத் தேர்தலை தடுக்கும் இனவாதம்
அதனிடம் பெரிதாக எதனையும் எதிர்பார்க்க முடியாது. அது சமத்துவ முகத்தைக் காட்டினாலும் அதன் உண்மையான முகம் இனவாத முகம் தான். அந்த இனவாத முகம் தான் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதைக் கூட தடுகின்றது.
எனவே இந்த ஒற்றையாட்சிச் சக்திகளை பலவீனப்படுத்த வேண்டுமென்றால் சுயநிர்ணய கோரிக்கையை முன்வைப்பவர்கள் பலமடைய வேண்டும். எனவே தமிழ்த் தேசியப் பேரவையை பலவீனப்படுத்த முனைபவர்கள் மறைமுகமாக ஒற்றையாட்சிக்காரர்களை பலப்படுத்துகின்றனர் என்று கூறவேண்டும்.
ஈழத்தமிழர் உரிமைகள் பெருமன்றைச் சேர்ந்தவர்கள், கொள்கைகளை மட்டும் முன்வைக்க வேண்டும். சமஸ்டி போன்ற நடைமுறை வடிவத்தைப் பற்றி பேசக்கூடாது என்கின்றனர்.
3ஆம் தரப்பின் தலையீட்டைக் கோரவேண்டுமானால் நடைமுறை வடிவத்தையும் முன்வைக்க வேண்டியது அவசியமானதாகும்.

புலிகள் இயக்கமும் கூட இடைக்காலத் தீர்வு யோசனையை முன்வைத்தது என்பதைக் இங்கு நினைவுகூருவது பொருத்தமானதாகும். புலிகளின் இடைக்கால யோசனையில் சுயாட்சி அதிகாரம் பற்றி கூறப்பட்டுள்ளதே தவிர கூட்டு அதிகாரம் பற்றி கூறவில்லை என்ற விமர்சனம் அன்று 3ஆம் தரப்பினரால் முன்வைக்கப்பட்டது.
தமிழ் மக்கள் பேரவையின் தீர்வு யோசனையிலும் கூட்டு அதிகாரம் பற்றி விரிவாகக் கூறப்படவில்லை. கூட்டு அதிகாரத்தில் முக்கியமானது மத்திய அரசில் தமிழ் மக்கள் ஒருதேசமாகப் பங்குபற்றுவதாகும்.
அதற்கான பொறிமுறை இல்லாவிட்டால் மத்திய அரசு சிங்கள – பௌத்த அரசாகவே இருக்கும்.
மத்திய அரசினை சிங்கள பௌத்த அரசாக வைத்துக் கொண்டு எந்த அதிகாரப் பகிர்வு வழங்கினாலும் அது ஒரு போதும் நடைமுறைக்கு வரப்போவதில்லை.
சுழற்சி முறையில் அதிகார பகிர்வு
இது தொடர்பாக தமிழ் மக்களுக்கு நிறையவே வரலாற்று அனுபவம் உண்டு. சோல்பரியாப்பில் சிறுபான்மையோர் காப்பீடாக இருந்த 29ஆவது பிரிவு நடைமுறைக்கு வரவில்லை.
13-வது திருத்தத்தில் உள்ள விடயங்கள் நடைமுறைக்கு வரவில்லை. 13வது திருத்தத்திலும், 16வது திருத்தத்திலும் இருந்த அரச கரும மொழி ஏற்பாடுகள் நடைமுறைக்கு வரவில்லை. 13-வது திருத்தத்தில் கூட்டு அதிகாரத்திற்கான எந்த ஏற்பாடுகளும் இருக்கவில்லை. கூட்டு அதிகாரத்தில் தேசிய இனங்களின் பங்குபற்றல் பற்றி சுவிஸ் அரசியல் யாப்பில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அங்கு நிர்வாகத் துறையாக கூட்டாட்சிக் குழுவே உள்ளது.
இதில் ஏழு பேர் அங்கம் வகிக்கின்றனர். அங்கு வாழும் தேசிய இனங்களின் விகிதாசாரத்திற்கு ஏற்ப ஜேர்மன் மொழி பேசுவோருக்கும், பிரெஞ்சு மொழி பேசுவோருக்கும், இத்தாலி மொழி பேசுவோருக்கும் இடையே 4:2:1 என்ற வகையில் பிரதிநிதித்துவம் வழங்கப்படுகின்றது.

கூட்டாட்சிக் குழுவின் பதவிக்காலம் 7 வருடங்கள் ஆகும். ஒவ்வொரு வருடமும் தலைவர் சுழற்சி முறையில் பதவி ஏற்கின்றார். இதன் மூலம் குறைந்த எண்ணிக்கையில் வாழும் இத்தாலி மொழி பேசுவோரின் பிரதிநிதியும் தலைவராக வர முடிகின்றது. இதை விட முக்கிய அமைச்சர் பதவிகளும் மூன்று தேசிய இனங்களுக்கும் சுழற்சி முறையில் வழங்கப்படுகின்றன.
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளும் சுழற்சி முறையில் பதவி ஏற்கின்றனர். மிக அண்மைக்காலத்தில் உருவான பொஸ்னியசமஸ்டியும் கூட்டு அதிகாரத்தில் தேசிய இனங்களின் பங்கேற்பை எடுத்துக்காட்டுகின்றது. அங்கு நாட்டின் தலைவரான ஜனாதிபதி சுழற்சி முறையில் தெரிவு செய்யப்படுகின்றார்.
மலையக மக்களின் ஆலோசனை அவசியம்
தமிழ் மக்கள் பேரவையின் தீர்வு யோசனை தொடர்பாக வேறும் பல மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. இதன் தீர்வு யோசனையில் பிரிவினையில்லாத சுயாட்சி என்ற கருத்து சேர்க்கப்பட்டுள்ளது. பிரிவினை என்ற பதத்தை வலிந்து தீர்வு யோசனையில் சேர்க்க வேண்டியதில்லை என்பதே பலரின் கருத்தாக உள்ளது.
தவிர மலையக மக்கள், முஸ்லீம் மக்கள் பற்றிய ஏற்பாடுகளும் அந்தந்த சமூகங்களுக்கு ஏற்றதாக இல்லை. மலையக, முஸ்லீம் மக்களுக்கான அரசியல் தீர்வு பற்றி கருத்துக்களை முன்வைக்கும் போது அம்மக்களின் பிரதிநிதிகளுடனும் கலந்தாலோசிப்பது அவசியம். தமிழ் மக்கள் பேரவையின் தீர்வு யோசனையை அரசியல் தீர்வாக முன் வைப்பது பற்றி தமிழ்த் தேசியப் பேரவை கரிசனை செலுத்துகின்றது. இதற்காக 15ஆம் திகதி கலந்துரையாடலில் தமிழ் மக்கள் பேரவையின் தீர்வு யோசனைகளை மீளாய்வு செய்வதற்காக நிபுணர் குழு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நிபுணர் குழு மாற்றுக் கருத்துக்களையும் விமர்சனங்களையும் கவனத்தில் எடுக்க வேண்டும். நிபுணர் குழு விரைவில் கூட உள்ளது எனக் கூறப்பட்ட போதும் இதுவரை அக்கூட்டம் நடந்ததாக தெரியவில்லை.
எனவே விரைவில் நிபுணர் குழு கூடி மீள் பரிசீலனை அறிக்கையை முன் வைப்பது நல்லது. அதனை பொதுச் சபையிலும் விவாதித்து ஏற்றுக் கொண்டால் சிவில் அமைப்புக்களும், அரசியல் கட்சிகளும் இணைந்து முன்வைத்த முன்மொழிவாக அது இருக்கும்.
இதனைத் தொடர்ந்து ஏனைய கட்சிகளையும் இதனை ஏற்குமாறு அழுத்தங்களைக் கொடுக்கலாம்.
தமிழ்த் தேசியப் பேரவை எடுத்த முயற்சி நல்ல முயற்சி. அது வளர வேண்டும். அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் இணைந்த பொதுச் சபையை மேல் நிலைக்குக் கொண்டு வர வேண்டும்.
அரசியல் தீர்வு விவகாரத்துடன் மட்டும் நின்று விடாமல் ஏனைய அரசியல் விடயங்களிலும் அக்கறைப்படும் நிலைக்கு அதனை விரிவாக்கம் செய்ய வேண்டும்.
அரசியல் தீர்வுக்கு நிபுணர் குழுவை உருவாக்கியது போல சர்வதேச விவகாரம், நீதிமன்ற நடவடிக்கைகள், நிலப்பறிப்பு நடவடிக்கைகள் என்பவற்றிற்கும் நிபுணர் குழுவை உருவாக்கி செயற்படுவது ஆரோக்கியமாக இருக்கும். இது விடயத்தில் தமிழ்த் தேசியப் பேரவைக்கும் அதன் தலைவர் கஜேந்திரகுமாருக்கும், பாரிய பொறுப்பும் கடமையும் உள்ளது.
தேசமாக பயணித்தல் என்பது அத்தேசத்தில் உள்ள அனைவரையும் இணைத்து பயணிப்பதை குறிக்கின்றது. தேசத்தில் பல்வேறு தரப்பினரும் இருப்பார்கள். பொது இலக்கு நோக்கி அனைவரையும் ஒன்றிணைக்க முயற்சிக்க வேண்டும். இப்பயணத்தின் போது கட்சி அரசியலை சற்று பின்னே தள்ளுவது நல்லது. கட்சி அரசியல் தேசமாக பயணிப்பதை பலவீனப்படுத்தவே பார்க்கும். கட்சி அரசியலைக் கடந்து ஒரு அரசியல் இயக்கமாக வளர்ச்சி அடையும் போதே இதில் வெற்றிகளைக் காணலாம் என்றுள்ளது.




