07.09.1996 சனிக்கிழமை காலை ஆறு மணி. வெள்ளை வெளீரென்ற பாடசாலை சீருடையிடன் சுண்டிக்குள மகளீர் கல்லூரி ரையுடன் சரஸ்வதி படத்தின் முன்னே வணங்குகிறாள் கிருசாந்தி. சாதாரண பரீட்சையில் ஏழு பாடங்களில் டி சித்தி பெற்ற உயர்தர மாணவி அவள்.
(பின்னர், உயர்தர பரீட்சையில் தோற்றிய இரு பாடங்களிலும் விசேட சித்தி வீடு தேடி வந்திருந்தது)
இளவயதில் நோயில் தவறிப்போன தந்தை. தனியே தாயின் வளர்ப்பில் வளர்ந்த அவளுக்கு ஒருஅக்கா. ஒரு தம்பி.
அன்று இரசாயன பாட பரீட்சை. இறுதிநேர தயார்படுத்தல் குறிப்புகளை கையில் மடித்தவாறு, எதுஇருந்ததோ அதனை அவசரமாக சாப்பிட்டு விட்டு, சைக்கிளை எடுத்த அவளை தாய் வாசல் வந்துவழியனுப்பி வைத்தார். அவர்களது வீடு கைதடியில் இருந்தது.
வழியனுப்பிய உடனே, அவளது வீட்டுக்கு அருகே உள்ள கோவிலுக்கு சென்று வழிபட்டு திரும்பியஅந்த தாய், பிள்ளைகள் வீடு திரும்ப முன்னர் சமைக்க தொடங்கினார். அன்று அந்த தாய் காலைவிரதம் என்றபோதும், பிள்ளைகள் வீடு திரும்பிய பின்னரே உணவு பரிமாறி அவர்கள் சாப்பிட்டபின்னர் தான் அவரது மதிய உணவு.
இரசாயனவியல் பரீட்சையை முடித்த கிருசாந்தி அவரது நண்பியின் மரண சடங்கில் இன்னொருநண்பியான கௌதமியோடு கலந்துகொண்டுவிட்டு வீடு திரும்பினார்.
இராணுவத்தின் ட்ரக் ஒன்றே அந்த மாணவியை வீதியில் மோதி சாகடித்திருந்தது. அவரதுதந்தையார் யாழ் பலநோக்கு கூட்டுறவு சங்க தலைவர் மற்றும் நீதிக்காக குரல் கொடுப்பவர். அவரும்2007 இல் இராணுவ புலனாய்வுத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்.
செம்மணி சந்தியில் கிருசாந்தியின் நண்பி பிரிந்து தனது வழியில் செல்ல, கிருசாந்தி தனியேஇராணுவ காவலரணை கடந்து சைக்கிளில் செல்லும்போது இராணுவத்தினரால் மறிக்கப்படுகிறார்.
மதிய நேரம் கடந்தும் வீடு திரும்பாத கிருசாந்தியை காணாமல் தவித்துக்கொண்டிருந்தார் அவரதுதாய் ராசம்மா. பக்கத்து வீட்டுக்கார்ரான சிவபாக்கியத்திடமும் தனது கவலைகளை பகிர்ந்துகொண்டார்.
அப்போதுதான் அங்கு வந்த சிதம்பரம் கிருபாமூர்த்தி, அந்த செய்தியை எப்படி ராசம்மாவிடம்சொல்வது என தயங்கி, கிருசாந்தி காவலரணில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதை சிவபாக்கியத்திடம் சொல்கிறார்.
இதனைக் கேட்ட சிவபாக்கியம் பதற்றத்தில் தனது வீட்டு மலசலகூடத்திற்கு செல்கின்றார். இதனைக் கண்டுகொண்ட கிருபாமூர்த்தி, தானே விடயத்தை ராசம்மாவிடம் சொல்கிறார்.
இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த ராசம்மா தனது மகன் பிரவீணனுடன் ஒரு சைக்கிளிலும் மற்றும் கிருபாமூர்த்தி உடன் இன்னொரு சைக்கிளிலும் என இராணுவ காவலரணை நோக்கி சென்றனர்.
xxxxxxx
காவலரணில் கோப்ரல் ராஜபக்சவிடம் விசாரித்தபோது, அவன் தனக்கு எதுவும் தெரியாது எனவும் மூன்று பேரையும் திரும்பி செல்லுமாறும் கலைத்தான்.
இதனால் ஆத்திரமும் களைப்பால் சோர்ந்துபோன அந்த தாய் தனது மகள் எங்கே என தெரியாமல்அந்த இடத்தை விட்டு விலக மாட்டேன் என கத்தினாள்.
சாட்சியத்தை வெளியில் விடுவது தனக்கு ஆபத்து என கருதி அவர்கள் மூவரையும் தடுத்துவைக்க உத்தரவிட்டான் இராசபக்ச.
xxxxxxxx
ராசம்மா வீடு திரும்பவில்லை. என்ன நடந்தது எனவும் தெரியாமல், இரவும் ஊரடங்கு என்பதால்ஒன்றும் செய்ய முடியாமல், அதிகாலை ஏதாவது செய்வோம் என முடிவெடுத்தனர்.
அதிகாலை, புவனேஸ்வரி ஆசிரியரும் நாகேந்திரனும், கிருசாந்தியின் உறவினரும் யாழ்பிரதம தபால் அதிபருமான கோடீஸ்வரனிடம் சென்றனர். அவரோடு அவர்களையும் கூட்டிக்கொண்டு, அருகிலுள்ள புங்கன்குளம்இராணுவ முகாமுக்கு சென்றார். தாம் விசாரித்து தகவல் சொல்வதாக அங்குள்ள இராணுவத்தினர் சொல்லினர்.
மீண்டும் புவனேஸ்வரியும் நாகேந்திரனும் செம்மணி காவலரணுக்கு சென்று விசாரித்தனர். மூன்றுபேர் வந்ததாகவும் அவர்களை தடுத்து வைத்து உடனேயே அனுப்பிவிட்டதாகவும் அவன் சொன்னான். அவன் தான் அந்த நால்வரை கொன்ற பிரதான ஆளான லான்ஸ் கோப்ரல் இராசபக்ச என அவர்களுக்கு அப்போது தெரியாது.
xxxxxx
ஆங்கில புலமை பெற்ற சந்திரசேகரம் அவரது உறவினர்களைப் போலவே தொழில் வாய்ப்புக்காக, மலேசியாவுக்கு குடிபெயர்ந்தார். அவர் திருமணமாகி இரு மகன்கள் ஐந்து மகள்கள். ராசம்மாதான்இளையவர். ராசம்மா சிறியவராக இருக்கும்போதே அவரது தந்தை இறந்துவிட்டார். இதனால், அவர்கள் அனைவரும் இலங்கை திரும்பினர். கைதடியில் குடியேறினர்.
ராசம்மா, இராமநாதன் கல்லூரியில் படித்தார். அது சேர் பொன்னம்பலம் இராமநாதனால்உருவாக்கப்பட்ட பாடசாலை. அங்கு கற்று அதன் பின்னர், பல்கலை கழக படிப்பிற்காக இந்தியாசென்று 1950 களில் தாயகம் திரும்பினார்.
ஆசிரிய தொழிலில் இணைந்து கொண்ட அவர் 1970 களில் குமாரசாமியை திருமணம் செய்தார். அவர்களுக்கு மூன்று பிள்ளைகள். பத்து வருட திருமண வாழ்வுடன் கான்சர் நோய் குமாரசாமியைகாவு கொண்டது.
xxxxxx
மூன்று நாட்களுக்கு பின்னர், கொழும்பில் இருந்த பூபாலன் சட்டத்தரணியை தொடர்புகொண்டகோடீஷ்வரன், இதில் சந்திரிகா நேரடியாக தலையிடாமல் எதுவும் செய்ய முடியாது என சொன்னார். சட்டத்தரணி பூபாலன் இந்த விடயத்தை மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்திடம் எடுத்து சென்றார். அவர் அதனை நாடாளுமன்ற உரை ஊடாக வெளிப்படுத்தினார். இதில், பூபாலின் மூலம், மாமனிதர் குமார்பொன்னம்பலம் ஊடாக சட்ட விடயங்கள் ஆராயப்பட்டன. அதேவேளை குடும்பத்தினரை சந்தித்த நீலன் திருச்செல்வம் தன்னாலான முயற்களை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.
இந்த வேளையில் 20-09-1996 இல் மனிதவுரிமைச்சபையும் அவசர நடவடிக்கை கோரி அறிக்கை(UA226/96) வெளியிட்டது.
xxxx
விடயத்தின் விபரீதத்தை அறிந்தும் சிறிலங்கா படைகளின் கறைகளை போக்கவும் ஒரு விசாரணைநடத்தி ஒரு சிலருக்கு தண்டனை கொடுப்பதன் மூலம் சமாதானத்தின் தேவதையாக காட்ட முயன்றார் சந்திரிகா. லெப் கேணல் கலிங்க குணரட்ண தலைமையில் விசாரணை ஆரம்பமானது.
அப்போது கொழும்பில் இருந்த கோப்ரல் இராஜபக்ச 21-10-96 இல் யாழ்ப்பாணம் கூட்டிவரப்பட்டார். அவரது வாக்குமூலம் கொலைகளின் கொடூரத்தை வெளிப்படுத்தியது.
உடனடியாக சடலங்களை புதைத்த இடங்களை தோண்டுவதற்கான நீதிமன்ற கட்டளையுடன்பொலிசார் தோண்டி நான்கு சடலங்களை எடுத்தனர். இந்த நான்கு சடலங்களும் அவர்களதுஉறவினர்களால் 23-10-1996 இல் அடையாளம் காட்டப்பட்டது.
xxxxx
இதனை எப்படி சமாளிப்பது என யோசித்த அரசு இழுத்தடித்து இழுத்தடித்து – ஒரு வருடத்தின் பின்னர் – High court Trial at Bar ஏற்படுத்தப்பட்டு முதலாவது விசாரணை 17-11-1997 இல் தொடங்கியது
இதில் ஆறு பேர் மீது கற்பளிப்பு மற்றும் கொலைக் குற்றசாட்டு சுமத்தப்பட்டது. பாதிக்கப்பட்டவர் நலன் தரப்பில் குமார் பொன்னம்பலம், அப்பாத்துரை விநாயகமூர்த்தி, பூபாலன் ஆகியோர்இருந்தனர்.
அசிஸ்ரன்ற் சொலிசிற்றர் ஜெனரல் அறிக்கையை வாசிக்கிறார்:
காவலரணை கடந்த கிருசாந்தியை கோப்ரல் இராஜபக்ச மறித்து அடையாள அட்டையை கேட்டார். தொடர்ந்து கிருசாந்தியை உள்ளே கொண்டு சென்று சோதிக்குமாறு மற்ற படையினருக்குகூறினான்.
அவலக்குரல் எழுப்பிய கிருசாந்தியை கையை கட்டி வாயையும் கட்டுமாறு மற்ற படையினரைஏவினான் இராஜபக்ச.
கிருசாந்தியை தேடி வந்த மூவரையும் தடுத்து வைக்கவும் உத்தரவிட்டான் அவன்.
அன்று இரவு, கழுத்தில் கயிறு கட்டி, இரண்டு முனைகளில் பிடித்து இழுத்து இரண்டு ஆண்களையும்கொன்று, உடுப்புகளை கழட்டி நிர்வாணமாக்கி, உடலங்கள் இரண்டையும் ஒழு குழியிலும்உடைகளை இன்னொரு குழியிலும் தாட்டனர். பின்னர், தாயின் உடுப்பிகளை கழட்டிய பின்னர், கழுத்தில் கயிறு போட்டு கொன்றனர். அதனையும் உடலை ஒரு குழியிலும் உடுப்புகளை இன்னொருகுழியிலும் போட்டு தாட்டனர்.
இதே நேரத்தில் இன்னொரு மூலையில் கிருசாந்தி மீது, தொடர்ச்சியாக பாலியல் வன்புணர்வை ஒருவர் மாறி ஒருவர் செய்துகொண்டிருக்கிறார்கள்.
இறுதியில் அவளையும் உடுப்புகளை கழட்டி முன்னைய விதத்தில் சாகடிக்கிறார்கள்.
இதன் முடிவில் இராணுவ பொலிசுக்கு வழங்கப்பட்ட வாக்குமூலங்கள் அனைத்தும் வற்புறுத்தல் இன்றி வழங்கப்பட்ட வாக்குமூலங்கள் என ஏற்றுக்கொள்ளப்பட்டது.
xxxx xxxx xxxx
விசாரணையின்போது ஒத்துக்கொள்ளப்பட்டவை:
லான்ஸ் கோப்ரல் இராஜபக்ச (1): சைவகோவிலுக்கு அருகில் உள்ள காவலரணிற்கு பொறுப்பாக நின்றேன். மேலிடத்தில் இருந்து பல மாணவிகளின் பெயர்கள் எனக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அதில் கிருசாந்தியும் ஒருவர். 12 மணியளவில், சிவப்பு சைக்கிளில் கிருசாந்தி வந்துகொண்டிருந்தார். அவளை தடுத்துவைக்குமாறு பெரேரா (4) மற்றும் அல்விஸ் (5) ஆகியோருக்கு சொன்னேன்.அவளது கையையும் காலையும் கட்டி பங்கருக்குள் இருக்கவைத்தோம். சில மணி நேரங்களில் அவளைத் தேடி அவளது தாயாரும் தம்பியும் அவரது ஊரவர் ஒருவரும் வந்தார்கள். கிருசாந்தியை தடுத்துவைக்கவில்லை எனச் சொன்னபோது அவர்கள் சென்றார்கள். ஆனால் பின்னர் திரும்பி வந்த தாயார் தனது மகள் இல்லாமல் அங்கிருந்து விலகமாட்டேன் என கத்தினார். அப்போது அந்த மூன்று பேரையும் கைதுசெய்தோம். கிருசாந்தியை பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சி செய்தேன். ஆனால் என்னால் முடியவில்லை. அதனால், இந்திரஜித் (😎 பிரதீப் (3) பெரேரா (4) நசீர் ( பின்னர் அரச தரப்புவாதியாக மாறிவிட்டான்) ஆகியோரை அவளை பாலியல் வன்புணர்வு செய்ய சொன்னேன். பின்னர் நானும் வன்புணர்வு செய்தேன்.
ஜெயசிங்க (2): நள்ளிரவுக்கு பின்னர், என்னையும், பெரேரா (4) மற்றும் பிரதீப் (3) ஆகியோரை கிருசாந்தியை கூட்டிச்சென்று கொலை செய்யுமாறு கூறினான் (மற்ற மூவரும் ஏற்கனவே கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுவிட்டனர்). அவரை 100 மீற்றர் அழைத்துச்சென்று இருக்கவைத்து அவளது கயிற்றைப்போட்டு ஒரு முனையில் பெரேரா (4) கயிற்றின் ஒரு பக்கமும் பிரதீப் (3) ஜெயசிங்க (2) மற்றப்பக்கமும் என இறுக்கி இழுத்தோம். அவள் மூச்சடக்கி இறந்தாள். மற்றவர்களைப்போலவே இவளையும் புதைத்தோம்.
பிரதீப் (3): இவரது வாக்குமூலமும் ஜெயசிங்க (2) வை ஒத்திருந்தது.
பெரேரா (4): ஜெயசிங்க (2), பிரதீப் (3), பெரேரா (4) மற்றும் இராஜபக்ச (1) இணைந்து கொலை செய்தோம். கிடங்கு ஏற்கனவே வெட்டப்பட்டிருந்தது. அதற்குள் உடலை மண்ணைப்போட்டு புதைத்தோம்.
வாக்குமூலம் (5): இவர் சிறையில் இறந்துவிட்டதால் அவரது வாக்குமூலம் வலுவற்றது என விசாரணையில் தவிர்க்கப்பட்டது.
வாக்குமூலம் (6): இவரது வாக்குமூலத்தில் இருந்து இந்த குற்றத்தில் இவரது பங்கு ஓரளவு குறைவானது என கருதி விடுவிக்கப்பட்டார்.
வாக்குமூலம் (7): இராஜபக்ச (1) சொன்னபடி துணி ஒன்றை எடுத்து இரண்டு ஆண்களின் கைகளையும் கட்டி 50 மீற்றர் தூரத்திற்கு கூட்டி சென்று நிலத்தில் இருத்தினோம். கழுத்தில் கயிற்றைப்போட்டு இரண்டு பக்கத்திலும் பிடித்து இழுத்தோம். கிறாக் என சத்தம் கேட்டது. அப்படியே கீழே விழுந்தார்.
வாக்குமூலம் (8): ஒருவரை நானும் ஜெயசிங்க (2) வும் கொன்றோம் இளையவரை மற்றவர்கள் கொன்றனர்.
செம்மணி விசாரணை
செம்மணி காணாமல்போதல்கள் தொடர்பாக விசாரிக்குமாறு லெப் கேணல் கலங்க குணரத்தின, சிறிலங்கா இராணுவ பொலிஸ் படையின் இரண்டாவது கட்டளை அதிகாரி நியமிக்கப்பட்டிருந்தார். அவருடன் மேஜர் பாலித பொடிலறகாமி, சாஜன்ட் மேஜர் சுமித்திரா கோப்ரல் மனம்பெரி ஆகியோர் மற்றும் தமிழ் மொழிபெயர்ப்பாளர் ஒருவர் அனுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாணம் சென்றனர். யாழ்ப்பாணத்தில் ஞானம் கோட்டலில் விசாரணை அலுவலகம் இயங்கதொடங்கியது. செம்மணியில் தான் கிருசாந்தி காணாமல்போனார் என்பதற்கு எந்த தடயமும் காணப்படவில்லை. ஆனால் ஒரேயொரு தடயத்தை கொல்லப்பட்ட பிரவணனின் நண்பன் சசிதரன் இனங்காட்டினார். பிரவணனின் சைக்கிள் கவர் அந்தப்பகுதியில் காணப்பட்டு அதனை எடுத்த சிவநேசன் அருகில் உள்ள சைக்கிள் கடையில் கொடுத்திருந்தார். அதில் இருந்த ஸ்ரிக்கர் சசிதரனுக்கு மிகப்பரிச்சயமானது. அதுவே செம்மணியை நோக்கிய தடயப்பொருளானது.
செம்மணி தேடுதல்
23-10-1996/7 இல் செம்மணி பகுதியை தோண்ட வேண்டும் என நீதிமன்றத்திடம் கேட்டார். நீதிமன்ற அனுமதியுடன் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் பஸ்சில் ஏற்றி கொண்டுசெல்லப்பட்டு தனித்தனியே இறக்கி புதைக்கப்பட்ட இடத்தை காட்டவைக்கப்பட்டனர்.
அதன்படி தோண்டிய எடுத்த உடல்கள் நான்கும் உறவினர்களால் சரியாக அடையாளம் காட்டப்பட்டது.
மேலதிக சாட்சியங்கள்
18-11-1997 றிசேர்வ் பொலிஸ் கான்ஸ்ரபிள் சமரவிக்கிரம சாட்சிக்கூண்டுக்கு வரவளைக்கப்பட்டார். முதலில் இவரும் சந்தேகநபராக இருந்தபோதும் அரச சாட்சியாக மாறுவதற்கான மன்னிப்பு அடிசனல் சொலிஸ்ரர் ஜெனரலால் வழங்கப்பட்டிருந்தது.
கான்ஸ்ரபிள் சமரவிக்கிரம: அன்றைய தினம் மாலை 2 மணிக்கு அந்த காவலரணுக்கு வருமாறு இராசபக்ச அழைத்தார். கிருசாந்திக்கு புலிகள் அமைப்புடன் தொடர்புகள் உண்டா என விசாரிக்குமாறு கேட்டார். அவரது வாய்க்கட்டை நீக்கி “புலிகளுடன் தொடர்பு உண்டா?” எனக்கேட்டார். அதற்கு அவர் இல்லை எனக்கூறி “எங்களை இப்படி ஏன் நடத்துகிறீர்கள்? உங்களை நம்பித்தானே இங்கு வந்தோம்” எனக்கேட்டார். அதற்கு “இந்தப்பெண் கத்துகிறாள்” இனிமேல் கதைக்கவேண்டாம் என போகச்சொன்னான் இராசபக்ச.
3 மணியளவில் அந்த தாயும் இருவரும் கிருசாந்தியை தேடிவந்தனர். 6 மணியளவில் இவர்கள் அனைவரும் தொடர்ந்து தடுத்துவைத்திருக்கப்படுவது தெரிந்தது. அதனை அடுத்த காவலரணில் உள்ள அசோகாவிற்கு சொன்னேன். அவனும் வந்து இவர்களை விடுதலை செய்யும்படி கேட்டோம். அதற்கு மறுத்த இராசபக்ச, ஏற்கனவே இதுபற்றி இராணுவ பொலிசுக்கு அறிவித்துள்ளதாகவும் எங்களை செல்லுமாறும் சொன்னான். அடுத்த நாட்காலை அந்த நால்வரும் கொல்லப்பட்ட செய்தி அறிந்தேன்.
அப்துல் அகமட் நசார்: (இவருக்கும் நிபந்தனை மன்னிப்பு அற்றோணி ஜெனரலால் வழங்கப்பட்டிருந்தது. அன்றைய நாள் சமரவிக்கிரமவுடன் பணியாற்றவே இவரது கடமை) இரவு 10 மணிக்கு இராசபக்சவின் காவலரணுக்கு சென்றேன். உள்ளே கிருசாந்தி இருப்பதையும் கண்டேன். நான் மீள எனது காவலரணுக்கு திரும்பிச்செல்ல எண்ணும்போது பிரதீப் வாளியில் தண்ணீருடன் வந்து தன்னுடன் வரும்படி அழைத்தான். அங்கு சென்றபோது பிரதீப் விசில் அடித்தான். இன்னொரு பதில் விசில் வந்தது. அங்கு சென்றபோது அங்கு 2 அல்லது 3 பேர் கிருசாந்தியுடன் நிற்பதை கண்டார். அவர்கள் யாரென தெரியாது. (20 நாட்கள் அந்தப்பகுதியில் கடமையில் நின்றவன். தெரியாதென்கின்றான்) மற்றவர்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறிய பின்னர் தண்ணீர் வாளியை வைத்துவிட்டு என்னை வீதிக்கு போகச்சொல்லிவிட்டு கிருசாந்தியை நோக்கி சென்றான். பத்து நிமிடங்களுக்குள் திரும்பிவந்தவன் “எனது வேலையை முடித்துவிட்டேன். உனக்கு தேவை என்றால் நீ போ” என சொன்னான். நசார் கிருசாந்தியை நோக்கி சென்றான். நசீர் தமிழில் பேசியபோது தனக்கு தண்ணீர் தரும்படி கேட்டாள். வாளியில் தண்ணீரை கொடுத்தேன். இரண்டு கைகளாலும் அள்ளி குடித்தார். கிருசாந்தி அனுங்கி கொண்டிருந்தார். ஒருவன் வந்து சத்தம்போட்டு போகச்சொன்னான். அதனைக்கேட்டு போகும்போது இராசம்மா நிலத்தில் கிடப்பதை கண்டேன். சிறிது நேரத்தில் கிருசாந்தியை இருவர் காவலரணை நோக்கி கொண்டுவந்தனர். (அந்த இருவர் யார் என்றோ அந்த கத்தியவன் யார் என்றோ தனக்கு தெரியாது என்றான்) அதன் பின்னர் இராசம்மாவை 4 அல்லது 5 பேர் புதைத்தனர். அவர்களுடைய ஆயுதங்களை அதுவரை வைத்திருக்க சொன்னார்கள். இந்த விடயத்தை ஒருவருக்கும் சொல்ல கூடாது என இராசபக்ச சொன்னான். நள்ளிரவு 12 மணிக்கு எனது காவலரணுக்கு சென்றேன்.
xxxx xxxx xxxx xxxx
இதில் பிரதான குற்றவாளியான இராசபக்ச தன்மீது குற்றம் காணப்பட்டு விட்டது என்பதை உணர்ந்த பின்னர் தான் இப்படி பல குற்றங்கள் நடக்கிறது எனவும் தனக்கு மேல் அதிகாரிகளால் சொல்லப்பட்டதையே செய்தேன் என சொன்னான். இதனால் தான் மற்றைய சடலங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
இவனது வாக்குமூலத்தின் பின்னர் அமைச்சர் ஒருவர் அவனை மிரட்டி வாக்குமூலம் தவறு என சொல்ல சொன்னான். சிறையில் இவன் மீது கொலை தாக்குதல் முயற்சி நடத்தப்பட்டது.
இந்த காலப்பகுதியில் யாழ் குடாநாட்டு டிவிசன் படையதிகாரியாக இருந்தவர் பிரிகேடியர் ஜானக பெரரோ. பின்னாளில்மேஜர் ஜெனரலாக வந்தவர். ஜெயசிக்குறு படைநடவடிக்கைக்கு பொறுப்பாகவும் இருந்தவர். அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவில் இராணுவ பயிற்சி பெற்றவர்.
அவர் ஓய்வுபெற்றபின்னர், அவுஸ்திரேலியாவுக்கான சிறிலங்கா தூதுவராக நியமிக்கப்பட்டவர். அதனை எதிர்த்து அவுஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து வாழ் தமிழ் மக்கள் பெரியளவினானஆர்ப்பாட்டங்களை செய்திருந்தனர். அதன் பின்னர் உள்நாட்டு அரசியலில் பங்குகொண்டஒருபொழுதில் குண்டுத்தாக்குதலில் ஜானக பெரேரோவும் அவரது மனைவியும் பலியாகினர். அதில் குற்றஞ்சாட்டப்பட்ட சுதாகரன் தற்போது 20 வருட தடுப்புக்காவலில் இருக்கின்றார்.
கிருசாந்தியும் ஏனைய இருவரும் புதைக்கப்பட்ட இடத்தில் தேடப்பட்டபோது கண்டெடுக்கப்பட்ட நான்கு உடலங்களை உறவினர்கள் அடையாளம் காட்டியபோது எந்த விசாரணையும் செய்யப்படாமல் சந்திரிகா அரசால் மூடி மறைக்கப்பட்டது.
விசாரணை நடைபெற்ற காலப்பகுதியில் இரவில் செம்மணி பகுதிகளில் எரியூட்டல்கள் நடைபெற்றன. இவை புதைக்கப்பட்ட சடலங்களை எடுத்து எரிப்பதாகவே நம்பப்பட்டது.
*****
செம்மணியில் கிருசாந்தி மற்றும் அங்கு கொல்லப்பட்டவர்கள் நினைவாக ஒரு தூபி அமைக்கப்படவேண்டும்.
தகவல் – Schoolgirl Rape & Four Murders Ver menos