இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளிலுள்ள மாநிலம் மணிப்பூர் ஆகும். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்கூட மணிப்பூரை அவர்கள் தங்களது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரவில்லை.
மன்னர் ஆண்ட ஒரு பகுதியாக மணிப்பூர் சுதந்திரத்துடன் செயல்பட்டது. 1949ஆம் ஆண்டில்தான் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. 1972ஆம் ஆண்டில் மணிப்பூர் தனி மாநிலத் தகுதி பெற்றது. இங்கு பெரும்பாலான மக்கள் பேசும் மணிப்பூரி மொழி இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மொழியாக 1992ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.
மணிப்பூர் பதற்றம் நிறைந்த எல்லை மாநிலமாக விளங்குகிறது. இந்திய குடிமக்கள் அல்லாதவர்கள் இம்மாநிலத்திற்குள் செல்வதற்கு இந்திய அரசின் அயல் நாட்டினர் பதிவு வட்டார அலுவலகத்தில் நுழைவு அனுமதிச் சீட்டுப் பெறவேண்டும். அவ்வாறு அனுமதி பெற்றவர்கள் 10 நாள்களுக்கு மட்டுமே அங்கு தங்கலாம்.
இந்தியாவின் மிக ஏழ்மையான மாநிலங்களில் மணிப்பூர் மூன்றாவது இடத்தை வகிக்கிறது. இங்கு வாழும் மக்களில் 37% மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்றனர். குறைந்தபட்ச தனி நபர் வருமானத்தில் இம்மாநிலம் தென்னாசிய நாடுகளிலேயே மிகவும் பின்தங்கிய மாநிலமாக உள்ளது. சமவெளிப் பகுதியோடு ஒப்பிடுகையில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள் மலைப் பகுதியில் உள்ள குக்கி இனத்தவரே அதிகமாக உள்ளனர்.
குக்கி இன மக்கள் வாழும் மலைப் பகுதியில் ஒரேயொரு பல்கலைக்கழகம் மட்டுமே உள்ளது. ஆனால், மெய்தி மக்கள் வாழும் சமவெளிப் பகுதியில் 7 பல்கலைக்கழகங்கள் உள்ளன. இதன் விளைவாக குக்கி பழங்குடி மக்கள் கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ளனர்.
இங்கு மெய்தி, குக்கி ஆகிய இரண்டு இனங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்கிறார்கள். குக்கி இன மக்கள் பழங்குடியினர் என அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பெரும்பாலோர் கிறித்துவ சமயத்தைச் சேர்ந்தவர்கள். மெய்தி இன மக்கள் தங்களுக்கும் பழங்குடி தகுதி வழங்கப்படவேண்டும் என போராட்டம் தொடங்கினர். மெய்தி மக்கள் சனமகி என்னும் சமயப் பண்பாட்டினைக் கொண்டவர்கள். கடந்த 300 ஆண்டு காலத்திற்கு மேலாக இந்தப் பண்பாட்டிற்கேற்ப அவர்களின் வழிபாடுகள் நடைபெற்றன. ஆனால், இந்தப் பண்பாட்டில் இந்து மத பழக்கவழக்கங்களும், சம்பிரதாயங்களும் சிறிது சிறிது கலக்கப்பட்டன. ஆர்.எஸ்.எஸ். பஜ்ரங்கதள் என்னும் அமைப்புகளே இதற்குக் காரணமாகும்.
மெய்தி – குக்கி இன மக்களுக்கிடையே சமய ரீதியிலான மோதல் மட்டுமல்ல மற்றொரு முக்கியமான காரணமும் உண்டு. குக்கி இன மக்கள் வாழும் மலைப் பகுதியில் ஏராளமான கனிம வளங்கள் புதைந்து கிடக்கின்றன. அவற்றை சுரண்டிக் கொள்ளையடிப்பதற்கு பெரும் முதலாளிகளும் மற்றும் வெளிநாட்டு முதலாளிகளும் விரும்புகின்றனர். ஆனால், குக்கி மக்களின் ஒப்புதலும், ஓத்துழைப்பும் இல்லாமல் கனிம வளங்களைச் சுரண்ட முடியாது. அவர்கள் இதற்கு எதிராகப் போராடுகிறார்கள். எனவே மெய்தி இன மக்களுக்கும் பழங்குடி தகுதி வழங்கப்பட்டால் இவர்களும் மலைப்பகுதியில் நிலங்களை வாங்கிக் குடியேற முடியும். எனவே இவர்களின் ஆதரவுடன் கனிம வளங்களைச் சுரண்ட முடியும் என்ற உள்நோக்கத்துடன்தான் மெய்தி இன மக்களுக்குப் பழங்குடியினர் தகுதி வழங்கவேண்டும் என்ற போராட்டம் திட்டமிட்டுத் தொடங்கப்பட்டிருக்கிறது.
“பா.ச.க.வைச் சேர்ந்த மெய்தி இன சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் இந்திய உள்துறை அமைச்சர் அமித்சாவுக்குப் பின்வரும் வேண்டுகோளை விடுத்தனர். மணிப்பூர் காவல்துறையின் தலைமை இயக்குநர் மற்றும் உயர் அதிகாரிகளாக உள்ள குக்கி இனத்தைச் சேர்ந்தவர்களை உடனடியாகப் மே 3 ஆம் நாளுக்கு முன்னதாகவே பதவி நீக்கம் செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்” என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதன்படி காவல்துறையின் தலைமை இயக்குநராக இருந்த டவுன் ஜெல் என்பவர் அப்பதவியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டார். மற்றும் குக்கி இனத்தைச் சேர்ந்த உயரதிகாரிகள் பலரும் மாற்றப்பட்டனர். இதெல்லாம் முன்னதாகவே திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கடந்த மே 3 ஆம் நாள் மெய்தி இன மக்கள் தலைநகரமான இம்பாலில் நடத்திய பேரணியின் போது வழியில் இருந்த காவல் நிலையங்களைத் தாக்கி அங்கிருந்த துப்பாக்கிகளை கைப்பற்றிச் சென்றனர். இதைத் தடுக்க காவல்துறை முன்வரவில்லை. மணிப்பூரில் பா.ச.க. ஆட்சி நடப்பதால் இந்த கலவரம் அதன் பின்னணியுடன் நடைபெறுகிறது. பேரணி சென்ற வழிநெடுக இருந்த குக்கி இன மக்கள் வீடுகள், கடைகள் தாக்கப்பட்டு எரிக்கப்பட்டன. குக்கி இன மக்கள் பலர் கொல்லப்பட்டனர். கடந்த 3 மாதங்களாக இந்தக் கலவரங்கள் தொடர்ந்து நடந்தும், அவற்றை அடக்குவதற்கு இந்திய அரசின் காவல் படையோ அல்லது இராணுவமோ அழைக்கப்படவில்லை. கடந்த 19ஆம் நாளன்று குக்கி இனத்தைச் சேர்ந்த இரு பெண்களை ஆடையின்றி ஊர்வலமாக மெய்தி இன வெறியர்கள் கொண்டு சென்ற காட்சி காணொளித் தளங்களில் பரவி இந்தியாவெங்கிலும் மட்டுமல்ல, உலகெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனால், இந்த உண்மையை வெளி உலகிற்குத் தெரிவித்தவர்களைப் பழிவாங்கும் நோக்குத்துடன் மணிப்பூர் அரசு செயல்படுகிறது. குக்கி பழங்குடிப் பெண்கள் ஆடையின்றி இழுத்துச் செல்லப்பட்ட காட்சியை காணொளிப் படமாக எடுத்து வெளியிட்டவரை உடனடியாகக் கைது செய்தது. படமெடுக்க உதவிய அவரது கைப்பேசியும் பறிமுதல் செய்யப்பட்டது. பழங்குடிப் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமை குறித்த விசாரணை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், மணிப்பூர் வன்முறையோடு தொடர்புடைய 6 வழக்குகள் ஏற்கெனவே சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஆனால், ஒரு வழக்கில் கூட யாரையும் சி.பி.ஐ. கைது செய்யவில்லை.
கடந்த 3 மாதங்களாகத் தொடர்ந்து கலவரங்கள் நடைபெற்று வருகின்றன. குக்கி இனத்தைச் சேர்ந்தவர்களின் பள்ளிக்கூடங்கள், அங்கன் வாடிகள், மருத்துமனைகள் ஆகியவை தீ வைத்து அழிக்கப்பட்டன. 300 க்கும் மேற்பட்ட கிறித்துவ தேவாலயங்கள் தாக்கப்பட்டு அவற்றில் பல தேவாலயங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. இந்த 3 மாத கலவரங்களின் போது உயிரிழந்தவர்கள், வீடுகளை இழந்து புலம்பெயர்ந்தவர்கள் ஆகியோரின் எண்ணிக்கைகள் குறித்தோ மற்ற விவரங்களையோ குறித்தோ மாநில அரசு அதிகாரப்பூர்வமான அறிக்கையை இன்றுவரை வெளியிடவில்லை.
மாநில முதலமைச்சர் என். பிரேன் சிங் இக்கலவரத்திற்குப் பின்னணியில் மறைமுகமாக செயல்படுகிறார் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உண்டு. மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த மெய்தி இன அமைச்சர்களும் பா.ச.க. தலைவர்களும், தொண்டர்களும் வெளிப்படையாகவே இக்கலவரத்திற்கு ஆதரவாகச் செயல்படுகின்றனர்.
வன்முறையால் பாதிக்கப்பட்ட 60 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் சுகாதாரமற்ற முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குப் போதிய உணவோ அல்லது மருந்துகளோ வழங்கப்படவில்லை. மாநிலமெங்கும் இணைய வசதி முடக்கப்பட்டுள்ளது. மாநிலமெங்கும் ஊரடங்கு போடப்பட்டிருக்கிறது. ஆனாலும் வன்முறைகளைத் தடுக்கவோ அல்லது கலவரக்கும்பலைக் கைது செய்யவோ மாநில காவல்துறை முன்வரவில்லை.
“மணிப்பூர் கலவரம் குறித்து தலைமையமைச்சர் மோடி அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என நாடாளுமன்றத்தில் தொடர்ந்து பல நாட்களாக எதிர்க்கட்சியினர் போராடி வருகிறார்கள். ஆனாலும் நாடாளுமன்றத்திற்கு வெளியே கூட்டங்களில் பேசுகிற தலைமையமைச்சர் மோடி நாடாளுமன்றத்திற்குள்ளே வந்து பேசுவதற்கு மறுக்கிறார்.
எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு நிலைமையை ஆராய்வதற்காக மணிப்பூருக்குச் சென்றுள்ளது. மணிப்பூர் கலவரம் குறித்தும், இந்திய அரசின் செயலற்றத் தன்மை குறித்தும் உலகமெங்கும் கண்டன குரல்கள் எழுந்துள்ளன.
மணிப்பூரில் தமிழர்கள்
மணிப்பூர் மாநிலத்தில் நீண்ட காலமாக தமிழர்கள் குடியேறி வாழ்ந்து வருகிறார்கள். பர்மா என்ற மியான்மர் நாட்டிலிருந்து இராணுவ ஆட்சியினால் வெளியேற்றப்பட்ட தமிழர்கள் அங்கு வணிகத்தில் ஈடுபட்டு வாழ்கின்றனர். ஏறத்தாழ 20,000 தமிழர்கள் அங்கு இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ள, அவர்கள் நிலை குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்திய தலைமையமைச்சர் மோடி அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பெரும்பாலான தமிழர்கள் மணிப்பூர் மாநிலத்தில் மோரே என்னும் நகரத்தில் வாழ்ந்து வருகிறார்கள். இதுவரை அவர்களுக்கு பாதிப்பேதும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது. ஆனாலும் எந்த நேரம் என்ன நடக்குமோ? என்ற அச்சத்துடன் அவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
பழ. நெடுமாறன்