புற்றிலிருந்து, ஆமைகள் இனித்
தலை நீட்டும்.
வழக்கம் போலவே,
ஆயிரம் அற முட்டைகளையும்
குழி தோண்டிப் புதைக்கும்.
தூர்வாரித் தந்த கழிசடைகளை விட்டுவிட்டு
துணிந்து குதித்தவன் பற்றிப் புறணி பாடும்.
மாறி மாறிச் சேறடித்து நாறும்.
தண்ணீரில் மிதந்து மிதந்து விளையாடி
தத்துக்க பித்துக்க வகுப்பெடுக்கும்.
எல்லாப் பூசைகளும் முடிந்த பிறகு
ஓடிவந்து மணி கிலுக்கும்.
கள்வர் பெருமக்களுக்காக
பாட்டுப் பாடி கும்மியடிக்கும்.
வெங்கிணாந்திச் சனம்
எல்லாவற்றையும் வெள்ளி பார்க்கும்.
தலையை விட்டுவிட்டு
வாலைப் பிடித்தபடி தொங்கும்.
சுழியன்களே மீண்டும் வெல்வார்கள்.
எல்லாத் தடயங்களையும்
அழித்துக் கொண்டு,
மாலையும் கழுத்துமாக அவர்களே மீண்டும் பல்லிளிப்பார்கள்.
மறதிக்குப் பிறந்த சனங்கள்
மீண்டும் மீண்டும் ஏமாறும்.
ஒவ்வொன்றாக,
எல்லாப் பிடிகளையும் இழந்து,
தம் தலையில் தாமே மண்ணள்ளிப் போடும்.
பிறகு, கடைசியாய் …
கனடா விசாவுக்கு காத்திருக்கும்.
லண்டன் போய், சுவிஸ் போய்
லாச்சப்பலில் கூடி நின்று கதைக்கும்.
விழாக்கள் என்றதும்,
வீதி வீதியாய் பறையடிக்கும்.
“வீறு கொண்டெழுவோம்” என்று
பரத நாட்டியம் ஆடும்.
காசு பெருகப் பெருக,
கண்மண் தெரியாமல் கழண்டாடும்.
ஆசை வழிய வழிய
ஐம்பது வயசிலேறி நின்று கேக் வெட்டும்.
பிறகு,
வைக்கேசனில் வந்து (vacation)
கோயில் திருவிழாவிற்கு
ஒரே நிறத்தில் உடுப்பு போட்டு
கலர் காட்டும்.
போகும் போது மறவாமல்,
பாரைக் கருவாடும்,
தேன் போத்தலும் வாங்கி
பார்சலில் அடைந்து கொண்டு போகும்.
பிறகு,
தாய்நிலமே! என்சனமே! என
கண்ணீர் வடியக் கவிதை எழுதும்.
*“சீ தமிழ் ” இல், ஒரு சின்னச் சிறுக்கி
“விடை கொடு ” பாடி நடிப்பாள்.
எல்லா ஆமைகளும்,
புல்லரித்துப் புல்லரித்து அழும்.
சுடலை ஞானிகள் விசும்புவார்கள்.
பிறகு …
பிறகென்ன பிறகு ?
தீபிகா