தேர்தல் பேரம் பேசும் அரசியலினூடாக எதையும் தமிழ் மக்கள் சாதிக்கப்போவதில்லை என்பதை கடந்த தேர்தல்களின் ஊடாக வரலாற்று பாடத்தை நாங்கள் கற்றுக்கொண்டுவிட்டோம். அந்த அடிப்படையில் சிங்கள தலைவர்களிடம் ஏமாறியது போதும் என்ற ரீதியில் தான் தமிழர் தாயகத்தில் இருக்கின்ற கட்சிகளும் சிவில் சமூகத்தவர்களும் இணைந்து ஒரு பொது கட்டமைப்பை உருவாக்கி அதனூடாக பொது வேட்பாளராக என்னை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தியிருக்கிறார்கள். இணைந்த வட – கிழக்கு மக்கள் ஒருமித்து ஒரு சக்தியாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பதன் மூலம் சர்வதேசத்துக்கும் இலங்கையின் ஆட்சியாளர்களுக்கும் ஒரு தீர்க்கமான செய்தியை கொடுக்க முடியும். இனியும் தமிழ் மக்களை ஏமாற்றமுடியாது, அவர்களுக்கான தீர்வை வழங்கியே ஆக வேண்டுமென்ற செய்தியை கொடுக்கின்ற அதேவேளை, இனியும் சிங்கள தலைவர்களை நம்பி அவர்களுக்கு வாக்களிக்கமாட்டோம் என்ற செய்தியையும் தமிழ் மக்கள் வழங்க வேண்டும் என தமிழ் பொது வேட்பாளராக களமிறக்கப்பட்டிருக்கும் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஏற்கனேவே அரசியலமைப்பில் இருக்கின்ற 13 ஆவது திருத்த சட்டத்தையே கொடுப்பதற்கு எந்த ஆட்சியாளர்களும் தயாராயிருக்கவில்லை. பேசி பேசி காலத்தை இழுத்தடித்தார்களே தவிர, தமிழ் மக்களுக்கு ஒரு சிறு தீர்வை கொடுப்பதற்கு கூட அவர்கள் முன்வரவில்லை. 2015 இல் ஏற்படுத்தப்பட்ட நல்லாட்சி அரசாங்கத்தில் எதிர்க்கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு இருந்தபோதிலும் கூட, குறிப்பாக அரசாங்கத்துடன் இணக்கமாக செயற்பட்ட போதிலும் கூட தமிழர்களுக்கு ஒரு தீர்வை தர அவர்கள் முன்வந்திருக்கவில்லை.
எனவே தேர்தல் பேரம் பேசும் அரசியலினூடாக எதையும் நாங்கள் சாதிக்கப்போவதில்லை என்பதை கடந்த தேர்தல்களின் ஊடாக வரலாற்று பாடத்தை நாங்கள் (தமிழர்கள்)கற்றுக்கொண்டுவிட்டோம். அந்த அடிப்படையில் ஏமாறியது போதும் என்ற ரீதியில் தான் தமிழர் தாயகத்தில் இருக்கின்ற கட்சிகளும் சிவில் சமூகத்தவர்களும் இணைந்து ஒரு பொது கட்டமைப்பை உருவாக்கி அதனூடாக ஒரு பொது வேட்பாளரை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தியிருக்கிறார்கள்.
அதனூடாக பல அரசியல்வாதிகள் அரசாங்கத்தின் அடிவருடிகளாக இருந்துகொண்டு தங்களுடைய சுயநல அரசியலை முன்னெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இதன் மூலமாக மக்கள் எந்த நன்மையையும் பெற்றதாக இல்லை. பல வருடங்களாக மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரையை மீட்பதற்காக அப்பிரதேச மக்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். அதேபோல், கல்முனை பிரதேச செயலகத்துக்கு ஒரு கணக்காளரை கூட நியமிக்க முடியாது அந்த போராட்டம் தொடர்ந்தவண்ணம் உள்ளது. இவ்விரு விவகாரங்களும் மக்கள் சார்ந்த பிரச்சினைகள். இவற்றைக் கூட தீர்த்துவைக்க முடியாது அரசாங்கத்துடன் தொங்கி கொண்டு இருக்கும் தலைவர்கள் தங்களுடைய அரசியல் பிழைப்பை நடத்துவதற்கு தேர்ந்தெடுத்த ஆயுதமே பிரதேசவாத அரசியல். இது தமிழினத்துக்கு ஆரோக்கியமான அரசியல் அல்ல. வடக்கு-கிழக்கு மக்கள் இவ்வாறான பிடிகளுக்குள் அகப்பட்டுவிடக்கூடாது.
தமிழ் மக்கள் நீண்டகாலமாக சமஷ்டி தீர்வையே வேண்டி நிற்கிறார்கள். 13 ஆவது திருத்தம் என்பது ஏற்கனவே இலங்கையின் அரசியலமைப்பில் இருக்கின்ற ஒரு விடயம். அதனை ஒரு இரவில் சர்வாதிகாரம் கொண்ட ஒரு ஜனாதிபதியால் அமுல்படுத்த முடியும். ஆனால் 13 தான் தமிழ் மக்களுடைய தீர்வு என்றும் அதனை ஒரு பூதாகாரமான விடயமாக சிங்கள மக்களுக்கு காட்டி அதனை பேசி பேசியே அரசியல் செய்யும் சிங்கள தலைவர்களிடத்திலிருந்து தமிழ் மக்கள் எதனை பெற முடியும் என சிங்கள தரப்புகளின் பின்னால் செல்லும் தமிழ் தலைவர்கள் சிந்திக்கிறார்கள் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. ஆகவே சிங்கள தலைவர்களின் இவ்வாறான பேச்சுக்களை நம்புவதற்கும் அவர்களுடைய அருவருடிகளாக இயங்கும் தமிழ் தலைவர்களின் பேச்சுக்களை, வாக்குறுதிகளை நம்புவதற்கு தமிழ் மக்கள் முட்டாள்களல்ல.
எனவே இனியும் தமிழ் மக்களை முட்டாள்களாக்க முடியாது என்பதை எதிர்வரும் 9 ஆவது ஜனாதிபதி தேர்தல் மூலம் தமிழ் மக்கள் அந்த கடமையை ஒட்டுமொத்தமாக உணர்த்துவார்கள். அந்த கடமை ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்கிறது. இதுவரை காலமும் தமிழ் மக்கள் ஜனநாயக ரீதியில் போராடியிருக்கிறார்கள், ஆயுதம் ஏந்தி போராடியிருக்கிறார்கள். இன்று புதியதொரு போராட்டத்துக்கு தமிழ் மக்கள் முகம்கொடுக்கவிருக்கிறார்கள். அதாவது எதிர்வரும் தேர்தலில் வாக்களிக்கும் போராட்டத்தை செய்யவிருக்கிறார். அந்த போராட்டத்தில் தமிழ் மக்கள் வென்றே ஆகவேண்டுமென்ற ஒரு அவசியம் ஏற்பட்டிருக்கிறது. அதனை அவர்கள் சிறப்பாக செய்வார்கள்.
இந்த தேர்தலில் ‘தமிழ் பொது வேட்பாளர்’ என்பவர் வென்றால் ஜனாதிபதி கதிரையில் அமரப்போவதில்லை. ஆனால், இந்த வெற்றி தமிழர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பதை கூறும் செய்தியாக இருக்கப்போகிறது. அதேபோல், அவர்கள் (தமிழர்கள்)தங்களுடைய உரிமை, அரசியல் தீர்வில் இன்றும் ஒருமித்த கொள்கையுடன் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பதை சர்வதேசத்துக்கும் இலங்கையின் ஆட்சியாளர்களுக்கும் ஒரு ஆணித்தரமான செய்தியை கூறவிருக்கிறது. அதனூடாக எங்களுடைய (தமிழர்கள்)நகர்வுகளுக்கு சாதகமான சமிக்ஞைகள் உருவாகும்-உருவாக்கப்படும்.
2009 இற்கு பின்னரான காலகட்டத்தில் தமிழ் தேசிய கட்சிகள் சிதறுண்டு பரவிக்கிடக்கின்றன. ஒரு தலைமை என்ற நிலைமை மாறி பல தலைமைகள் என்ற சூழல் உருவாகியிருக்கிறது-உருவாக்கப்பட்டிருக்கிறது. எனவே தமிழ் தேசிய கட்சிகள் ஒரு குடையின் கீழ் உருவாவதற்கான ஒற்றுமை இந்த தேர்தலில் தமிழ் மக்கள் ஒருமித்து வாக்களிப்பதன் ஊடாக ஏற்படும். அதேபோல் தமிழ் தேசிய அரசியலை ஒரு குடையின் கீழ் கொண்டுவருவதற்கும் இந்த தேர்தல் ஒரு வாய்ப்பாக இருக்கும். எனவே இந்த தேர்தலில் தமிழ் மக்கள் ஒருமித்து வாக்களிப்பதன் ஊடாக தமிழ் தேசத்தின் பல தலைவிதிகள் மாற்றப்படும் என்பது மறுக்கமுடியாத உண்மை. அதற்கு வடக்கு-கிழக்கு தமிழ் மக்கள் ஒன்றுதிரண்டு பொதுக்கட்டமைப்பின் தீர்மானத்துக்கு அமைய அணிதிரள்வது அவசியமாகும்.
பதில்: தமிழரசுக் கட்சிக்குள் இரு பிரிவுகள் என்ற சூழல் ஏற்பட்டது. அண்மையில் நடந்த தலைமைக்கான போட்டியின் பின்னரே தலைமைக்கான தெரிவு தொடர்பில் நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் எந்தவொரு முடிவையும் மத்திய குழுவில் ஒற்றுமையாக எடுக்கமுடியாத நிலைமை தொடர்ந்தும் இருந்துகொண்டிருக்கிறது. தன்னிச்சையாக கருத்துக்களை கூறுகின்ற விடயம், தன்னிச்சையாகா முடிவுகளை எடுத்துவிட்டு அது கட்சியின் முடிவு என்று வெளியில் கூறுவது என தனிமனித போக்கு தமிழரசு கட்சிக்குள் அண்மைக்காலமாக இருந்துவருகிறது.
உண்மையில் நான் தமிழரசுக்கட்சிக்குள் இருந்து கொண்டு பொது வேட்பாளராக வரவில்லை. நான் பொதுவேட்பாளராக வந்ததன் நோக்கம் என்னவென்றால், தந்தை செல்வாவின் கொள்கையின்பால் -தந்த செல்வா என்ன நோக்கத்திற்காக இந்த கட்சியை உருவாக்கினாரோ அவருடைய நோக்கத்தின் அடிப்படையில்தான் நான் பொது வேட்பாளராக களமிறங்கியதை பார்க்கிறேன். அதேபோல், இதனை தமிழரசு கட்சிக்கு கிடைத்த பெருமையாகத்தான் நான் பார்க்கின்றேன். தமிழரசு கட்சிக்குள் இருந்துகொண்டு நான் பொதுவேட்பாளராக களமிறங்கியது தவறு என்று அந்த கட்சி சார்ந்த சிலர் விமர்சித்தாலும் நான் அவ்வாறு பார்க்கவில்லை. தமிழரசு கட்சி என்ன நோக்கத்துக்காக ஆரம்பிக்கப்பட்டதோ அந்த நோக்கம் இந்த பொது வேட்பாளர் விடயத்திலும் இருக்கிறது என்பதை உணர்ந்தே இந்த தெரிவுக்கு நான் விரும்பி சம்மதித்தேன்.
நான் அவ்வாறு செய்யவில்லை. தமிழ் தேசியத்துக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் நான் எடுத்திருக்கின்ற முடிவுக்காக என்னிடம் விளக்கம் கோருவது எந்த அடிப்படையில் என்பதை தமிழ் மக்கள் தான் சிந்திக்கவேண்டும். கட்சியை சிதைத்தவர்களிடத்தில் எந்த விளக்கமும் கோராமல், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுவிட்டு தமிழ் தேசியத்துக்காக களமிறங்கியிருக்கும் என்னிடத்தில் விளக்கம் கோருகிறார்கள் என்றால் அவர்களுடைய திட்டம், மனநிலை எப்படிப்பட்டது என்பதை மக்கள் தான் புரிந்துகொள்ளவேண்டும். அவர்கள் (மக்கள்)தான் இதற்கு தக்க பதிலை வழங்கவேண்டும்.
தமிழரசு கட்சி இதுவரை பொதுவேட்பாளரை ஆதரிக்க வேண்டுமென்றோ ஆதரிக்க கூடாது என்றோ முடிவெடுக்கவில்லை. அல்லது சிங்கள வேட்பாளர் ஒருவரை ஆதரிக்கவேண்டுமென்று முடிவெடுக்கவில்லை. இப்படியிருக்கையில் ஏற்கனவே ஒரு முடிவை கட்சி எடுத்துவிட்டு அதனை அறிவித்த பின்னர் நான் இந்த முடிவை எடுத்திருந்தால் அது தவறு என்று நான் ஏற்றுக்கொள்வேன்.
ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற முடிவை எடுக்கமுடியாத ஒரு சூழலில்தான் இதுவரை தமிழரசு கட்சி இருந்துவருகிறது. நான் என்னமோ சிங்கள தரப்புடன் இணைந்து போட்டியிடுவது போன்று என்னிடம் விளக்கம் கேட்பது மிகவும் வருத்தம் தரும் விடயமாக இருக்கிறது. தமிழ் மக்கள் தான் இது தொடர்பில் உணர்ந்துகொள்ள வேண்டும். 2004 ஆம் ஆண்டு முதல் தமிழரசு கட்சியில் இருப்பவன் என்ற அடிப்படையில் விளக்கம் கூற வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. அதனை நான் செய்வேன். ஆனால் சிலர் செய்யும் பெரிய தவறுகளை பொருட்படுத்தாமலும் என்னை போன்ற தவறே செய்யாத ஒருவருக்கு எதிராக கருத்துக்கள் தெரிவிப்பதும் தமிழரசு கட்சிக்கு ஆரோக்கியமான விடயமாக இருப்பதாக நான் கருதவில்லை.
பொதுக்கட்டமைப்புக்கு எதிராக – தமிழ் தேசிய கொள்கையை மழுங்கடிப்பதற்காக – இந்த நோக்கத்தை குழப்பி திசைதிருப்புவதற்காக திட்டமிட்டு செய்யப்படுகின்ற ஒரு விமர்சனமாகவே இதனை நாங்கள் பார்க்கின்றோம். என்னை பொருத்தமட்டில் நான் வேட்பாளராக களமிறங்கினாலும் நான் தமிழ் தேசிய அரசியலை முன்னிறுத்துவதற்கும் அதனை பாதுகாத்து அடுத்த கட்டத்துக்கு கொண்டுசெல்வதற்கும் பொது கட்டமைப்பினை வலுப்படுத்துவதற்குமான ஒரு அடையாளமாகவே நான் இருக்கிறேன். என்னுடைய பணி என்னவென்றால் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி வெளியாகவிருக்கின்ற மக்களின் ஆணையின் பிரதிபலிப்பை பொதுக்கட்டமைப்பிடம் கொடுப்பது மாத்திரமே. அதன்பின்னரான நடவடிக்கைகளை பொதுக்கட்டமைப்பு தான் தீர்மானிக்கும். நான் எடுத்துக்கொண்ட பணி என்பது செப்டம்பர் 22 ஆம் திகதி வரை மாத்திரமே.
கேள்வி: பொதுக்கட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தென்னிலங்கையின் வேட்பாளர்கள் தொடர்ந்தும் அழைப்பு விடுத்து வருவதை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?
பதில்: தமிழ் தேசிய அரசியலில் தாய் கட்சியாக இருப்பது தமிழரசு கட்சி. அந்த அக்கட்சி முடிவெடுக்காமல் திண்டாடுகிறதென்றால் அது கவலைக்குரிய விடயமாகும். விரும்பியவர்களுக்கு வாக்களிக்கலாம் என தமிழரசு கட்சியின் மூத்த உறுப்பினர் சி.வி.கே சிவஞானம் அவர்கள் கூறியிருக்கிறார். இன்னொருவர் கூறுகிறார் தேர்தலுக்கு முதல் நாள் முடிவை அறிவித்தாலும் பரவாயில்லை என்று. ஆகவே, இவ்வாறான தெளிவற்ற கதைகள்-பேச்சுக்கள் மக்களை குழப்புகின்ற மக்களை முட்டாள்களாக்குகின்ற கருத்தாகவே நான் பார்க்கிறேன்.
பொறுப்பு வாய்ந்த ஒரு கட்சி இந்த நிலைமைக்கு வந்திருப்பது பெரும் கவலைக்குரியது.
கேள்வி: பொது வேட்பாளர் என்ற அடிப்படையில் மக்களுக்கு நீங்கள் கூறும் செய்தி என்ன?
பதில்: விடுதலை போராட்டத்தை எடுத்துக்கொண்டால் புலம்பெயர்ந்த தமிழர்களும் அதில் பங்கெடுத்தவர்கள். அவர்கள் அச்ச சூழ்நிலைகளால் புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளில் வாழ்ந்துவருகிறார்கள். அதேபோல், ஈழத்திலும் விடுதலைப்போராட்டத்தில் பங்கெடுத்த பலர் இருக்கிறார்கள். அவர்கள் பல இன்னல்களுக்கு முகம்கொடுத்து இருக்கின்ற அதேவேளை, இன்றும் தங்களுடைய உறவுகளை தேடிக்கொண்டிருக்கிறார்கள். இத்தனை துன்பங்களை அனுபவித்த போதிலும் எங்களுக்கான உரிமை இதுவரை கிடைக்கவில்லை. 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை தமிழர்கள் இழந்திருக்கிறார்கள். இத்தனை உயிர்களை காவுகொடுத்தும் எங்களுக்கான உரிமை, தீர்வு இன்னும் எட்டாக்கனியாகவே இருக்கிறது.
ஆகவே, எனவே எமக்கான தீர்வு என்பது சர்வதேசத்தின் ஊடாகவே அமையும் என்ற ஒரு முடிவுக்கு தமிழ் மக்கள் வந்திருக்கிறார்கள். எனவே காத்திரமான இராஜதந்திர முறையில் தான் எங்களுடைய தீர்வை நாங்கள் பெற்றுக்கொள்ளமுடியும். ஆகவே அந்த இராஜதந்திர ரீதியான பங்களிப்பில் புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கும் உரிமை இருக்கிறது. அவர்களும் அதில் பங்காளர்களாக இருக்கவேண்டும். இதுவரை காலமும் எவ்வாறு தமிழர்களுடைய விடுதலைக்காகவும் உரிமைக்காகவும் புலம்பெயர்ந்த தேசங்களிலிருந்து பங்களித்தார்களோ அதே பங்களிப்பு இனியும் தொடர வேண்டும்.
ஆகவே ஈழத்தமிழர்கள் தங்களுடைய உரிமைகள் – தீர்வுத்திட்டத்தில் இன்னும் உறுதியாக இருக்கிறார்களா அல்லது சிங்கள ஆட்சியாளர்கள் பக்கம் சோரம் போய் விட்டார்களா என்ற செய்தியை இந்த தேர்தலின் ஊடாக காட்டவேண்டிய தேவை தமிழ் மக்களுக்கு இருக்கிறது. எனவே தமிழ் மக்கள் தங்களுடைய உறுதியான பயணத்தை மீண்டும் நிரூபித்துக்கொள்வதற்கும் இன்னும் தமிழ் மக்கள் தங்களுடைய உரிமையிலும் தீர்விலும் திடமாக இருக்கிறார்கள் என்பதை சர்வதேசத்துக்கு இலங்கையின் ஆட்சியாளர்களுக்கு பல குரலில் ஒரு செய்தியை கூறுவதற்கு இந்த தேர்தலை பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்பதுடன், புலம்பெயர்ந்த உறவுகளும் இந்த பயணத்தில் தங்களுடைய காத்திரமான பங்களிப்பை வழங்க வேண்டுமென கேட்கிறேன்.
ந.லெப்ரின்ராஜ்