மனுக்குல மீட்பரின் சிலுவை மரணம் – புனித வெள்ளி

உலகளாவிய ரீதியில் அனைத்து கிறிஸ்தவர்களும் துக்க நாளாக பெரிய வெள்ளியை அனுஷ்டிக்கின்றனர். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதையும் கல்வாரியில் அவர் சிந்திய இரத்தத்தையும் நினைவுகூரும் நாள் இதுவாகும். அதன்படி இந்த வருடம் ஏப்ரல் 18 ஆம் திகதி புனித வெள்ளியாக அனுஷ்டிக்கப்படுகிறது.

கிறிஸ்தவர்கள் மட்டில் இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணம் என்பது அவர், மனுக்குலத்துக்காக, மக்கள் செய்த பாவங்களுக்காக, தன்னையே, தன் உயிரையே தியாகம் செய்து மனுக்குலத்தை மீட்டு இரட்சித்தார் என்பதால் இது கடவுளுக்கும் மனிதனுக்குமான நல்லிணக்கத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. இதுவே இத் தியாகத் திருநாள் Good Friday பெரிய வெள்ளி என நினைவு கூரப்படுகிறது.

புனிதவெள்ளி நாளில் கிறிஸ்தவ மக்கள் தங்களுக்கு முடியுமான ஒருத்தல்களையும் செப முயற்சிகளையும் பின்பற்றுவர். ஒரு சிலர் அசைவ உணவுகளை தவிர்த்து சைவ உணவுகளை மட்டும் எடுத்துக்கொள்வர். இன்னும் சிலர் முழு நாளும் உணவுண்ணாமல் உபவாசம் இருப்பர். தங்கள் உடல் நிலைக்கு ஏற்றவாறு ஒருத்தல்களில் ஈடுபடுவார்கள்.

இந்த புனித நாளில் கிறிஸ்தவர்கள் ஆலயங்களுக்கு சென்று ஜெபம், பாடல்கள், ஆராதனை போன்றவற்றை முன்னெடுப்பார்கள். அதன்படி புனித வெள்ளிக்கென்று சில முக்கிய பிரார்த்தனை நிலைகள் காணப்படுகின்றன. அவையாவன,

சிலுவை நிலை

சிலுவையின் 14 நிலைகளில் சிலுவைப் யாத்திரை செய்து பிரார்த்தனை செய்வதும் பிரதிபலிப்பதும் இதில் அடங்கும், இது இயேசுவின் பாடுகள் மரணம் ஆகியவற்றை நினைவுபடுத்துகின்றது. ஒவ்வொரு நிலையும் இயேசுவின் கல்வாரிப் பயணம் மற்றும் அவர் செய்த தியாகங்களை தியானிக்க சந்தர்ப்பம் அளிக்கிறது, அவருடைய துன்பத்திற்கும் அன்பிற்கும் ஒரு ஆழமான தொடர்பை வளர்த்துக் கொள்கிறது.

சிலுவை வணக்கம்

சிலுவை இயேசுவின் தியாகம் மற்றும் அன்பின் சக்தி வாய்ந்த அடையாளமாகக் காணப்படுகிறது. இந்த விழாவின் போது, விசுவாசிகள் பெரும்பாலும் சிலுவையை முத்தமிடுவார்கள். இயேசுவின் இறுதி தியாகத்திற்கு தங்கள் பயபக்தியையும் நன்றியையும் வெளிப்படுத்துகிறார்கள்.

புனித வெள்ளி பிரார்த்தனை

இந்த சிறப்பு பிரார்த்தனை புனித வெள்ளி அன்று நினைவு கூரப்படுகிறது, தனக்கும் மற்றவர்களுக்கும் மன்னிப்பு மற்றும் கருணையை கேட்கும் பிரார்த்தனை. இது ஆழ்ந்த மனத்தாழ்மை மற்றும் பிரதிபலிப்பின் ஒரு தருணம், மனித பலவீனத்தை ஒப்புக்கொள்வது மற்றும் கடவுளின் கிருபையைத் தேடுவது இப் பிரார்த்தனையில் அடங்கும்.

ஏழு கடைசி சொற்கள்

இயேசுவின் ஏழு கடைசி வார்த்தைகளை பிரதிபலிப்பதை உள்ளடக்குகிறது, அவை அவருடைய போதனைகள் மற்றும் செய்தியின் சுருக்கமாகக் கருதப்படுகின்றன. சிலுவையில் இருந்து இயேசு பேசும் ஒவ்வொரு சொற்றொடரும் அவருடைய அன்பு, மன்னிப்பு மற்றும் மனித குலத்திற்கான அர்ப்பணிப்பு பற்றிய ஆழமான நுண்ணறிவுகளை வழங்குகிறது.

இந்த நடைமுறைகள் விசுவாசிகளுக்கு புனித வெள்ளிக்கிழமையின் முக்கியத்துவத்துடன் இன்னும் ஆழமாக இணைக்க உதவுகின்றன, இயேசுவின் தியாகத்திற்கு பிரதிபலிப்பு, தவம் மற்றும் நன்றியுணர்வு ஆகியவற்றின் உணர்வை வளர்க்கின்றன.

இப் புனித நாளில் இயேசுகிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை மட்டும் நினைவுகூராமல் அவர் நமக்கு கற்றுக்கொடுத்த படிப்பினைகள், போதனைகளையும் கடைபிடிப்பதற்கான தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும்.

சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு நடந்த இயேசுவின் சிலுவை மரணத்தை இன்று வரையில் புனிதமாகக் கடைபிடிக்கும் வழக்கமானது அவரது பாடுகள், மரணத்துக்கான ஒரு சிறிய காணிக்கை என்று கூறலாம்.

புனித வெள்ளிக்கு முதல் நாளான புனித வியாழன் தினத்தன்று இயேசுக் கிறிஸ்துவின் இறுதி இராப் போசணம், கால்களை கழுவுதல் போன்ற சடங்குகளை கிறிஸ்தவர்கள் நினைவு கூருகிறார்கள். எனவே புனித வியாழன் தொடக்கம் உயிர்த்த ஞாயிறுக்கு இடைப்பட்ட தினங்கள் மிகவும் புனிதமானவையாக கருதப்படுகின்றன.

இப் புனித நாட்களை உண்மையான புனித நாளாக அனுஷ்டிக்க வேண்டுமாயின் மனதளவில் தங்களைத் தாமே தூய்மைப்படுத்திக்கொள்ள வேண்டும். உண்மையான இறை நம்பிக்கையுடன் இயேசு கிறிஸ்துவின் பாடுகளை நினைத்து மனமுருகி, அவரது போதனைகளை தலையாய கடமையாக ஏற்றுக்கொண்டு தங்களை கடவுளுக்கு அர்ப்பணிக்கும் நாள் இது.

அன்பு, இரக்கம், கருணை, மன்னிப்பின் திருவுருவான இயேசுகிறிஸ்துவின் பாடுகள் மற்றும் மரணத்தை நினைவுகூறும் இப் புனிதவெள்ளியை தூய்மையான மனதுடன் அனுஷ்டிப்போம்.