ரணிலின் ”சடுகுடு” அதிரடிகளில் சிக்குப்படும் சிங்கள தலைகளும் தள்ளாடும் தமிழ்த் தேசியமும்!

அரசியல் ரணிலுக்கு ஒரு விளையாட்டு. எப்போது எந்தக் காயை எங்கே நகர்த்துவது என்பது அவரது ரணத்தில் ஊறிய கலை. முன்னாள் பொலிஸ்காரரான தற்போதைய ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் ரங்கே பண்டாரவை வைத்து இப்போது புது நாடகத்தை ஆரம்பித்துள்ளார். இது வென்றாலென்ன தோற்றாலென்ன, ரணிலின் இலக்குக்கு இது வெற்றியே.

ரணில் விக்கிரமசிங்கவின் தந்திரோபாய அரசியல் விளையாட்டின் இன்னொரு கட்டம் இப்போது ஆரம்பமாகியுள்ளது. ஜனாதிபதி தேர்தல் அதிகாரபூர்வ அறிவிப்புக்கு முன்னரான இடைக்கால அதிரடி என்றும் இதனைச் சொல்லலாம்.

ரணிலைத் தலைவராகக் கொண்ட ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார திடுதிப்பென, தமது சொந்தக் கருத்து போன்று பகிரங்கமாகத் தெரிவித்த விடயமே இப்போதைய ரகளைக்குக் காரணம்.

இந்த வருடத்தில் நடைபெறவேண்டிய ஜனாதிபதி தேர்தலையும் அடுத்தாண்டு நடுப்பகுதிக்குள் இடம்பெறவேண்டிய நாடாளுமன்றத் தேர்தலையும் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி இரண்டு வருடங்களுக்கு பின்போடலாம் என்ற கருத்தை ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். இந்த அறிவித்தலைத் தமது தனிப்பட்ட அபிப்பிராயம் போன்றே இவர் வெளியிட்டிருந்தாலும், ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளராக இவர் இருப்பதால் அந்தத் தொப்பியுடன் ஊடகங்களில் இவரது அறிக்கை வெளியானது.

இவரது அறிவித்தல் வந்த வேகத்தைவிட, இதற்கான எதிர்ப்புகள் பல முனைகளிலிருந்தும் சினைப்பர் வேகத்தில் வந்தன. ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர்களும் இதில் அடங்குவர். ரங்கே பண்டாரவின் இரு வருட நீடிப்பு ஆலோசனை வெளியான சில மணித்தியாலங்களில் நூற்றுக்கணக்கான தொலைபேசி அழைப்புகள் ரணிலுக்குப் பறந்தன. அனேகமாக சகல அரசியல் கட்சியினரும் அவருடன் உரையாட ஆவல்பட்டனர்.

‘ரங்கே பண்டாரவின் அறிவிப்புப் பற்றி ஐக்கிய தேசிய கட்சிக்கு எதுவும் தெரியாது. அந்த அறிவிப்பை கட்சி நிராகரிக்கிறது. அப்படியான எந்த முன்னெடுப்பையும் ரணில் விக்கிரமசிங்க மேற்கொள்ளவில்லை. ஜனநாயக விழுமியங்களின்படி அவர் நடந்து கொள்வார்” என்று ஜனாதிபதி சார்பில் பொதுவான ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது.

மறுபக்கத்தில் ரங்கே பண்டார சும்மா இருக்கவில்லை. அவர் சும்மா இருக்கக்கூடிய பேர்வழியும் அல்ல. அரசியலுக்கு வருவதற்கு முன்னர் பொலிஸ் உத்தியோகத்தராகக் கடமையாற்றியவர். ‘சர்வதேச நாணய வங்கி, உலக வங்கி மற்றும் கொடையாளிகள் இலங்கையில் பொருளாதார முன்னேற்றம் கருதியே உதவுவார்கள். இதுவே இன்று முக்கியம். நாடு பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மை அடையும்வரை இரண்டு தேர்தல்களையும் பின்போடலாம். இதற்காக சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவது ஜனநாயக வழிமுறை” என்பது ரங்கே பண்டார தெரிவித்துவரும் கருத்து.

1977ம் ஆண்டில் ஆட்சியைக் கைப்பற்றி 1978ல் ஜனாதிபதியாகத் தம்மைத் தாமே அமர்த்திய ஜே.ஆர்.ஜெயவர்த்தன, 1982ல் நடைபெறவிருந்த ஜனாதிபதி தேர்தலையும், 1983ல் நடைபெறவிருந்த நாடாளுமன்றத் தேர்தலையும் சர்வஜன வாக்களிப்பின் வாயிலாக பிற்போட்டார். இதனை ஞாபகத்தில் வைத்து ஜே.ஆரின் பெறாமகன் முறையான (மச்சாளின் மகன்) ரணிலையும் தற்போதைய நாடாளுமன்றத்தையும் மேலும் இரண்டாண்டுகளுக்கு தொடர வைக்க முயற்சி எடுத்திருக்கிறார் ரங்கே பண்டார. அன்று ஜே.ஆருக்கு நாடாளுமன்றத்தில் ஆறில் ஐந்து பெரும்பான்மை இருந்ததையும், இன்று ரணில் பொதுஜன பெரமுனவின் ஆதரவிலேயே ஜனாதிபதி கதிரையில் தொங்கியிருப்பதையும் ஏனோ ரங்கே பண்டார மறந்துவிட்டார்.

இவர் முன்வைத்திருக்கும் ஆட்சி நீடிப்பு தொடர்பாக ஜனாதிபதியின் ஆலோசகரான ஆசு மாரசிங்க தமது கருத்தை வெளியிட்டுள்ளார். ‘தேசத்தின் ஸ்திரத்தன்மைக்கான ஒரு கருத்தையே ரங்கே பண்டார முன்வைத்துள்ளார். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் திங்கட்கிழமை அவர் விபரித்துக் கூறவிருக்கிறார். இவரது கருத்தை பலரும் தவறாக விமர்சிக்கிறார்கள். இருக்கக்கூடிய ஒரு வழிமுறையை மட்டுமே அவர் கூறியுள்ளார். ஒளிமயமான எதிர்காலத்துக்கு இது ஒரு வழி. மக்கள் மூன்றுவேளை உணவையும், நியாயமான விலையில் அத்தியாவசிய பொருட்களையுமே கேட்கிறார்கள். தேர்தலைக் கேட்டு அவர்கள் வீதியில் இறங்கவில்லை” என்பது ரங்கே பண்டாரவின் கருத்தை நியாயப்படுத்தும் ஜனாதிபதியின் ஆலோசகரின் கூற்று.

இவ்வகையான ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான அறிவிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கையில் மறுபக்கப் பார்வைகளும் தாராளமாகக் காணப்படுகிறது. இதனை கூர்ந்து கவனிக்கின் இதன் பின்னாலுள்ள புதிர்களும் எழும்பவிருக்கும் பன்முகக் கேள்விகளும் வெளிச்சத்துக்கு வரும்.

ஜனாதிபதி தேர்தல் நடைபெற வேண்டிய காலவரம்பை தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது. அனேகமாக எதிர்வரும் அக்டோபர் 17ல் இது நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், நிறைவேற்று அதிகாரபூர்வ ஜனாதிபதி தேர்தலை இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. அவர் போட்டியிடுவது பற்றியும் அறிவிப்பு வரவில்லை. ஆனால், அவர் போட்டியிடுவார் என்ற நம்பிக்கையளிக்கும் செயற்பாடுகள் அதன் சாத்தியத்தை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த சில வாரங்களாக அவர் மேற்கொண்டு வரும் உள்நாட்டு சூறாவளிப் பயணங்கள் இதற்கு நல்ல சான்று.

இலவச அரிசி வழங்கல், உறுமய என்ற பெயரில் பொதுமக்களுக்கு காணிப்பத்திரங்கள் வழங்குதல், மாவட்ட ரீதியாக பல்வேறு அபிவிருத்தி வேலைகளுக்கு கோடிக் கணக்கில் நிதி வழங்கும் அறிவிப்பு போன்ற இவரது செயற்பாடுகள் தேர்தலை நோக்கியே என்பது தேர்தல் கண்காணிப்புக் குழுவின் குற்றச்சாட்டு.

தேர்தல் பிரகடனம் இன்னமும் வெளிவராததால் இப்போதைய ஜனாதிபதியின் பணிகளை தேர்தலுடன் இணைத்துப் பார்க்கக்கூடாது என்பது ஜனாதிபதியின் ஆலோசகர் ஆசு. மாரசிங்கவின் பதில். சட்டப்படி இவர் கூறுவது சரியானாலும், நடைமுறையில் தேர்தலுக்கான இலவசங்களாக இவைகள் மேற்கொள்ளப்படுகின்றன  என்பதை மறைக்க முடியாது.

அரசியலில் இது சாதாரணமென ஒருபுறம் விட்டாலும் ரங்கே பண்டாரவின் தேர்தலை பின்போட விரும்பும் ஆலோசனையை வெறுமனேயே ஒருபுறம் ஒதுக்கிவிட்டு தொடர முடியாது. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணிலுக்குத் தெரியாமல் இவ்வாறான ஒரு முன்னெடுப்பை ரங்கே பண்டார எடுத்திருக்கமாட்டார் என்று நிச்சயமாக சொல்ல இடமுண்டு. ரணில் அமைதியாக ஓர் எறியில் பல காய்களை வீழ்த்தும் போக்கில் இவ்விடயத்தை கையாளுகிறார் என்றே சொல்ல வேண்டும்.

ரங்கே பண்டாரவின் முன்னெடுப்புக்கு ரணில் அங்கீகாரம் வழங்குவதற்கு பல காரணங்கள் உண்டு. பொதுவாக அரசியலில் இவ்வாறான முன்னெடுப்புகளை நாடிபிடித்துப் பார்க்கும் ஒரு நடவடிக்கை என்பார்கள். ஆதரவு கிடைத்தால் அதனை தொடரலாம். இல்லையெனில் அதனை தாம் நிராகரிப்பதாகக் கூறி, தம்மை ஓர் உண்மையான ஜனநாயகவாதியாக படம் காட்டுவது இதன் முதலாவது அம்சம்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக மற்றைய கட்சிகள் ஆரம்பித்திருக்கும் துரித பரப்புரைகளையும், கட்சிகளின் கூட்டிணைவுகளையும் திடுதிப்பாக திசை திருப்பி அவர்களின் தேர்தல் முன்னெடுப்புகளை மூழ்கடித்து வைக்கும் தந்திரோபாய முயற்சிகளில் இது ஒன்று என்பது அடுத்தது.

அடுத்தாண்டு பொதுத்தேர்தலில் வெற்றி பெறும் சாத்தியமில்லையென கருதும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர்களின் பதவிக் காலத்தை நீடிக்க வைத்தால் அவர்களை தம்பக்கம் இணைத்து ஜனாதிபதி தேர்தலில் தமது ஆதரவுத் தளத்தை மேலும் அதிகரிக்கச் செய்யலாம் எனும் எதிர்பார்ப்பு இன்னொன்று. (ஜனாதிபதித் தெரிவு நாடாளுமன்ற வாக்களிப்பில் ரணிலை எதிர்ப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்தபோதிலும், சில பலாபலன்கள் கருதி கூட்டமைப்பின் எம்.பிக்கள் சிலர் ரகசியமாக ரணிலை ஆதரித்து வாக்களித்தமை இதற்கு நல்லதொரு உதாரணம்.)

தேர்தலை பிற்போடும் காலத்தில் தங்கள் வலைக்குள் அகப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வரியற்ற வாகன இறக்குமதி லைசென்ஸ், மதுபான விற்பனை நிலைய லைசென்ஸ் என்பவைகளை கையூட்டாக வழங்கி காரியத்தைச் சாதிக்கலாமென்று நினைப்பது மற்றொன்று. இவ்வாறு பல வழிகளில் காரியங்களை வெற்றியாக்க முடியும். இவைகளை உணர்ந்து ஜனநாயக விழுமியத்துக்கு அமைய தேர்தல்களைப் பின்போடும் விடயத்தை ரங்கே பண்டார நாடாளுமன்றத்தில் விபரிக்க அனுமதிப்பதனூடாக ரணில் அன்ட் கம்பனியின் உள்நோக்கத்தை உணர்ந்துகொள்ள முடிகிறது.

ரணிலின் மாயவலைக்குள் தமிழ்த் தேசியம் என்ற போர்வையில் நடமாடும் மக்கள் பிரதிநிதிகளும் வீழ்ந்துவிட்டதை ரணிலின் அண்மைய வடக்கு விஜயத்தின்போது நேரில் பார்க்க முடிந்தது. தமிழர்களின் பிரச்சனை அரசியல் தீர்வல்ல – அபிவிருத்தியே அவர்கள் வேண்டுவது என்று செல்லுமிடமெங்கும் கூறி வந்த ரணிலை பின்தொடர்ந்த மக்கள் பிரதிநிதிகள் அவர் அருகிலிருந்து ஒளிப்படம் எடுப்பதில் தங்கள் கவனத்தை முழுமையாக்கினர்.

தமிழர்களின் பிரதிநிதிகள் என்று கூறுபவர்களின் தலையை ரணில் எவ்வாறு சுற்றினார் என்பதற்கு இரண்டு உதாரணங்கள். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்றப் போவதாக ரணில் அறிவித்தார். இது போதாதென்று வவுனியா வைத்தியசாலையை போதனா வைத்தியசாலையாக்கப் போவதாகவும் அறிவித்தார்.

மாகாண சபைத் தேர்தல்களை விரைவாக நடத்த வேண்டுமென்று கூவிக் கூவி கேட்டுவரும் தமிழ்த் தேசிய பிரதிநிதிகள், மாகாண சபைகளின் கீழ் இயங்க வேண்டிய வைத்தியசாலைகளை எவ்வாறு லாவகமாக மத்திய அரசாங்கத்தின் கீழ் ரணில் கொண்டு செல்கிறார் என்பதை புரியாமல், தமிழர் பிரதேச அபிவிருத்தியில் தொடர்ந்து ரணில் தொடர்ந்து செயற்பட வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்ததை என்னென்று சொல்லலாம்.

காணி அதிகாரம் மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் என்று ரணில் கூறிவர, மறுதரப்பில் அதே வாரம் படையினருக்கு காணிகளை வழங்குவதற்கு அரசாங்க அதிகாரிகள் அளவீடு செய்ய செல்வதும் பொதுமக்கள் அதனை எதிர்த்து போராடுவதும் அவர்களது நாளாந்த போராட்டமாக மாறிவருகிறது.

சுருக்கமாகச் சொல்லப்போனால் ரணிலின் சடுகுடு அரசியல் அதிரடிகள் அவரது பாணியில் தொடர்கிறது. சிங்களத் தலைமைகள் அதற்குள் சிக்குப்பட்டு மீளுவதற்கான வழி தேடி போராடுகின்றனர். தமிழ்த் தேசிய தலைவர்கள் அதற்குள் அகப்பட்டு தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர். இதுவே தொடர்கதையாகுமானால், தேர்தல்கள் என்பதும், மாகாண சபைகள் என்பதும் ரணிலின் விருப்பப்படியாகவே முடிவுபெறும்.

பனங்காட்டான்