வாக்களிக்க தயாரா?

10ஆவது பாராளுமன்றத்துக்கான தேர்தல் வாக்களிப்பு 14ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல்கள் ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை செய்யப்பட்ட நிலையில் 8000 க்கும் அதிகமான வேட்பாளர்கள் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக்குழுக்கள் சார்பில் தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.  பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசார பணிகள் யாவும் திங்கட்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைந்தன.

9ஆவது பாராளுமன்றத்துக்கான தேர்தல் கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி நடைபெற்றது. அந்தவகையில் 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் காணப்படுகிறது. எனினும், பாராளுமன்றத்தை குறிப்பிட்ட காலப் பகுதிக்கு பின்னர் கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் காணப்படுகிறது. அந்த அடிப்படையில் தற்போதைய ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது.

பாராளுமன்றத்துக்கு 225 உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படுவார்கள். அதாவது 196 பேர் நேரடியாக வாக்குகள் ஊடாகவும் 29 பேர் தேசிய பட்டியல் ஊடாகவும் தெரிவு செய்யப்படுவார்கள். பாராளுமன்றத் தேர்தலானது 2024ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்புக்கு அமையவே நடைபெறும். அதன்படி கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு தகுதி பெற்ற ஒரு கோடியே 71 இலட்சத்து 40 ஆயிரத்து 354 பேர் இம்முறை பாராளுமன்றத் தேர்தலிலும் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். இம்முறை பாராளுமன்றத் தேர்தல் தீர்க்கமானதாக அமையும். ஜனாதிபதித் தேர்தலின் பின்னர்  மிக விரைவாக பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது.

கட்டாயம் வாக்களிக்கவேண்டும் 

எப்படியிருப்பினும் பாராளுமன்றத் தேர்தலில் வாக்காளர்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும். தேர்தலில் மக்கள் தமது ஜனநாயக உரிமையை பிரயோகிப்பது அவசியமாக இருக்கின்றது. நாடொன்றில் சகலருக்கும் பொறுப்புக்கூறல்கள் காணப்படுகின்றன. அதாவது, மக்களால் தெரிவு செய்யப்படுகின்ற பிரதிநிதிகள் இந்த நாட்டை பொறுப்புக்கூறலுக்கு உட்பட்டு நிர்வகிக்க வேண்டும்.

அதாவது எப்போதுமே தாம் தமது கடமை தொடர்பாக மக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்ற சிந்தனை மக்களினால் தெரிவு செய்யப்படுகின்ற பிரதிநிதிகளுக்கு இருக்க வேண்டும். அதேபோன்று மக்களுக்கும் பாரியதொரு பொறுப்பு காணப்படுகிறது. அதாவது, தகுதியான பிரதிநிதிகளை பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்து அனுப்ப வேண்டிய பொறுப்பு வாக்காளர்களுக்கு இருக்கின்றது. அதற்கு வாக்காளர்கள் தமது வாக்குகளை பயன்படுத்த வேண்டும்.

காரணம் அடுத்த ஐந்து வருடங்களுக்கு இந்த நாட்டின் தலைவிதியை 10ஆவது பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட போகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களே தீர்மானிப்பார்கள். சட்டங்களை இயற்றுதல், திட்டங்களை வகுத்தல்,  உள்ளிட்ட பாரிய பொறுப்புக்கள் பாராளுமன்றத்துக்கு காணப்படுகின்றது. எனவே, அதற்கு ஏற்றவகையில் தகுதியான உறுப்பினர்களை தெரிவு செய்ய வேண்டும். அந்தப் பொறுப்பு சகல வாக்காளர்களுக்கும் இருக்கிறது.

இருவழிப் பாதை

இது இருவழிப் பாதை. அதாவது வாக்காளர்களுக்கும் பொறுப்புக் கூறல் உள்ளது. அதேபோன்று வாக்காளர்களினால் தெரிவு செய்யப்படுகின்ற பிரதிநிதிகளுக்கும் சரியான முறையில் செயற்படுகின்ற பொறுப்புக்கூறல் இருக்கின்றது. எப்படியிருப்பினும் மக்கள் தேர்தல் வாக்களிப்பில் கட்டாயம் பங்கேற்பதுடன் தமது ஜனநாயக உரிமையை வெளிப்படுத்துவது முக்கியமானதாக காணப்படுகிறது.

வாக்களிக்க செல்லும் போது…

இந்நிலையில் பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பது எப்படி என்ற தெளிவை வாக்காளர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். அதேபோன்று வாக்களிப்பதற்கு எவ்வாறு தயாராகுவது என்பதும் முக்கியமாகும். முதலில் வாக்களிக்க செல்லும் மக்கள்   வாக்காளர் அட்டைகளை கையுடன் எடுத்துச் செல்வது அவசியமாகும். வாக்காளர் அட்டை இன்றியும் வாக்களிக்கலாம். ஆனால் வாக்காளர் அட்டையை எடுத்துச் செல்வது வாக்களிப்பதற்கு இலகுவாக இருக்கும்.

அடையாள அட்டை கட்டாயம் 

அதேபோன்று வாக்காளர்கள் வாக்களிக்க செல்லும் போது தேசிய அடையாள அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும், தேசிய அடையாள அட்டை இல்லாவிடின் செல்லுபடியான கடவுச்சீட்டு, செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரம், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அடையாள அட்டை, முதியோர்களுக்கான அடையாள அட்டை, மதத் தலைவர்களுக்கான அடையாள அட்டை மற்றும் தேர்தல் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட  தற்காலிக அடையாள அட்டை என்பன ஏற்றுக்கொள்ளப்படும்.

பாராளுமன்ற தேர்தலில் வாக்களிப்பது எப்படி?

இதேவேளை பாராளுமன்றத் தேர்தலில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பது தொடர்பான தெளிவு மிக முக்கியமானதாக இருக்கின்றது. அதாவது வாக்குச் சீட்டில் அரசியல்கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் பெயர்கள் மேலிருந்து கீழாக வரிசைக் கிரமத்தில் இருக்கும். கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களுக்கு அருகில் அவர்களுக்கான சின்னங்கள் இருக்கும். மக்கள் தமக்கு விருப்பமான கட்சியின் சின்னத்துக்கு அருகில் இருக்கின்ற வெற்றுப் பெட்டியில் புள்ளடியிட்டு வாக்களிக்க முடியும்.

அதேபோன்று அதற்கு கீழே வேட்பாளர்களுக்கான விருப்பு வாக்கு இலக்கங்கள் இருக்கும். வாக்காளர்கள் தாம் வாக்களிக்கின்ற கட்சியின் மூன்று வேட்பாளர்களின் இலக்கங்களுக்கு மேலே புள்ளடியிட்டு தமது விருப்பு வாக்குகளை அளிக்க முடியும். கட்சிக்கு வாக்களித்து விட்டு விருப்பு வாக்கை அளிக்காமல் வந்தாலும் அந்த வாக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

ஆனால், கட்சிக்கு வாக்களிக்காது விருப்பு வாக்குகளின் இலக்கங்கள் மீது மட்டும் புள்ளடியிட்டால் அந்த வாக்கு நிராகரிக்கப்படும்.  அதேபோன்று ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகளுக்கு வாக்களித்தாலும் வாக்கு நிராகரிக்கப்படும்.   அதுமட்டுமன்றி வாக்குச் சீட்டில் வேறு எந்த விடயங்களையும் எழுதவோ கிறுக்கவோ கூடாது. அந்த வகையில் மக்கள் மிகத் தெளிவான முறையில் தமது வாக்கை பயன்படுத்தி வாக்களிப்பில் ஈடுபடுவது அவசியமாகிறது.

மக்களின் கடமை

அடுத்த ஐந்து வருடங்களுக்கு இந்த நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கின்ற 10ஆவது பாராளுமன்றத்தை தெரிவு செய்கின்ற உரிமை மக்களிடமே காணப்படுகிறது. எனவே, 10ஆவது பாராளுமன்றத்துக்கு தகுதியான உறுப்பினர்களை மக்கள் தெரிவு செய்ய வேண்டும். அரசியல் கட்சிகள், வாக்காளர்கள் முன்வைக்கின்ற கொள்கைகள், வேட்பாளர்களின் வாக்குறுதிகள் அவற்றின் செல்லுபடி தன்மை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை கருத்திற்கொண்டு வாக்காளர்கள் வாக்களிப்பில் ஈடுபட வேண்டும். வாக்களிக்க முடியுமான சூழல் நிலவும் போது மக்களை அதனை தவிர்க்கக் கூடாது.

இதேவேளை தேர்தல் அமைதியாகவும் வன்முறைகள், அழுத்தங்கள் இன்றியும் நடைபெறுவதை உறுதிப்படுத்துவது அவசியமாகும். அமைதியான அழுத்தங்களற்ற தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு முன்னெடுக்கின்ற நடவடிக்கைகளுக்கும் ஏற்பாடுகளுக்கும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டியது அரசியல்கட்சிகள், வாக்காளர்கள், வேட்பாளர்கள் உள்ளிட்ட சகலரதும் மிக முக்கியமான கடமையாக இருக்கிறது.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் மிக அமைதியான முறையில் வன்முறைகள் இன்றி, சுதந்திரமான தேர்தலுக்கு உதாரணமாக நடைபெற்றது. இலங்கைத் தேர்தல் வரலாற்றில் ஒரு தீர்க்கமான விடயமாக இது அமைந்தது. எனவே, இந்த முன்னுதாரணம் பாராளுமன்றத் தேர்தலிலும் வெளிக்காட்டப்பட வேண்டும்.

தலைவிதியை தீர்மானியுங்கள்

எனவே மக்கள் ஜனநாயக செயற்பாட்டில் பங்கெடுத்து நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கின்ற  தேர்தல் வாக்கெடுப்பில்  தமது பங்களிப்பை வழங்குவதுடன் அந்த ஜனநாயக செயற்பாட்டில் ஆர்வத்துடன் செயற்படுவது அவசியமாகின்றது. பிரதிநிதித்துவ ஜனநாயக முறைமையில் மக்கள் தமது பிரதிநிதிகளை பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்து அனுப்புகின்றனர்.  சகல மக்களாலும் நாட்டை ஆட்சி செய்ய முடியாது. அதனால், இந்த பிரதிநிதித்துவ ஜனநாயக முறைமை ஊடாக  மக்கள் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்கின்றனர்.

அந்த மக்களின் சார்பாக மக்களினால் தெரிவு செய்யப்படுகின்ற பிரதிநிதிகள் அவர்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையில் அடுத்த ஐந்து வருடங்கள் செயற்பட வேண்டும். இங்கு மக்களுக்கு இருக்கின்ற அந்த இறைமை, அதிகாரம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகிறது. அவர்கள் அந்த அதிகாரத்தைக் கொண்டு மக்களின் பிரதிநிதிகளாக நாட்டை நிர்வகிக்க வேண்டியிருக்கிறது. எனவே, இது சகல தரப்பினரதும் பங்களிப்புடன் நடைபெற வேண்டும்.

சமீபத்திய செய்திகள்