இரத்மலானை சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் மற்றும் கடந்த ஜனவரி 2026 இல் ஆரம்பிக்கப்பட்ட விமான நிலைய வசதிகள் வளாகத்தின் நிர்மாணப் பணிகளின் முன்னேற்றங்களை மீளாய்வு செய்வதற்காக துறைமுகங்கள் சிவில் விமான சேவைகள் மற்றும் எரிசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க களவிஜயமொன்றை மேற்கொண்டார்.
இலங்கையின் முதலாவது விமான நிலையமான இரத்மலானை விமான நிலையம் 1938 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டு தற்போது கிட்டத்தட்ட 90 வருடகால வரலாற்றை நெருங்கி வருகிறது.
நடப்பாண்டில் சுமார் 1900 விமான சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் அதில் 73 வீதமானவை பயிற்சி விமானங்களின் செயற்பாடுகளாகும். இவற்றுடன் 3600 உள்நாட்டு விமான சேவைகளும் மேற்கொள்ளப்பட்டன. கடந்த சில வருடங்களுடன் ஒப்பிடும்போது இது குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின்போது அமைச்சரும் அவரது குழுவினரும் வான் போக்குவரத்துக் கட்டுபாட்டு கோபுரத்திற்குச் சென்று தொடர்பாடல் உபகரணங்கள் மற்றும் தகவல் தொழிநுட்பக் கட்டமைப்புக்களை நவீனமயப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
பறக்கும் விமானங்களுடன் மேற்கொள்ளப்படும் தொடர்பாடல் சேவைகளுக்காக விமான கட்டணங்கள் மூலம் அரசாங்கத்திற்கு நாளொன்றுக்கு சுமார் 30 000 அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்படுகின்றது.
தொடர்ந்து விமான நிலைய ஓடுபாதையில் காணப்படும் குறைப்பாடுகள் மற்றும் அபிவிருத்தி தேவைகள் ஆராயப்பட்டன. அரசாங்கத்தின் 3.046 பில்லியன் ரூபா முதலீட்டில் நிர்மாணிக்கப்பட்டு வரும் நான்கு மாடிகளைக் கொண்ட புதிய விமான நிலைய வசதிகள் வளாகத்தின் நிர்மாணப் பணிகளையும் பிரதிநிதிகள் பார்வையிட்டனர்.
புதிய வான் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக் கோபுரத்தையும் உள்ளடக்கிய இந்த வளாகத்தின் நிர்மாணப் பணிகள் 2027 ஆம் ஆண்டு இறுதிப்பகுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரத்மலானை விமான நிலையத்துடன் இணைந்து 16 தனியார் விமானப் பயிற்சி நிறுவனங்கள் இயங்கி வருவதுடன் பைலட் மற்றும் விமானக் குழுவினர் பயிற்சி நெறிகள் உள்ளிட்ட துறைகள் சார்ந்து சுமார் 1000 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
குறித்த நிறுவனங்களின் நாளாந்த செயற்பாடுகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடர்பிலும் அமைச்சரும் அதிகாரிகளும் அவதானம் செலுத்தினர்.

