இறக்காமத்தில் சுற்றுலா நீதிமன்றம்: கலந்துரையாடி நடவடிக்கை – அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார
Ad Space
Ad Space
இறக்காமம் பிரதேசத்தில் சுற்றுலா நீதிமன்றம் அமைப்பது தொடர்பில் நீதிச்சேவை ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார்.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் பாராளுமன்ற ஆலோசனைக் குழுக் கூட்டம் அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கடந்த வார பிற்பகுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
அக்கூட்டத்தில் திகாமடுல்ல மாவட்ட எம்.எஸ். உதுமாலெப்பை இறக்காமம் பிரதேசத்தில் சுற்றுலா நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டிய அவசியத்தை முன்வைத்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
அம்பாறை மாவட்டத்தின் இறக்காமம் பிரதேசத்தில் சுமார் 18 ஆயிரம் மக்கள் வாழ்கின்றனர். அவர்களில் சுமார் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள்;. 12 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய இறக்காமம் பிரதேச செயலகம் 2012 ஆம் ஆண்டு வரை அக்கரைப்பற்று நீதி நிர்வாக வலயத்தின் கீழ் இருந்தது. பின்னர் எந்தவித அறிவிப்பும் இன்றி அம்பாறை நீதி நிர்வாக வலயத்துக்கு மாற்றப்பட்டது.
சிங்கள மொழியை நீதிமன்ற மொழியாகக் கொண்ட அம்பாறை நீதி நிர்வாக வலயத்தின் கீழ் இறக்காமம் பிரதேசம் இணைக்கப்பட்டதால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.
மேலும், நீதிமன்ற நடவடிக்கைகளில் தமிழிலிருந்து சிங்களத்துக்கும், சிங்களத்திலிருந்து தமிழுக்கும் மொழிபெயர்ப்பு செய்ய வேண்டிய நிலை காரணமாக வழக்குச் செலவுகள் அதிகரிப்பதோடு, பொதுமக்கள் மேலதிக பொருளாதாரச் சுமையை சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதே போன்று நீதிமன்ற நடவடிக்கைகளின் போது பெறுமதியான நேரமும் மொழிபெயர்ப்புக்காக வீணாகும் நிலை காணப்படுகிறது.
எனவே, தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக உள்ள இறக்காமம் பிரதேசத்தை மீண்டும் அக்கரைப்பற்று நீதி நிர்வாக வலயத்துடன் இணைக்க வேண்டும் அல்லது அப்பிரதேசத்தில் தனியான நீதிமன்றம் ஒன்றை அமைக்க வேண்டும் என நாம் ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளோம். இதன் மூலம் நீதிமன்ற நடவடிக்கைகள், காவல்துறை விசாரணைகள் மற்றும் வழக்கு நடவடிக்கைகள் தமிழ்மொழியில் மேற்கொள்ள இலகுவாக அமையும் என்றார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார,
இறக்காமம் பிரதேசத்தில் சுற்றுலா நீதிமன்றம் அமைப்பது தொடர்பான கடிதங்களின் பிரதிகளை வழங்குமாறு கேட்டுக்கொண்டதுடன், நீதிச்சேவை ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
Ad Space
Ad Space