அம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலையின் கண் அறுவை சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்படும் நோயாளர்கள், இலவசமாக வழங்கப்பட வேண்டிய கண் லென்ஸ்கள் கிடைக்காத காரணத்தினால் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  

அரச வைத்தியசாலைகளில் லென்ஸ்கள் கிடைக்காததன் காரணமாக, நோயாளர்கள் தங்களது சொந்த செலவில் வெளியிலுள்ள மருந்துச் சாலைகளில் இருந்து கிட்டத்தட்ட 40,000 ரூபா செலவிட்டு அவற்றை வாங்குவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த திடீர் மேலதிக செலவு கண் அறுவை சிகிச்சை செய்யவேண்டிய சாதாரண மக்களுக்கு பாரிய பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டு, பாதிக்கப்பட்ட நோயாளர்கள் சமூக வலைத்தளங்களிலும் தமது கவலைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அத்தியாவசிய மருத்துவப் பொருட்களுக்காக அரச மருத்துவமனை நோயாளர்கள் பெருந்தொகையான பணத்தை தங்களது சொந்தப் பணத்திலிருந்து செலவழிப்பதைத் தவிர்க்குமாறும், அம்பாந்தோட்டை மற்றும் ஏனைய அரச வைத்தியசாலைக்கு தேவையான கண் லென்ஸ்களை தடையின்றி விநியோகிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகத் தலையிட வேண்டும் என்றும் நோயாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.