முன்னாள் சபாநாயகரும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வலவிடம் பெறப்பட்ட இரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகளில், மதுபானம் அருந்தியதற்கான எந்தவொரு தடயங்களும் கண்டறியப்படவில்லை என அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அண்மையில் சப்புகஸ்கந்த, தெனிமுல்ல சந்தியில் அசோக ரன்வல பயணித்த ஜீப் வண்டி, மோட்டார் சைக்கிள் மற்றும் கார் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6மாதக் குழந்தை மற்றும் இரண்டு பெண்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அசோக ரன்வல மதுபானம் அருந்தியிருந்தாரா என்பதை உறுதிப்படுத்துவதற்காக இந்த மாதிரிகள் பெறப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நேற்று வெள்ளிக்கிழமை (19) தெரிவித்தார்.
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆய்வில், குறித்த வாகனத்தின் பிரேக் தொகுதியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறே விபத்துக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
இந்தச் சோதனையின் முடிவுகள் அவருக்குச் சாதகமாக வந்துள்ள போதிலும், விபத்து இடம்பெற்ற நேரத்தில் உரிய முறையில் கடமையைச் செய்யத் தவறிய பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




