களுத்துறை பிரதேசத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் பாணந்துறை தெற்கு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பாணந்துறை, முணவல்வத்த பிரதேசத்தில் வசிக்கும் 36 மற்றும் 26 வயதுடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவரே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களான சகோதரர்கள் இருவரும் போதைப்பொருள் குற்றம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பிணையில் விடுதலை செய்வதற்காக சகோதரர்கள் இருவரதும் தாயார் வீட்டை அடகு வைத்துள்ளார். இவ்வாறு அடகு வைத்த வீட்டை மீட்பதற்காக சகோதரர்கள் இருவரும் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனால், சகோதரர்கள் இருவரும் பாணந்துறை பிரதேசத்தில் வீதியில் பயணித்த பெண் ஒருவரிடம் இருந்தும் அலுபோமுல்ல பிரதேசத்தில் வீதியில் பயணித்த பெண் ஒருவரிடம் இருந்தும் தங்க நகைகளை கொள்ளையடித்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் பாணந்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





