அதிகபட்ச கடன்! வாகன இறக்குமதியிலும் மாற்றம்

இலங்கையின் வரலாற்றிலேயே அதிகபட்ச கடன் 2025 ஆம் ஆண்டில் செலுத்தப்பட்டுள்ளதாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குருநாகலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,2028 ஆம் ஆண்டில் அதிகபட்ச கடன் செலுத்தல் நிகழும் என்று பலர் கூறியபோதிலும், இலங்கையின் வரலாற்றிலேயே அதிகபட்ச கடன் 2025 ஆம் ஆண்டில் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், 2028 ஆம் ஆண்டில் செலுத்தப்பட வேண்டிய கடன் தொகையை விட இது அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2025-ஆம் ஆண்டில் 3900 மில்லியன் டொலர் கடன் தவணையை செலுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளது என்றும், ஆனால் 2028ஆம் ஆண்டில் 3.2 பில்லியன் டொலர் மாத்திரமே செலுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், 2025 ஆம் ஆண்டில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக 2100 மில்லியன் டொலர் முதல் 2200 மில்லியன் டொலர் வரை செலவிட்ட போதிலும், அரசாங்கத்தால் 1700 மில்லியன் டொலர் உபரியைப் பதிவு செய்ய முடிந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2025-ஆம் ஆண்டில் ஈட்டப்பட்ட $29,300 மில்லியனில் $27,600 மில்லியன் மட்டுமே செலவிடப்பட்டதால், அத்தகைய உபரி பதிவாகியுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.