அனர்த்த இழப்பீடு வழங்கலில் அரசியல் தலையீடு – சத்தியலிங்கம் குற்றச்சாட்டு

இயற்கை அனர்த்த பேரழிவுக்கான இழப்பீடுகளை வழங்குவதில் பாரிய குறைபாடுகள் காணப்படுவதுடன் பாரிய அரசியலும் அதற்குள் ஓடுகின்றது. பிரஜாசக்தி என்ற திட்டத்தின் ஊடாக முழுமையாக அரசியல்மயப்படுத்தப்பட்ட பல விடயங்கள் எமது மாவட்டங்களில் நடைபெறுகின்றன என இலங்கை தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர் ப. சத்தியலிங்கம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (19) நடைபெற்ற அனர்த்த நிவாரணங்களுக்கான குறை நிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

இலங்கைக்கு இது முதல் இயற்கைப் பேரழிவு அல்ல. கடந்த காலங்களில் பல இயற்கை பேரழிவுகள் நடந்துள்ளன. வறட்சி பேரழிவுகள், கொள்ளைநோய்கள், மண்சரிவுகள் வெள்ளங்கள், சுனாமி கூட ஏற்பட்டிருக்கிறது. இதனால் மக்கள் இறக்கின்றார்கள், காணாமல் போகின்றார்கள். வாழ்வாதாரம், உட்கட்டுமானம் அழிக்கப்படுகின்றது.

வன்னி தேர்தல் தொகுதியை  எடுத்துக்கொண்டால் ஜீவனோபாயம், விவசாயம், விலங்கு வேளாண்மை அழிந்துள்ளன.

மன்னார் மாவட்டத்தில் கிட்டத்தட்ட 15000 மாடுகள் அழிந்துள்ளன. 30000க்கு மேற்பட்ட கோழிகள் காணாமல் போயுள்ளன. 10000 ஆடுகள் இறந்துள்ளன. வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களிலும் இதே நிலைமை. இந்த ஒவ்வொரு மாவட்டத்திலும் 10000 ஏக்கருக்கு மேற்பட்ட வயல் நிலங்கள் முற்றாக அழிந்துள்ளன. வீடுகள் அழிந்துள்ளன. இலங்கை முழுவதும் இப்படியான பேரழிவு நடந்துள்ளது.

அண்மைய உலக வங்கியின் தரவுகளின்படி ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட 380 மில்லியன் டொலர் பேரிடர்களினால் அழிக்கப்படுகிறது. வெள்ளத்தினால் மட்டும் ஒவ்வொரு வருடமும் 240 மில்லியன் டொலர் செலவிடப்படுகின்றது. இதேவேளை இந்த அரசு தற்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்ல திட்டங்களை வழங்கியுள்ளது. பாராட்டுகின்றோம். அரசுடன் சேர்ந்து செயற்படவும் தயாராகவுள்ளோம்.

இதேவேளை இழப்பீடுகளை வழங்குவதில் பாரிய குறைபாடுகள் காணப்படுகின்றன. இழப்பீடுகளை  பதிவு செய்கின்ற, ஒழுங்கு செய்கின்ற அலுவலர்களின் பற்றாக்குறை முக்கிய காரணமாகவுள்ளது அதேநேரம் பாரிய அரசியலும் உள்ளுக்குள் ஓடுகின்றது. பிரஜாசக்தி என்ற திட்டத்தின் ஊடாக முழுமையாக அரசியல் மயப்படுத்தப்பட்ட பல விடயங்கள் எமது மாவட்டங்களில் நடைபெறுகின்றன. இவ்வாறான பல சம்பவங்களை  என்னால் பட்டியலிட முடியும். ஆனால் தற்போதைய  துயரமான சூழலில் அதனை கூற நான் விரும்பவில்லை.

2004இல் சுனாமி ஏற்பட்ட பின்னர் 2005ஆம் ஆண்டு 13ஆம் இலக்க இலங்கை பேரழிவு செயலாற்று சட்டம் என்ற ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டது. அந்த சட்டம்  அனர்த்த முகாமைத்துவ சபை 3 மாதங்களுக்கு ஒரு தடவை கூட வேண்டும் என்று சொல்கின்றது. அப்படியானால் இதுவரை 80 தடவைகள் அனர்த்த முகாமைத்துவ சபை கூடியிருக்க வேண்டும். ஆனால் 2018ஆம் ஆண்டு வரை 12 தடவைகள் மட்டுமே இந்த சபை கூடியுள்ளது. அதாவது வருடத்திற்கு ஒரு தடவையே கூடியுள்ளது. 2018ஆம் ஆண்டுக்கு பின்னர் 7 வருடங்கள் கழித்து கடந்த 8ஆம் மாதமே ஜனாதிபதி தலைமையில் கூட்டப்பட்டது.

பேரிடர்கள் தொடர்பில் நாம் எவ்வளவு தயார் நிலையில் இருந்திருக்கின்றோம் எனப் பார்த்தால் நடந்த பேரழிவில் கூட நாம் அபாய நிலையை குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. தயார்படுத்தல் இருக்கவில்லை. மலையகத்தில் ஒவ்வொரு முறையும் மண்சரிவு ஏற்படுகின்றது. வெள்ளம் ஏற்படுகின்றது. இடம்பெயர்ந்த மக்களை வெள்ளம் வடிந்த பின்னர் மீண்டும் அதே இடத்தில் குடியேற்றுவார்கள்.

வவுனியாவில் கூட கந்தசாமி நகர் என்றொரு கிராமம் உண்டு. அங்கு இயற்கை அனர்த்தம் இடம்பெறும் போது மக்கள் இடம்பெயர்வதும் பின்னர் அவர்களை மீண்டும் அதே இடத்தில் குடியமர்த்துவதும் தொடர்கதையாக உள்ளது. அதேபோன்று முல்லைத்தீவிலும் சில கிராமங்களில்  இந்த நிலையுண்டு. தயவு செய்து இவ்வாறான இயற்கை அனர்த்த பேரழிவுகளை தொடர்ந்து எதிர்கொள்ளும் இடங்களில்  மீண்டும் மீண்டும் மக்களை மீள்குடியமர்த்தாதீர்கள். ஏனெனில்  அவ்வாறு மீள்குடியமர்த்துவதன் பலனை பார்க்கக்கூடியதாக இருக்கிறது. எமது உறவுகள் எத்தனை பேரை இழந்துள்ளோம்.

அனர்த்த  முகாமைத்துவம் தொடர்பில் கடுமையான  ஊழியர் பற்றாக்குறை உள்ளது. நிரப்பப்படாத வெற்றிடங்கள் உள்ளன. ஒவ்வொரு மாகாணத்திலும் அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் இருக்க வேண்டும். ஆனால் இல்லை எந்த மாவட்டத்தில் இருக்கிறது? ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரி இருக்க வேண்டும். ஆனால் இல்லை. மாவட்டத்திற்கு ஒருவர்தான் இருக்கின்றார்.

இந்த பேரனர்த்த பேரழிவுகளுக்கு முன்னைய அரசாங்கங்களே பிரதான காரணமாக இருப்பதுடன் தற்போதைய அரசாங்கமும் அதற்கு சிறு பங்களிப்பை செய்துள்ளது. எனவே பேரழிவுகளை எதிர்கொள்வதற்கான  தயார்ப்படுத்தல்கள் இல்லையென்றால் இவ்வாறான பேரழிவுகள்  தொடரத்தான் போகின்றன என்றார்.