அனைவரையும் ஒன்றிணைக்கும் அவசர கலந்துரையாடல் அவசியம்!

உலகில் நிலவும் நிச்சயமற்ற தன்மை காரணமாக தீவிர நெருக்கடிகள் உருவாகும் அபாயம் காணப்படுகின்றது. அதனால் கட்சி பேதமின்றி அனைவரையும் ஒன்றிணைத்துக்கொண்டு இதற்கு தீர்வுகாண வேண்டும். அதற்காக ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல் ஒன்றை விரைவாக மேற்கொள்ள வேண்டும். அதற்காக எமது பூரண ஆதரவை வழங்க தயாராக இருக்கிறோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (3) இடம்பெற்ற அந்நியச் செயலாவணி சட்டத்தின் கீழ் கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பிருந்தே சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டை மாற்றியமைப்பதாக வாக்குறுதி அளித்து தங்கள் கொள்கை அறிக்கையிலும் அதனைச் சேர்த்திருந்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்தும் அதை இன்னும் மாற்றவில்லை. இந்த இணக்கப்பாட்டில் மாற்றங்களை கொண்டுவருவதாக இருந்தால், எதிர்க்கட்சியும் இதற்கு பூரண ஆதரவைத் தரும். 2028 ஆம் ஆண்டாகும் போது ஆண்டுக்கு 3.5  பில்லியன் கடன் தொகையை திருப்பிச் செலுத்தும் சிக்கல் எழும் என்பதால், அதற்கு முன்பே நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டில் திருத்தங்களைச் செய்வது தொடர்பில் மறுபரிசீலனை செய்ய வேண்டும். மித்வா சூறாவளிக்குப் பின் சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை கூட்டுமாறும், நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டில் திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருந்தேன்.

நாட்டு மக்களுக்காக இந்த நடவடிக்கைகளை எடுத்து நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டை மக்களுக்கு சாதகமான வகையில் மாற்றியமைக்க வேண்டும்.

எரிவாயு நெருக்கடி, எண்ணெய் நெருக்கடி போன்றன கடும் பிரச்சினைகள் காணப்பட்ட போதிலும், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த சமயம் மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால் வரிசைகள் உருவானதால் அந்த நம்பிக்கை இன்று இல்லாதுபோயுள்ளது. வரிசைகள் ஏற்படுவதற்கு முன்பே மக்களுக்கு இது தொடர்பில் விளக்கம் அளித்து நம்பிக்கையை  ஏற்படுத்தி இருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. தற்போது அரசாங்கத்தின் மீதான மக்கள் நம்பிக்கை முற்றிலும் இழந்துபோயுள்ளது.

அமெரிக்க வரியானது நமது நாட்டிற்கு பிரச்சினையாக அமையும் என எதிர்க்கட்சி ஆரம்பம் முதலே கூறி வந்தது. மீண்டும் ஒருமுறை அமெரிக்கா அந்த வரிகளை விதித்துள்ளது. சர்வதேச அரங்கில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்து அரசாங்கம் இதைவிட கூடிய விழிப்போடு இருக்க வேண்டும். அத்தோடு அவசரகால நிலைமைகளை எதிர்கொள்வதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும். உலகில் நிலவும் நிச்சயமற்ற தன்மை காரணமாக தீவிர நெருக்கடிகள் உருவாகும் அபாயம் காணப்படுகின்றது. இந்தத் தருணத்தில் கொள்கை ரீதியில் செயற்பட வேண்டும். எண்ணெய் அல்லது எரிவாயு நெருக்கடியாக இருந்தாலும் சரி, உலகில் நிலவும் நிச்சயமற்ற சூழல்களை எதிர்கொள்வதற்கு முக்கியமான திட்டங்கள் வகுக்க வேண்டும்.

நாட்டில் தற்போது வறுமை அதிகரித்து வருகிறது. தித்வா சூறாவளியால் இது மேலும் அதிகமாகியுள்ளது. புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் அண்மைய தரவுகளின் பிரகாரம் தனிநபர் ஒருவருக்கு 16,000 – 18,000 ஆயிரம் ரூபா வரை மாதாந்த வருமானம் அமைந்து காணப்பட்டால் வாழ்வை கொண்டு நடத்த போதுமானது என கூறப்படுகிறது. இதை நம்ப முடியாது. நாடு தவறான தரவுகளின் அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இது அரசாங்கக் கொள்கைகளின் பலவீனத்தை காட்டுகிறது.

பத்து இலட்சத்திற்கும் அதிகமான நமது நாட்டு தொழிலாளர்கள் மத்திய கிழக்கில் தொழில் புரிந்து வருகின்றனர். அவர்களின் பாதுகாப்பிற்கு முறையான, வலுவான அல்லது மாற்றுத் திட்டமொன்று அவசியமாகும். அரசாங்கம் தூதரக அலுவலகங்கள் மூலம் அவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  அத்துடன் சுற்றுலாத்துறை போலவே ஏற்றுமதி துறைகளில் நேரடி வெளிநாட்டு முதலீடுகளை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

மத்திய கிழக்கில் மோதல் நிலை ஒரு சோகமான தருணமாக மாறியுள்ள இந்த வேளையில், மக்களின் வாழ்வாதாரங்கள் அழிந்துள்ள இந்த தருணத்தில், நமது நாடு இதை ஒரு நேர்மறையான வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டு நாட்டின் நம்பிக்கையை சர்வதேசத்தில் கட்டியெழுப்பி,  நேரடி அந்நிய முதலீடுகளை நாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு ஒத்துழைப்பு வழங்க நாம் தயார். ஆகையால் இப்போதாவது ஒரு சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  220 இலட்சம் மக்கள், தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை நினைத்து இதை செய்ய வேண்டும். இதை அரசாங்கம் சரியாக செய்திருந்தால் சர்வதேச அனுதாபத்தை பெற்றிருக்க முடியும் , ஆனால் அரசாங்கம் இந்த வாய்ப்பை இல்லாமல் செய்துள்ளது என்றார்.