அமெரிக்கத் தாக்குதலில் உயிரிழந்த 84 ஈரானிய கடற்படையினரின் சடலங்களை இன்று ஈரானுக்கு அனுப்ப நடவடிக்கை

இலங்கைக்குத் தெற்கே சர்வதேச கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்கு இலக்காகி மூழ்கடிக்கப்பட்ட’IRIS DENA’ கப்பலில் உயிரிழந்த 84 ஈரானிய கடற்படையினரின் சடலங்கள் இன்று வெள்ளிக்கிழமை (13) ஈரானுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களின் சடலங்களை ஏற்றிய விசேட விமானம் ஒன்று இன்று மத்தள சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஈரான் நோக்கிப் புறப்படத் தயாராக உள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் உள்ள ஈரான் தூதரகத்தின் நேரடி ஒருங்கிணைப்பின் கீழ் இந்தச் சடலங்களை அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

காலி துறைமுகத்திலிருந்து சுமார் 40 மைல் தொலைவில் இந்த ஈரானிய கப்பல் விபத்துக்குள்ளானது. இதன்போது, கப்பலில் சுமார் 180 பேர் இருந்ததாகத் தெரியவந்தது.

சம்பவத்தின் போது மீட்கப்பட்ட 35 கடற்படையினருக்கு காலி கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

சர்வதேச கடற்பரப்பில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றிலிருந்து ஏவப்பட்ட டோர்பிடோ (Torpedo) ஏவுகணைத் தாக்குதல் மூலமே இந்த ஈரானிய கப்பல் மூழ்கடிக்கப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட்டர் ஹெக்செத் (Peter Hegseth) உறுதிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.