அரசியல் இலாபத்திற்காக மத – இன அடையாளங்கள் பயன்படுத்தப்படுகின்றன

இன்று நாட்டில் பெரும்பான்மையாகச் சிங்கள பௌத்தர்கள் இருப்பதனால் சிங்கள பௌத்த அடையாளத்தை முன்னிறுத்தியே நாமல் ராஜபக்ஷ அரசியல் செய்வதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரச்சாரச் செயலாளர் துமிந்த நாகமுவ சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னிலை சோசலிச கட்சியின் 4ஆவது தேசிய மாநாடு ஞாயிற்றுக்கிழமை (01) கொழும்பு சுகததாச உள்ளரங்கில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,

இந்நாட்டில் இஸ்லாம் மதம் பெரும்பான்மையாக இருந்து நாமல் ராஜபக்ஷவின் பெயர் நாமா ஸ்மித் என்று இருந்திருந்தால் அவர் இஸ்லாம் மதத்தைப் பாதுகாக்க நாம் அணிதிரள வேண்டும் என்றுதான் சொல்லியிருப்பார்.

அதேபோல், இந்நாட்டில் இந்து மதம் பெரும்பான்மையாக இருந்து அவரது பெயர் நாமலிங்கம் என்று இருந்திருந்தால் இந்து மதத்திற்காக என் உயிரையும் தியாகம் செய்வேன் என்றுதான் சொல்லியிருப்பார். இது அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக இவர்கள் ஆடும் ஒரு திட்டமிட்ட விளையாட்டே தவிர வேறொன்றுமில்லை.

இவர்களுக்குத் தேவைப்படும் போதெல்லாம் இனவாதத் தீயைப் பற்றவைக்கிறார்கள். யாழ் நூலகத்தை எரித்தார்கள் அது ஓய்ந்ததும் அளுத்கம தர்கா நகரை எரித்தார்கள்.

இப்போது எரிக்க அடுத்த இடத்தைத் தேடுகிறார்கள். இந்தத் தீயில் கருகிப் போவது சிங்கள தமிழ் முஸ்லிம் மக்களின் வாழ்க்கையே தவிர ஆட்சியாளர்களின் வாழ்க்கை அல்ல.

இது அவர்களுக்கு ஒரு சாதாரண அரசியல் தீர்மானம் ஆனால் பொதுமக்களாகிய நமக்கு இது நம் பிள்ளைகளையும் உறவுகளையும் இழக்கும் ஒரு பாரிய அச்சுறுத்தலாகும்.

தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் பியானோ வாசிப்பதும் ஒரு ஆங்கிலச் சொல்லுக்கு மூன்று சிங்களச் சொற்களைச் சொல்வதும் மட்டும்தான் செய்துகொண்டு இருக்கிறார்.

கடந்த காலங்களில் நாட்டு மக்களின் உண்மையான பிரச்சினைகள் எதைக் குறித்து அவர் பேசியிருக்கிறார்? சஜித் மற்றும் ராஜபக்சக்கள் தலைமையிலான இந்தத் தோல்வியடைந்த எதிர்க்கட்சிகளால் நாட்டில் உருவாகியுள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்ப முடியாது.

2019-இல் ஒரு ஹிட்லர் போன்ற ஆட்சியை உருவாக்க முற்பட்டபோது அது நாட்டுக்குப் பேரிடியாக அமையும் என நாம் எச்சரித்தோம். இன்று விவசாய மக்கள் அந்தப் பாதிப்பை அனுபவிக்கிறார்கள்.

இனிவரும் ஆண்டுகளில் நாட்டில் உருவாகும் அரசியல் வெற்றிடத்தை நிரப்ப எமது கட்சித் தோழர்கள் தயாராக வேண்டும். கட்சிக்குள் இடதுசாரிச் சிந்தனையுள்ள புத்திஜீவிகளையும் வல்லுநர்களையும் நாம் உருவாக்க வேண்டும்.

தோல்வியடைந்த எதிர்க்கட்சிகளுக்கு மீண்டும் இடமளிக்காது ஒரு பலமான இடதுசாரி மக்கள் சக்தியைக் கட்டியெழுப்ப அனைவரும் அணிதிரள வேண்டும் என்றார்.