அரச நிறுவனங்களில் தற்காலிக, நாளாந்த சம்பளம், பதிலீட்டு, ஒப்பந்த அல்லது நிவாரண அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஊழியர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்குவதற்கான பொறிமுறையை அறிமுகப்படுத்தி, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சினால் 11/2026 இலக்க சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, இந்தச் சுற்றுநிறுபத்தை அமுல்படுத்துவதற்காக அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் ஐந்தொகைச் சபைகளின் தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதோடு, இதன் மூலம் சுமார் 9,800 ஊழியர்களுக்கு நிரந்தர நியமனங்களைப் பெறுவதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, அரச நிறுவனங்களில் தற்போது தற்காலிக, நாளாந்த சம்பள அடிப்படையில், பதிலீட்டு, ஒப்பந்த அல்லது நிவாரண அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அவ்வாறு பணிபுரிந்து பின்னர் சுற்றுநிறுபங்களின் விதிகளுக்கு அமைவாக நிரந்தர நியமனங்களைப் பெற்றும், அந்த நியமனங்கள் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படாத ஊழியர்கள் தொடர்பில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.





