அர்ப்பணிப்பு மிக்க, அறச் சிந்தனையுடைய தலைமைத்துவத்தை எம் மண்ணில் வளர்த்தெடுப்போம்!

எங்கள் மண்ணில் நீதியும், நிம்மதியும் நிலைத்திட அனைவரும் ஒன்றுபட்டு உழைப்போம். அர்ப்பணிப்பு மிக்க, அறச் சிந்தனையுடைய தலைமைத்துவத்தை எம் மண்ணில் வளர்த்தெடுப்போம் என சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி.ஆறு.திருமுருகன் தெரிவித்துள்ளார்.

 சனிக்கிழமை(13.04.2024) பிறக்கும் குரோதி சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அனைவருக்கும் எனது இதயபூர்வமான சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகுக. குரோதி வருடம் பிறக்கிறது. இவ் வருடத்தில் எல்லோரும் இன்புற்று வாழ இறைவனை மன்றாடுவோம். புதிய ஆண்டில் உலகம் முழுவதும் தர்மம் நிலைத்திட வேண்டுதல் செய்வோம்.

கடந்த ஆண்டில் நாம் விட்ட தவறுகளை எண்ணி இனிமேலும் அத் தவறுகள் தொடராமலிருக்க எம்மை நாம் ஒழுங்குபடுத்திக் கொள்வோம். அரிய பிறவியாகிய மானிடப் பிறவியின் மகத்துவத்தை உணர்ந்து வாழ்நாளைப் பேணிப் பாதுகாப்போம்.

புதிய ஆண்டு பிறக்கும் வேளையில் திருக்கோயில்களுக்குச் சென்று குடும்பம் குடும்பமாக வழிபாடு செய்வோம். உற்றார், உறவினர் கள், நண்பர்களுக்கும் வாழ்த்தினைத் தெரிவித்து உறவை வலிமைப்படுத்துவோம்.

உதவியற்று இருப்பவர்களுக்கு உறுதுணை செய்வோம். கோபத்தை மறந்து அன்பைப் பெருக்குவோம். பெற்றோர்களுக்குரிய கடமையைப் பேணிப் பாதுகாப்போம். எங்கள் பிள்ளைகளைச் சரியான வழியில் ஆற்றுப்படுத்துவோம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.