அவிசாவளை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு உதவிய இருவர் கைது

அவிசாவளை, தல்துவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு உதவி செய்ததாகக் கூறப்படும் சந்தேக நபர்கள் இருவர் மேல் மாகாணத்தின் தெற்கு பிராந்திய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று திங்கட்கிழமை (10) கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தின் தெற்கு பிராந்திய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் அவிசாவளை மற்றும் லுணுகம ஆகிய பிரதேசங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவிசாவளை மற்றும் பூகொடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 28 மற்றும் 30 வயதுடைய இரண்டு நபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரின் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்த மன்னா ரமேஷ் என்பவர் துபாயிலிருந்த காலத்தில் அவரது தலைமையில் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவிசாவளை, தல்துவ பிரதேசத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 20 ஆம் திகதி முச்சக்கரவண்டியில் பயணித்த மூன்று நபர்களை இனந்தெரியாத சிலர் சுட்டுக்கொலை செய்தமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாணத்தின் தெற்கு பிராந்திய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.