ஆசிய பசிபிக் பிராந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான விசேட சர்வதேச மாநாடு

பாராளுமன்ற உறுப்பினர்களிடையில் வெளிப்படைத்தன்மை மற்றும் நல்லாட்சியை ஊக்குவித்தல் எனும் தொனிப்பொருளின் கீழ் உலக அமைதியை நிலை நாட்டுவதற்காக ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான விசேட சர்வதேச மாநாடு  06 ஆம் திகதி புதன்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் அமைதிக்கான சர்வதேச மாநாட்டுப் பேரவையின் தலைவர், இலங்கையில் ஆறாவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில் இடம்பெறும் இந்த மாநாட்டிற்கு சபாநாயகர்  மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமை தாங்கவுள்ளார்.

இந்த மாநாட்டை உலகளாவிய அமைதி ஒன்றியம் மற்றும் அதனுடன் இணைந்த அமைப்புக்களான அமைதிக்கான சர்வதேச மாநாட்டுப் பேரவை  மற்றும் அமைதிக்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் சங்கம்  ஆகியன இலங்கை பாராளுமன்றத்துடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

உலகளாவிய அமைதி ஒன்றியத்தின் தலைவர் சார்ள்ஸ் யாங், சர்வதேச பாராளுமன்ற உறுப்பினர்களின் அமைதி அமைப்பின் ஆசிய பசிபிக் பிராந்தியத் தலைவர்  ஏக் நாத் தகால் மற்றும் உலகளாவிய அமைதி ஒன்றியத்தின் ஆசிய பசிபிக் பிராந்தியத் தலைவர்  மஸாய்சி ஹொரி மற்றும் மலேசியா, நேபால், இந்திய மற்றும் பங்களாதேஷ் நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த மாநாட்டில் சர்வதேசப் பிரதிநிதிகளாக கலந்துகொள்ளவுள்ளனர்.