ஆனந்த விஜேபால தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரிமாற்றப்படும் செய்தி, புகைப்படம் போலியானவை!

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரிமாற்றப்படும் செய்தி மற்றும் புகைப்படம் போலியானவை. புகைப்படத்தை போலியான முறையில் வடிவமைத்து அவற்றை பதிவேற்றம் செய்தவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வெளிநாடுகளில் இருந்தவாறு இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட பல குற்றச்செயல்களில் ஈடுபட்ட கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட பாதாள குழுவினர் . இலங்கை பொலிஸார் மற்றும் இந்தோனேசிய பொலிஸாரின் கூட்டு முயற்சினால் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 2025.08.30 ஆம் திகதி இரவு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்கள்.இச்சந்தர்ப்பத்தில் இந்தோனேசிய பொலிஸாரும் இலங்கைக்கு வருகைத் தந்திருந்தனர்.

இலங்கை பொலிஸ் அதிகாரிகளையும் , இந்தோனேசிய பொலிஸாரையும் வரவேற்கும் வகையிலும், இந்தோனேசிய பொலிஸாருக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் சனிக்கிழமை (30) கடுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால ஆகியோர் விமான நிலையத்துக்கு வருகைத்தந்திருந்தனர்.

இதன்போது இலங்கை மற்றும் இந்தோனேசிய பொலிஸாருக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கௌரவிப்பு சின்னங்களை வழங்கி வைத்தார்.

இந்த நிகழ்வுடன் அமைச்சரின் புகைப்படத்தை திரிபுப்படுத்தி சமூக வலைத்தளங்களில் போலிய படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு, பரிமாற்றப்படுவது அவதானிக்கத்தக்கது.

இவ்வாறு போலியான புகைப்படங்களை தயாரித்து அவற்றை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.