‘வியத்மக”என்றதொரு பைத்தியக்கார கூட்டத்தை சேர்ந்த சிலர் வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்க நினைக்கின்றனர்.
வடக்கு நீதிபதிகளை மிரட்டிக்கொண்டு அவர்கள் மீது குற்றம் சுமத்திக்கொண்டு கேவலமான முறையில் சரத் வீரசேகர போன்றோர் செயற்படுகின்றனர்.
இவர்களினால் கடந்த அரசாங்கம் ஏற்கவே பாடம் கற்றுள்ளது என வர்த்தக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (21) இடம்பெற்ற வங்கித்தொழில் விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
எனது மாவட்டத்தில் அண்மையில் சில போராட்டங்கள் நடந்தன.அதில் சில மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள். மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டங்களில் எங்களது பெயரையும் சிலர் பயன்படுத்தினார்கள். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் எமது பெயரை பயன்படுத்தினார்.
அவரின் பெயரை சொல்ல மாட்டேன் ஏனெனில் அவர் தனது பெயரை சொல்ல வேண்டும் என்பதற்காகவே இவ்வாறான வேலைகளை செய்து பிரபல்யம் அடைய நினைப்பவர். அவரின் தலையை முதலில் ஸ்கான் செய்து அதற்குள் மூளை இருக்கிறதா என பார்க்க வேண்டும். அவர் தலையால் யோசித்து வாயால் பேசுவதில்லை.
2015 ஆம் ஆண்டிலிருந்தது நான் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்றேன். எனது பெயரிலோ எங்களை சார்ந்தவர்கள் பெயரிலோ எந்தவொரு மதுபானசாலைகளும் இல்லை. அவ்வாறு இருக்கின்றது என்பதனை நிரூபித்தால் நான் இந்த பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து 24 மணி நேரத்தினுள் பதவி விலகுவேன் .
ஆளும் கட்சியிலுள்ள சில இனவாதிகள் குறிப்பாக தொல்லியல் திணைக்களம் என்ற போர்வையில் தமிழ் மக்களின் பூர்விக,பாரம்பரிய, வாழ்வாதார பண்பாட்டு விழுமியங்களை அழிக்க முயற்சிக்கிறார்கள். இவ்வாறான செயற்பாடுகள் மாற்றியமைக்கப்பட வேண்டும்.
ஆளும் கட்சியிலுள்ள சில இனவாதிகள் ”வியத்மக”என்றதொரு பைத்தியக்காரக்கூட்டம் தான் அப்போதைய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸவுக்கு பக்கத்தில் இருந்து கொண்டு விவசாயம் உட்பட அரச துறைகள் தொடர்பில் தவறான தகவல்களை வழங்கி அவரை பதவி விலக்கினார்கள்.
‘வியத்மக”என்றதொரு பைத்தியக்காரக்கூட்டத்தை சேர்ந்த சிலர்தான் வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்க நினைக்கின்றனர்.
வடக்கு நீதிபதிகளை மிரட்டிக்கொண்டு அவர்கள் மீது குற்றம் சுமத்திக்கொண்டு கேவலமான வேலைகளை சரத் வீரசேகர போன்றவர்கள் செய்கின்றனர். இந்த வேலையை இவர்கள் நிறுத்த வேண்டும். இவர்களினால் கடந்த அரசு ஏற்கவே பாடம் கற்றுள்ளது.
ஆளும் கட்சியிலிருந்தால் அரசை ஆதரித்து பேச வேண்டும்.எதிர்கட்சியிலிருந்தால் அரசை எதிர்த்து பேச வேண்டும். இதுதான் இந்த நாட்டின் சாபக்கேடு நாம் ஆளும் கட்சியில் இருந்தாலும் ஆளும் கட்சிக்கு சார்பானவர்கள் அல்ல.
அதற்காக எதிர்கட்சிக்கும் ஆதரவானவர்கள் அல்ல. எமக்கு வாக்களித்த மக்களுக்கும் இந்த நாட்டு மக்களுக்கும் நாம் ஆதரவானவர்கள் என்றார்.