ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்திய விஜயத்தின்போது மேற்கொண்ட ஒப்பந்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய உயர் ஸ்தானிகர் காரியாலயத்துக்கு மகஜர் கையளிக்க சென்றபோது அங்கு மகஜர் ஏற்றுக்கொள்ளப்படாததால் அது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மக்கள் ஆணை இல்லாமல் இந்தியாவுக்கு சென்று திருட்டுத்தனமாக பல ஒப்பந்தங்களை செய்திருக்கிறார்.
இந்த திருட்டுத்தனமான ஒப்பந்தத்துக்கு நாங்கள் எமது எதிர்ப்பை தெரிவிக்கிறோம். இது தொடர்பான மகஜர் ஒன்றை இந்தி உயர் ஸ்தானிகர் காரியாலயத்துக்கு கையளிக்க வந்தபோது, இவ்வாறு மஹஜர் ஏற்றுக்கொள்வதில்லை எனவும் வெளிவிவகார அமைச்சு ஊடாகவே மகஜர் ஏற்றுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த ஒப்பந்தங்களில் ஒன்றுதான் இந்தியா இலங்கைக்கு எரிபொருள் வழங்குவதற்கு எண்ணெய் குழாய் ஒன்றை ஏற்படுத்த அவர்கள் திட்டமிட்டிருக்கின்றனர்.
இந்த எண்ணெய் குழாய் தற்போது எமக்கு கிடைத்திருக்கும் தகவல்களின் பிரகாரம் திருகோணமலைக்கே வருகிறது. திருகோணமலையில் இருந்து ஒரு குழாயும் கொழும்பு துறைமுகத்துக்கு வருகிறது.
அடுத்த குழாய் திருகோணமலை துறைமுகத்துக்கு செல்கிறது. எண்ணெய் சந்தையில் இலங்கை இந்தியாவுக்கு பாரிய எண்ணெய் சந்தையல்ல.
அப்படியென்றால் எரிபொருள் ஏகாதிபத்தியத்தை பெற்றுக்கொள்ளவே இந்தியா முயற்சிக்கிறது. அம்பாந்தோட்டைதுறைமுகத்தில் கப்பல்களுக்கு எரிபொருள் ஏற்றும் அதிகாரத்தை சீனா எடுத்துக்கொண்டுள்ளது போன்று, கொழும்பு மற்றும் திருகோணமலை துறைமுகங்களில் அந்த அதிகாரத்தை இந்தியா பெற்றுக்கொள்ளவே திட்டமிட்டு வருகிறது.
அதேபோன்று இந்தியாவையும் இலங்கையையும் தரைவழியாக இணைக்கும் வகையில் மன்னாரில் ஒரு பிரதேசத்தை அமைக்கவும் இந்தியாவில் இருந்து இலங்கை வரை மின்சாரம் விநியோகிக்கும் ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்பட்டிருக்கிறது.
இது இலங்கையின் எரிசக்தி சுயாதீனத்தன்மைக்கான அச்சுறுத்தலாகும். இதுபோன்ற பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டிருக்கிறன. இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் நாட்டின் பொருளாதாரத்தில் இந்தியாவின் செல்வாக்கை அதிகரிக்கும் வகையிலேயே இருக்கிறது.
எமது நாட்டின் பொருளாதார நெருக்கடியை பயன்படுத்திக்கொண்டு இந்தியா பொருளாதார கொள்ளை ஒன்றை மேற்கொள்ள முயற்சிக்கிறது.
அதனால் இதற்கு எதிராக நாங்கள் நாடுபூராகவும் எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுக்க இருக்கிறோம். இந்தியா எமக்கு அண்மை நாடாக இருக்கலாம். அதற்காக இந்தியா எமக்கு பெரியண்ணன் அல்ல என்பதை இந்தியா தெரிந்துகொள்ள வேண்டும். இலங்கை சுயாதீன நாடு, சுயாதீன பொருளாதாரத்தைக்கொண்ட நாடு. அதனால் எமது சுயாதீனத்தில் கைவைக்க எந்த நாட்டுக்கும் உரிமை இல்லை என்றார்.