இன்று நாடாளுமன்றத்தின் 5 ஆவது கூட்டத்தொடர்

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று  வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

இது தொடர்பான ஒத்திகை பாராளுமன்ற வளாகத்தில் நேற்று  நடைபெற்றது.

அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய ஜனாதிபதி இன்று காலை 10.30 மணிக்கு பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைக்கவுள்ளார்.

ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கமைய, அவரது வருகையின் போது, மரியாதை வேட்டுக்கள் தீர்த்தல் மற்றும் வாகனத் தொடரணி என்பன இடம்பெறமாட்டாது என பாராளுமன்ற படைக்கலச் சேவிதர் குஷான் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியினால் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரை நிகழ்த்தப்பட்டதன் பின்னர் சபை நடவடிக்கை நாளை முற்பகல் 9.30 வரை ஒத்திவைக்கப்படவுள்ளது.