இராணுவ நிலையங்களில் எரிபொருள் பெற முடியாது : நாடாளுமன்றச் செயலாளருக்கு ரவிகரன் எம்.பி கடிதம்!

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இராணுவத்தினால் நிர்வகிக்கப்படும் நிலையங்கள் ஊடாக எரிபொருள் வழங்கும் நடைமுறையை நிராகரிப்பதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பாராளுமன்றச் செயலாளர் நாயகத்திற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (22) கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியினை அடுத்து, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கென இராணுவத்தினரால் நிர்வகிக்கப்படும் நிலையங்கள் ஊடாக எரிபொருள் விநியோகிக்கும் விசேட ஏற்பாடு குறித்து அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்குத் தனது கடும் மறுப்பைத் தெரிவித்தே பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இக்கடிதத்தை அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில்,

“எரிபொருள் விநியோகம் போன்ற அத்தியாவசிய மக்கள் மயப்பட்ட சேவைகளை இராணுவத் தலையீட்டின் ஊடாகப் பெற்றுக்கொள்ளும் முறைமை, வடகிழக்கில் வாழும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகிய எமது அரசியல் நிலைப்பாட்டினைப் பாதிக்கும் வகையில் அமைகிறது. போரினால் பாதிக்கப்பட்ட ஒரு சமூகத்தின் சார்பாளராக, இராணுவப் பொறிமுறைக்குள் ஒப்படைக்கப்பட்டுப் பத்தாண்டுகளைக் கடந்தும் தேடப்பட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காகவும், படுகொலைகளுக்கான நீதிக்காகவும் நாம் இன்றும் போராடி வருகின்றோம்.”

முல்லைத்தீவு மாவட்டத்தைத் தளமாகக் கொண்டு செயற்படும் தாம், வவுனியாவுக்குச் சென்று எரிபொருளைப் பெற்றுத் திரும்புவது நடைமுறையில் சாத்தியமற்றதுடன், காலத்தையும் எரிபொருளையும் வீணாக்குவதாக அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இராணுவத் தலையீடு அற்ற வகையில் ஜனநாயக நிருவாகத்தின் கீழ் பின்வரும் வழிமுறைகளை அவர் முன்மொழிந்துள்ளார்.

பொதுமக்கள் பயன்படுத்தும் சாதாரண எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நடைமுறையிலுள்ள விரைவுக்குறி (QR Code) முறைமை மூலம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்ள அனுமதித்தல்.

உறுப்பினர்கள் தத்தமது சொந்த மாவட்டங்களுக்குள்ளேயே (முல்லைத்தீவு உட்பட) எரிபொருளைப் பெற்றுக்கொள்ளும் வசதியை உறுதி செய்தல்.

இலங்கை போக்குவரத்துச் சபை அல்லது பொருத்தமான வேறு அரச நிறுவனங்கள் ஊடாக விநியோகத்தை மேற்கொள்ளல்.

பல்வேறு சமூகங்களின் உணர்வுகளையும் மதிக்கும் வகையில் இந்த மாற்று நடவடிக்கைகள் அமையும் என எதிர்பார்ப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.