இலங்கையில் ஊடக சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் சம்பவம்; ஊடகவியலாளர் அவமதிப்பு – சுதந்திர ஊடக இயக்கம் கடும் கண்டனம்

இலங்கையில் ஊடக சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஒரு சம்பவத்தை சுதந்திர ஊடக இயக்கம் கடுமையாக கண்டித்துள்ளது.

காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் ஈரான் நாட்டைச் சேர்ந்த கடற்படையினரை சந்தித்து தகவல் சேகரித்துக் கொண்டிருந்த போது, தன்னை பொலிசார் என கூறிய சிலர் தனது பணிக்கு தடையாக நடந்துகொண்டு குறிப்புகளை பறித்துக் கொண்டதாக சிலோன் டுடே (Ceylon Today) ஊடகத்தின் ஊடகவியலாளர் சுலேச்சனா ராமையா குற்றம்சாட்டியுள்ளார்.

அந்த நேரத்தில் அங்கு இருந்த ஈரான் தூதரக அதிகாரி ஒருவரின் மொழிபெயர்ப்பு உதவியுடன் கடற்படையினரிடமிருந்து தகவல்களை பெற்றுக் கொண்டிருந்ததாகவும், அப்போது சிலர் தலையிட்டு தனது செய்தி ஊடகப்பணிக்கு இடையூறு செய்ததாகவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தின் போது தன்னை அவமதிக்கும் வகையில் அசிங்கமான வார்த்தைகளில் திட்டியதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் இதுகுறித்து காலி பொலிஸாரிடம் விசாரிக்கப்பட்டபோது, அத்தகைய முறைப்பாடு எதுவும் கிடைக்கவில்லை என்று பொலிசார் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. புகாருக்கான பதிவு எண்ணும் வழங்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் ஊடகவியலாளர்கள் தங்களது தொழில்முறை பணிகளை சுதந்திரமாக மேற்கொள்ளும் உரிமைக்கு எதிரான தேவையற்ற பொலிஸ் தலையீடாகும் என சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்த சம்பவத்தை உடனடியாக விசாரித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக தேவையான நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் அதிகாரிகளிடம் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.