தேசிய பாதுகாப்பு உச்ச கட்டத்தில் இருப்பதாக அரசாங்கம் தெரிவிக்கும் நிலையில் எமது கடல் எல்லைக்கு அருகில் ஈரான் கப்பல் தாக்கப்பட்டிருக்கிறது. கப்பல் தாக்கப்படும் தகவல் அரசாங்கத்துக்கு ஏன் தெரியாமல் போனது என கேட்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (6) இடம்பெற்ற அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதகாலத்தக்கு நீடித்துக்கொள்ளும் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
தித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளை விரைவுபடுத்தவும், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவுமே அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அரசாங்கம் கூறுகிறது. அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்தச் சந்தர்ப்பமானது, தேசிய பாதுகாப்பு மிக உயர்ந்த மட்டத்தில் இருக்க வேண்டிய ஒரு காலப்பகுதியாகும்.
தேசிய பாதுகாப்புச் சபையைக் கூட்டி, நாட்டின் பாதுகாப்பு உச்சக்கட்டத்தில் இருப்பதாக அரசாங்கம் கூறினாலும், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று நமது நாட்டின் தனித்துவ பொருளாதார வலயத்திற்குள் நுழைந்திருப்பதை அரசாங்கம் அறிந்திருக்கவில்லை.
அதேபோன்று, ஈரானியக் கப்பல் மீது டொர்பிடோ தாக்குதல் நடத்தப்பட்டு அது அழிக்கப்படும் வரை, தேசிய பாதுகாப்பு உயர் மட்டத்தில் இருப்பதாகக் கூறும் இந்த அரசாங்கத்திற்கு அது தெரியாமல் இருந்தது ஒரு பாரிய பிரச்சினையாகும்.
இவ்வாறான நீர்மூழ்கிக் கப்பல்கள் எமது கடல் பிராந்தியத்தில் நடமாடும் போது, அவற்றைக் கண்டறிவதற்குத் தேவையான தொழில்நுட்பம் நம்மிடம் இல்லையா எனக் கேள்வி எழுப்புவதோடு, அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி தேசிய பாதுகாப்பு உச்சகட்டமாக இருப்பதாகக் கூறும் அரசாங்கம், இந்தச் சம்பவங்கள் குறித்துக் கூட சரியான விளக்கத்தை அளிக்கவில்லை. இதன் மூலம் தேசிய பாதுகாப்பிற்கு நேர்ந்துள்ள நிலைமையை சிந்தித்துப் பார்க்க முடியும். இரண்டாவது ஈரானியக் கப்பலில் இருந்த 208 பேரைக் காப்பாற்றுவதற்கு முன்னர், முதலாவது ஈரானியக் கப்பலில் இருந்த 130 பேர் எமது நாட்டின் தனித்துவ பொருளாதார வலயத்தில் உயிரிழந்துள்ளனர்.
மேலும் எமது நாட்டு தூதரகங்கள் ஊடாக தனித்துவ பொருளாதார வலயத்தை உறுதிப்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள இராஜதந்திர நடவடிக்கைகள் குறித்து அறிந்துகொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. மேலும், ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து தடைப்படும் என எதிர்க்கட்சிகள் எச்சரித்தபோது, அவ்வாறான சிக்கல் எதுவும் இல்லை என வெளிநாட்டு அமைச்சரால் கூறப்பட்டது. இருப்பினும், தற்போது அந்த நீரிணை மூடப்பட்டுள்ளதால், எண்ணெய் கொள்வனவு செய்வதில் பாரிய சிக்கல்கள் எழுந்துள்ளன.
அத்துடன் தற்போதைய சூழ்நிலையில், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்வனவு செய்வதற்கு இந்தியாவுக்கு அமெரிக்காவினால் 30 நாட்கள் பொருளாதாரத் தடைகளில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, எமது நாட்டிலிருந்தும் ஒரு பிரதிநிதிகள் குழுவை இந்தியா மற்றும் ரஷ்யாவிற்கு அனுப்பி, நாட்டுக்குத் தேவையான எரிபொருளை முறையாகப் பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கிறோம்.
ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டால், நன்னம்பிக்கை முனை ஊடாக எண்ணெய் கொண்டு வருவதற்கு பல வாரங்கள் தாமதமாகும் . இதனால் எரிபொருள் விலை அதிகரிக்கும் தற்போது எண்ணெய்க்கான யுத்த மேலதிக கட்டணம் விதிக்கப்பட்டுள்ளதால், எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகள் மட்டுமன்றி மருந்து மற்றும் உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படும்.
ஆனால் இந்த நிலைமைக்கு அரசாங்கம் வழங்கும் தீர்வுகள் தெளிவற்றதாக உள்ளன. இது சுற்றுலாத்துறைக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்துவதுடன், ‘சிலோன் டீ’ வர்த்தக நாமத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இது குறித்து ஆராயப்பட வேண்டும். எதிர்க்கட்சி இது குறித்து எச்சரித்த போது, அரசாங்கம் அதனை கண்டுகொள்ளவில்லை.
சர்வதேச கடல்சார் சட்டம் உள்ளிட்ட பல உடன்படிக்கைகள் மற்றும் சட்டதிட்டங்கள் இராஜதந்திர ரீதியாக காணப்படுகின்றன. இவை குறித்து பேசப்பட வேண்டும். எமது நாட்டின் தனித்துவ பொருளாதார வலயத்திலுள்ள கப்பல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்துவது சர்வதேச சட்டங்களை மீறும் செயலாகும். ஆனால் அரசாங்கம் இதற்கு எதிராக ஒரு வார்த்தையேனும் பேசவில்லை.
இங்கு வந்த நீர்மூழ்கிக் கப்பல் குறித்தேனும் அரசாங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும். அரசாங்கத்திற்கு இது குறித்து எவ்வித அறிவும் இல்லை.தேசிய பாதுகாப்பு குறித்து தம்மால் ‘டியூஷன்’ எடுக்க முடியும் என்று கூறிய அரசாங்கத்திற்கு, இன்று தேசிய பாதுகாப்பைக் கூட உறுதிப்படுத்திக் கொள்ள முடியாமல் போயுள்ளது.
மேலும் அவசரகாலச் சட்டம் மின்சாரக் கட்டமைப்பைப் பாதுகாப்பதற்காகக் கொண்டுவரப்பட்டதாக அரசாங்கம் கூறினாலும், 10 கப்பல்களில் தரம் குறைந்த நிலக்கரியையே கொண்டு வந்துள்ளது. இவற்றின் மூலம் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படாது. இதன் காரணமாகச் சரியாக மின்சாரத்தைக் கூட உற்பத்தி செய்ய முடியாது. எமது நாட்டில் அவசரகாலச் சட்டம் அமுலில் உள்ள நிலையிலேயே இந்தத் தரம் குறைந்த நிலக்கரி கொண்டு வரப்பட்டுள்ளது, இதனால் மின்சாரக் கட்டணத்தைக்கூட அதிகரிக்க நேரிடும் என்றார்.


