நீதிமன்றத்தை அவமதித்ததாக என்மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை முழுமையாக புறக்கணிக்கிறேன். பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பாராளுமன்றத்தின் ஊடாக நீதிமன்றத்துக்கு பாரதூரமான அச்சுறுத்தல் விடுத்தார். இதற்கு சட்டத்தரணிகள் சங்கம் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சட்டத்தரணிகள் சங்கம் எம்.ஏ.சுமந்திரனுக்கு அஞ்சுகிறதா? என பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரிடம் கேள்வியெழுப்பியுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவினால் அண்மையில் பாராளுமன்றத்தில் வெளியிடப்பட்ட கருத்து நாட்டின் மிகமுக்கிய அடிப்படைக் கட்டமைப்பான நீதிமன்றத்தின் மீதான மிகமோசமான தாக்குதல் எனக் குறிப்பிட்ட சட்டத்தரணிக்ள சங்கம் நீதிமன்றத்தை சுதந்திரமாக இயங்குவதற்கு அனுமதிப்பதென்பது துடிப்பான ஜனநாயகத்தின் நிலைத்திருப்புக்கு அவசியம் என்று சுட்டிக்காட்டி கடந்த கடந்தவாரம் அறிக்கை வெளியிட்டது.
இந்த அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருக்கு வியாழக்கிழமை (13) கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
நீதிமன்றத்தை அவமதித்ததாக என்மீது சாட்டப்படும் குற்றச்சாட்டுக்களை முழுமையாக நிராகரிக்கிறேன். கடந்த 07 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் நான் ஆற்றிய உரையை பொறுமையுடன் கேளுங்கள்.
எனக்கு எதிராக வடக்கு மற்றும் கிழக்கு சட்டத்தரணிகள் நடத்திய போராட்டத்துக்கு எவ்விதமான தேடலும் இல்லாத ஆதரவு என்றே உங்களின் அறிக்கையை கருதுகிறேன்.
நீதிமன்றம் சுயாதீனமாக செயற்பட வேண்டும், வெளிநபர்களின் தலையீடு இல்லாமல் நீதிமன்ற செயற்பாடுகள் சிறந்த முறையில் செயற்பட வேண்டும் என்பது நாட்டு மக்கள் அனைவரும் நன்கு அறிந்ததொரு விடயம். சட்டத்தரணிகள் சங்கம் அதை புதிதாக விளக்க வேண்டியதில்லை.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அண்மையில் உயர்நீதிமன்றம் தொடர்பில் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையை உங்களுக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன். ‘நாட்டின் உயர்நீதிமன்றம் கடிகார முள்ளைப்போல் இரு பக்கமும் சுழல்கிறது,அவர்களுக்கு அதனை தெளிவுப்படுத்திக் கொள்ள அறிவு இல்லையாயின் அவர்கள் வீட்டுக்குச் செல்ல வேண்டும்’ என்றார். இந்த உரைக்கு சட்டத்தரணிகள் சங்கம் ஏன் எதிர்ப்பை வெளிப்படுத்தவில்லை. அவர் நீதிமன்றத்துக்கு பாரதூரமான அச்சுறுத்தல் விடுக்கவில்லையா, சட்டத்தரணிகள் சங்கம் சுமந்திரனுக்கு அஞ்சுகிறதா?
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசேட பிரதிநிதி மொனிகா ஜின்டோ இலங்கையின் நீதிமன்ற கட்டமைப்பு தொடர்பில் ஜெனிவாவுக்கு சமர்ப்பித்த அறிக்கை தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கத்துக்கு நினைவுப்படுத்த விரும்பிகிறேன்.
எமது நீதிபதிகள் சேவையில் இருந்து ஓய்வுப் பெற்றதன் பின்னர் அரச மற்றும் அரசியல் நியமனங்களை எதிர்பார்த்துள்ளார்கள். அதனால் அவர்கள் எதிர்கால சேவைக்காக வழக்குகளின் போது அரசாங்கத்துக்கு சார்பாக தீர்ப்பு சொல்லும் தன்மை காணப்படுகிறது.
ஒட்டுமொத்தமாக இலங்கையின் நீதிமன்ற சுயாதீனம் கட்டம் கட்டமாக இல்லாதொழிகிறது. சட்டத்தரணிகள் சங்கம் அரசியல் ரீதியில் பிளவுப்பட்டுள்ளது. அத்துடன் சட்டத்தரணிகள் சங்கம் அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளமை பாரதூரமான பிரச்சினை என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் விசேட பிரதிநிதி மொனிகா ஜின்டோ இலங்கையின் நீதிமன்ற கட்டமைப்பு தொடர்பில் பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.
நீதிமன்றத்தின் சுயாதீனம் மற்றும் கௌரவம் தொடர்பில் குரல் கொடுக்கும் சட்டத்தரணிகள் இலங்கையின் நீதிமன்ற கட்டமைப்பு தொடர்பில் மொனிகா ஜின்டோ முன்வைத்த கடுமையான, பாரதூரமான குற்றங்களை நிராகரிக்கவுமில்லை, எதிர்ப்பு தெரிவிக்கவுமில்லை.
இவ்வாறான நிலையில் தனிப்பட்ட முறையில் நான் 2014.07.18 ஆம் திகதி ஜெனிவாவுக்கு சென்று ஐக்கிய நாடுகள் நாடுகள் சபையின் வருடாந்த கூட்டத்தொடரில் இலங்கையின் நீதிமன்ற கட்டமைப்பு குறித்து முன்வைக்கப்பட்ட பாரதூரமான குற்றச்சாட்டுக்கள். கருத்துக்களை வன்மையாக கண்டித்தேன். எமது நீதிமன்றத்தின் சுயாதீனத்தை நான் அன்று பாதுகாத்தேன்.
பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்றத்தில் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதை நான் நன்கு அறிவேன். வடக்கில் எமது பௌத்த மரபுரிமைகள் அழிக்கப்படுவது குறித்து சட்டத்தரணிகள் சங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும். தொல்பொருள் சின்னங்களை மறுசீரமைக்கும் பணிகளில் ஈடுப்பட்ட தொல்பொருள் அதிகாரிகளுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு எதிராக பொய்யான வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் தொல்பொருள் மறுசீரமைப்பு பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
நாம் அனைவரும் நீதித்துறையை மதிக்கிறோம். எமது மரபுரிமைகளை அழிக்கும் குண்டர்களுக்கு ஆதரவாக செயற்படுவதற்கு முன்னர் சட்டத்தரணிகள் இருமுறை சிந்திக்க வேண்டும் என்பதை கேட்டுக் கொள்கிறேன். சட்டத்தரணிகள் சங்கத்துக்கு தேசப்பற்று இருக்குமாயின் அவர்கள் இவ்விடயத்தையும் கவனிக்க வேண்டும்.