ஈரானுக்கு எதிராக செயற்பட்ட தரப்பினருக்கு எதிராக ஜனாதிபதி ஒரு கண்டனத்தை கூட தெரிவிக்காததையிட்டு இந்த அரசாங்கத்துக்கு ஆதரவளித்த ஒவ்வொரு முஸ்லிம் வாக்காளர்களும் ஆத்திரமடைந்துள்ளதுடன், கவலையடைந்துள்ளார்கள். தலைகுனிந்துள்ளார்கள். பாராளுமன்றத்தில் கூட கண்டனத்தை வெளியிடாதது அவமானத்துக்குரியது. டொனால்ட் ட்ரம்ப் பெரிய சைத்தான், இஸ்ரேலில் உள்ளவர் குட்டி சைத்தான் இவர்களே உலக அமைதிக்கு இன்று அச்சுறுத்தலாக செயற்படுகிறார்கள் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (3) நடைபெற்ற அந்நிய செலவாணி சட்டத்தின் கீழான கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பெரிய சைத்தான், இஸ்ரேலில் உள்ளவர் குட்டி சைத்தான்.இவர்கள் இருவரும் தான் இன்று முழு உலகின் அமைதிக்கும் பெறும் அச்சுறுத்தலாக காணப்படுகிறார்கள். ஈரானில் சட்டத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட தலைமைத்துவத்தை சர்வதேச சட்டத்துக்கு முரணாக செயற்பட்டு இவர்கள் கொலை செய்துள்ளார்கள்.
இந்த பெரிய சைத்தான் மனித படுகொலைகளை செய்து விட்டு விளையாட்டு போட்டிக்கு செல்லும் போது அணியும் தொப்பியை அணிந்துக் கொண்டு ஊடகங்களுக்கு பேசுகிறார். அவரது கருத்துக்களை கேட்கும் போதும், பார்க்கும் போதும் மிகவும் ஆத்திரமாகவுள்ளது.ஆனால் இலங்கையின் ஜனாதிபதி இதனை கண்டிக்கவில்லை. ஒரு வார்த்தைகள் கூட அதுப்பற்றி பேசவில்லை.
தோற்றம் பெற்றுள்ள யுத்தத்தத்தால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஜனாதிபதி விடயங்களை முன்வைத்திருந்தார். அதனை நாங்கள் வரவேற்கிறோம். யுத்தத்தை ஆரம்பித்தவர்களுக்கு எதிராக ஒருவார்த்தை கூட பேசாத அளவுக்கு ஜனாதிபதியும், அரசாங்கமும் இந்த சக்திகளுக்கு அடிபணிந்துள்ளார்கள்.உண்மையில் இது நியாயமற்றது.
மத்திய கிழக்கு நாடுகளின் தற்போதைய நிலைமையை முழு உலக நாடுகளும் உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருக்கின்ற நிலையில், சர்வாதிகார சக்திகளின் செயற்பாடு தொடர்பில் ஜனாதிபதி ஒரு கண்டனத்தை கூட தெரிவிக்காததையிட்டு ஒட்டுமொத்த மக்களும், இந்த அரசாங்கத்துக்கு ஆதரவளித்த ஒவ்வொரு முஸ்லிம் வாக்காளர்களும் ஆத்திரமடைந்துள்ளதுடன், கவலையடைந்துள்ளார்கள்.
ஈரானுக்கு எதிராக அசிங்கமாக செயற்பட்ட தரப்பினருக்கு எதிராக அரசாங்கம் ஒரு கண்டனத்தை கூட தெரிவிக்காததற்கு ஒவ்வொரு முஸ்லிம் வாக்காளர்களும் தலைகுனிந்துள்ளார்கள்.பாராளுமன்றத்தில் கூட ஒரு கண்டனத்தை வெளியிடாதது அவமானத்துக்குரியது. நான் அமெரிக்காவுக்கு எதிராகவோ அல்லது அமெரிக்க பிரஜைகளுக்கு எதிராகவோ பேசவில்லை. சர்வதேச சட்டத்துக்கு முரணான ஒரு தனிநபர் தான்தோன்றித்தனமாக செயற்பட்டு பிறிதொரு நாட்டின் சுயாதீனத்தை கேள்விக்குள்ளாக்குவதையே எதிர்க்கிறோம் என்றார்.





