ஈரான் மீதான போரை உடனே நிறுத்து: அமெரிக்காவுக்கு எதிராக யாழ்.நகரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு

அமெரிக்க ஏகாதிபத்தியப் போர் வெறியை எதிர்ப்போம்! ஈரான் மக்களின் போராட்டத்தை ஆதரிப்போம்!! எனும் தொனிப் பொருளில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக்
கட்சியின் ஏற்பாட்டில் நேற்று வெள்ளிக்கிழமை (10.04.2026) முற்பகல்-10 மணி முதல் முற்பகல்-11 மணி வரை யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் புதிய ஜனநாயக மாக்சிச மாக்சிச லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா.செந்திவேல், முன்னிலை சோசலிசக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் விமல் பியதிஸ்ஸ, மூத்த எழுத்தாளர் க. தணிகாசலம், புதிய ஜனநாயக மாக்சிச லெனினினிசக் கட்சி, முன்னிலை சோசலிசக் கட்சி ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள்,  சிவில்- சமூகச் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஈரான் மீதான போரை உடனே நிறுத்து!, எண்ணெய் வளத்தைத் திருடாதே!,  யாரிங்கே பயங்கரவாதி… டொனால்ட் ட்ரம்பே பயங்கரவாதி!, அன்று வியட்நாம்…இன்று ஈரான்… நாளை யாரோ…?, யுத்தமும், சத்தமும் உனக்கு வேண்டும்! அமைதியும், வாழ்வும் எமக்கு வேண்டும்!!, ஐ.நா சபையே பதில் சொல்! அமைதியாகவிருப்பது ஏனோ! உள்ளிட்ட பல்வேறு கோஷங்கள் எழுப்பியும், பல சுலோகங்கள் எழுதப்பட்ட பதாதைகளைத் தமது கைகளில் ஏந்தியும் கடும் எதிர்ப்பில் ஈடுபட்டனர். அத்துடன் ஈரானுக்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியப் போரை எதிர்த்துப் பொதுமக்களுக்குத் துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.