உயர் நீதிமன்றங்களுக்கான நீதியரசர்கள் நியமனத்தை நிறைவேற்று அதிகாரம் தாமதப்படுத்துவதானது நாட்டின் சட்டத்தின் ஆட்சிக்கும், நீதித்துறையின் சுதந்திரத்திற்கும் எதிரானதென உண்மை தேடுபவர் அமைப்பு தெரிவித்துள்ளது.
உண்மை தேடுபவர் அமைப்பின் நிறுவுனரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி பிரேம்நாத் சி தொலவத்த அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மேல் நீதிமன்றங்கள் மற்றும் மாவட்ட நீதிமன்றங்கள் போன்றவற்றின் ஆட்சேர்ப்புப் பணிகளுக்கு முன்னுரிமையளிப்பதற்காகவே, உயர் நீதிமன்ற நீதியரசர்களின் நியமனங்கள் கட்டமைப்பு சீரமைப்பு என்ற பெயரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் நியாயப்படுத்த முயன்றார்.
எனினும், ஜனாதிபதியின் இந்தத் தர்க்கம் சட்டப்பூர்வமாக செல்லுபடியாகாது. அது மாத்திரமின்றி அரசியலமைப்பு ரீதியாக பிழையானதுமாகும். அரசியலமைப்புக்கமைய நீதிமன்றங்களின் நிர்வாகம் மற்றும் ஆட்சேர்ப்பு முற்றிலும் நீதிச் சேவை ஆணைக்குழுவின் பொறுப்பாகும்.
ஆனால், உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் நியமனம் என்பது அரசியலமைப்பு சபையின் அனுமதியுடன் ஜனாதிபதி செய்ய வேண்டிய தனித்துவமான கடமையாகும்.
கீழ் நீதிமன்றங்களின் நிர்வாகத் தாமதங்களை, உயர் நீதிமன்ற நியமனங்களை காலம் தாழ்த்துவதற்கான காரணமாக ஜனாதிபதி பயன்படுத்த முடியாது. பல தசாப்தங்களாகப் பணியாற்றும் சிரேஷ்ட நீதிபதிகள், தங்களது சிரேஷ்டத்துவம் மற்றும் திறமையின் அடிப்படையில் உயர் நீதிமன்றங்களுக்குப் பதவி உயர்வு பெறுவார்கள் என்ற நியாயமான எதிர்பார்ப்பைக் கொண்டுள்ளனர்.
இந்த நியமனங்களை தன்னிச்சையாக நிறுத்துவதன் மூலம் அவர்களுக்கு ஈடுசெய்ய முடியாத தொழில்முறைப் பாதிப்பு ஏற்படுவதுடன், நீதிமன்றங்களின் தலைமைத்துவப் பதவிகளை ஏற்கும் எதிர்கால வாய்ப்புகளும் பறிபோகின்றன.
அரசாங்கத்தின் நிர்வாகத் பலவீனங்களுக்குப் பதவி உயர்வுக்காகக் காத்திருக்கும் சிரேஷ்ட நீதிபதிகள் பழிவாங்கப்படக் கூடாது. தகுதியான நீதிபதிகளைக் காலவரையறையின்றி காத்திருக்க வைப்பது அரசியலமைப்பின் 12(1) பிரிவின் கீழ் உறுதிப்படுத்தப்பட்டுள்ள சட்டத்தின் முன் சமமான பாதுகாப்பு என்ற உரிமையை நேரடியாக மீறுவதாகும்.
அத்துடன், உயர் நீதிமன்றங்களில் நீதியரசர்களின் எண்ணிக்கையைக் குறைத்து வைத்திருப்பது, பொதுமக்களின் விரைவான நீதிக்கான உரிமையைப் பாதிக்கும். எனவே, நீதித்துறையின் சுதந்திரம் குறித்து ஜனாதிபதி பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை, ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டக் கோட்பாடுகளுக்கு முற்றிலும் முரணானது. அது நாட்டின் சட்டத்தின் ஆட்சிக்கு விடுக்கப்பட்ட சவாலாகும் என்றுள்ளது.





