ஊடகத்துறையில் தெற்காசியப் பெண்கள் – இலங்கை அமைப்பின் பிரதிநிதிகள், கடந்த 10 ஆம் திகதி வெகுசன ஊடகப் பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்னவை சந்தித்து, ஊடகங்களில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும் போது கடைப்பிடிக்கவேண்டிய ஒழுக்க நெறி வழிகாட்டல்கள் (Guidelines for the Ethical Use of Artificial Intelligence in Media) எனும் ஆவணத்தின் வரைவை கையளித்தனர்.
இந்த நடவடிக்கை சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஊடகத்துறையில் தெற்காசியப் பெண்கள் – இலங்கை அமைப்பு மேற்கொண்ட செயற்பாடுகள் மற்றும் முன்முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.
இந்த முன்முயற்சி காலத்திற்கு ஏற்றதும் அவசியமானதுமாக இருப்பதாக பிரதி அமைச்சர் வரவேற்றார். தொடர்ந்து, ஊடகத்துறையில் பொறுப்பான செயற்கை நுண்ணறிவு பயன்பாடு, டிஜிட்டல் யுகத்தில் பெண்களை வலுவூட்டல், கிராமப்புற பெண்களுக்கான டிஜிட்டல் எழுத்தறிவு, ஊடகங்களில் பால்நிலைத் தணிக்கைகள், வழக்கமான செயலமர்வுகளைத் தாண்டிய புதுமையான பயிற்சிகள் மற்றும் ஊடக விருதுகளை மேம்படுத்துதல் ஆகிய விடயங்களை உள்ளடக்கிய ஆக்கபூர்வமான, சுறுசுறுப்பான மற்றும் பயனுள்ள கலந்துரையாடலும் இடம்பெற்றது.
இந்த வரைவு வழிகாட்டல்கள், விரிவான ஆலோசனைச் செயல்முறையின் விளைவாகவும், ஊடகத்துறையில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் தூண்டப்படும் பால்நிலை அடிப்படையிலான வன்முறை (Technology-Facilitated Gender-Based Violence) அதிகரிப்பை ஆராயும் விரிவான அறிக்கையின் நிறைவு கட்டமாகவும் உருவாக்கப்பட்டுள்ளன.
இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கத்தின் ஊடக ஒழுக்க நெறி கோவைக்கு இணைப்பாக உருவாக்கப்பட்டுள்ள இந்த வழிகாட்டல்கள், மின்னணு, இணைய மற்றும் சமூக ஊடகத் தளங்களையும் உள்ளடக்குமாறு ஒழுக்க நெறிகளை விரிவுபடுத்துகின்றன.
மனித உரிமைகளை நிலைநிறுத்துதல், தனிநபர்களை தீங்கிலிருந்து பாதுகாத்தல் மற்றும் ஊடகத் துறையில் நடைபெறும் டிஜிட்டல் மாற்றம் பாதுகாப்பு, சமத்துவம் அல்லது ஒருமைப்பாட்டை பாதிக்காமல் இருப்பதை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றுடன், ஊடக நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவை பொறுப்புடன் பயன்படுத்த உதவுவதே இவ்வழிகாட்டல்களின் நோக்கமாகும்.
வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் சூழலில், ஊடகங்களில் செயற்கை நுண்ணறிவு ஒழுக்கவியலுக்கான கொள்கை ரீதியான மற்றும் கூட்டு அணுகுமுறை அவசியம் என ஊடகத்துறையில் தெற்காசியப் பெண்கள் – இலங்கை அமைப்பு நம்புகிறது. எதிர்வரும் வாரங்களில், இந்த வரைவைப் பகிர்ந்து, இவ்வழிகாட்டல்களை நாட்டின் ஊடக நிறுவனங்களின் ஒழுக்கச் சட்டகங்களில் இணைப்பது தொடர்பாக பரந்த கலந்துரையாடல்களை ஆரம்பிப்பதற்காக, கொழும்பில் உள்ள அச்சு, ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் ஊடக நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றவும் அந்த அமைப்பு திட்டமிட்டுள்ளது.





