ஊழல் எதிர்ப்பு சட்டத்தை நிறைவேற்றயதுடன் நின்றுவிடாமல் நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் இந்த சட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள அரசாங்கம் தலையிட வேண்டும் என சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் பாராளுமன்றத்திலும் பாராளுமன்றத்துக்கு வெளியிலும் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களின் போது பல்வேறு தரப்பினர்களால் சுட்டிக் காட்டியபடி இது முழுமைப்பெற்ற சட்டமாக இருக்காவிட்டாலும், நாட்டின் எதிர்கால நலனை முன்னிட்டு ஊழலை இல்லாதொழிப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது.
மேலும் ஒட்டுமொத்த நாடும் எதிர்பார்த்தவாறு இந்த சட்டத்தின் நோக்கங்களை வெற்றிக்கொள்வதற்கு, இதனை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது மாத்திரம் போதுமானதாக அமையாது.
இந்த நோக்கத்தை பூர்த்தி செய்து கொள்வதற்கு அரசாங்கம் கடுமையான தலையீடுகளை மேற்கொள்ள வேண்டி உள்ளதுடன், அதனை பூர்த்தி செய்வது அரசாங்கத்தின் கடமையாகும். ஆரம்ப கட்டமாக ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழுவை நிறுவும் போது அதை வினைத்திறன்மிக்க உற்சாகமுடைய, தலையீடுகள் இன்றி இயங்கும் நிறுவனமாக நிறுவுவதை உறுதி செய்ய வேண்டும்.
இதற்காக நியமிக்கப்படும் ஆணையாளர்கள் குறுகிய அரசியல் நோக்கம் இல்லாத, சமூகத்தின் நன்மதிப்பையும் கௌரவத்தையும் பெற்ற நபர்களாக இருக்க வேண்டும்.
அத்துடன் இந்த நியமனங்களை கால தாமதமின்றி உடனடியாக நியமிக்க வேண்டும். இந்த ஆணைக் குழுவின் கீழ் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது, முழுமையான சுயாதீனத்தன்மையை உறுதி செய்யும் வகையில் பொலிஸ் திணைக்களத்தின் நடவடிக்கை இருக்க வேண்டும். அதேவேளை இலங்கை சுங்கத் திணைக்களம் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய நிறுவனங்களும் பக்கச் சார்பின்மையை உறுதி செய்ய வேண்டும்.
புதிய இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவினர், அவர்களின் விசாரணையின் பின் மேற்கொள்ளும் அனைத்து வழக்கு நடவடிக்கைகளையும் துரிதமாக நிறைவு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அதேவேளை, அதனூடாக லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான உண்மையான அர்ப்பணிப்பை நாட்டுக்கும் உலக நாடுகளுக்கும் வெளிப்படுத்த வேண்டும். குறிப்பாக ஆட்சி மாற்றங்களுக்கு அமைவாக விசாரிக்கப்படும் குற்றங்கள் தொடர்பிலான ஆணைக்குழுவின் நிலைப்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் மாற்றமடையக் கூடாது என்பதையும் வலியுறுத்துகின்றோம்.
இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான அழுத்தமான தலையீடுகளின் தேவையை எமது அமைப்பு ஆரம்பம் தொட்டே வலியுறுத்திய காரணத்தினால், இந்த சட்டமூலத்திற்கு பாராளுமன்ற அங்கீகாரம் கிடைத்தது தொடர்பில் சிவில் சமூக அமைப்பு என்ற வகையில் சமூக நீதிக்கான தேசிய இயக்கம் மகிழ்ச்சி அடைகிறது.
அதற்கமைய கடந்த 19 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டம் தொடர்பில் ஒருசிலர் சுட்டிக்காட்டிய சில குறைபாடுகள் இருந்த போதிலும் அவற்றை பூர்த்தி செய்துக்கொள்ளும் வரையில், நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் ஊடாக முழுமையான பங்களிப்பை நாட்டிற்கு வழங்குவதற்கு அனைத்து தரப்புகளும் செயற்பட வேண்டும்.