எம்.ஓ.பி. ரக உரத்தின் விலை 1000 ரூபாவால் குறைப்பு

எம்.ஓ.பி வகையிலான 50 கிலோகிராம் உர மூட்டையின் விலை சனிக்கிழமை (15) முதல் அமுலுக்கு வரும் வகையில் 1000 ரூபாவினால் குறைக்கப்படும். விவசாய சேவை மத்திய நிலையத்தின் ஊடாக விவசாயிகள் 14,000 ரூபாவுக்கு உரத்தை பெற்றுக்கொள்ளலாம் என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

போலன்ன பொலன்னறுவை மாவட்ட செயலாளர் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (14) இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் உரையாற்றும் போது அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

வீழ்ச்சியடைந்துள்ள விவசாயத்துறையை மேம்படுத்த விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.22000 ரூபாவாக  காணப்பட்ட.எம்.ஓ.பி வகையிலான உரத்தின் விலை பெரும்போக விளைச்சலின் போது 19500 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது.சிறுபோக விளைச்சல் ஆரம்பமானதை தொடர்ந்து 4500 ரூபாவினால் விலை குறைக்கப்பட்டது.

விவசாய சேவை மத்திய நிலையத்தின் ஊடாக 15000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் ,எம்.ஓ.பி வகையிலான உர மூட்டையின் விலை இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் 1000 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

உர பற்றாக்குறை மற்றும் விலை உயர்வு ஆகிய காரணிகளால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க துறைசார் மட்டத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சேதன பசளை திட்டம் சிறந்ததாயினும் அதனை கட்டம் கட்டமாக அமுல்படுத்தியிருக்க வேண்டும்.

சேதனப்பசளைத் திட்டம் பொருளாதாரப் பாதிப்பு ஆகிய காரணிகளால் விவசாயத்துறை பல்வேறு சவால்கள் எதிர்கொண்டுள்ளது. பொருளாதாரப் பாதிப்பு மத்தியில் விவசாயத்துறை மேம்பாட்டுக்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.வெகுவிரைவில் விவசாயத்துறையில் காணப்படும் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வு எட்டப்படும் என்றார்.

சமீபத்திய செய்திகள்