எரிபொருள் விலை அதிகரிப்பால் ஏற்பட்டுள்ள சவால்களைக் கருத்திற்கொண்டு, பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருள்களின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் இன்று(23) இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருள்களின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளமையால், பேக்கரித் தொழில்துறையை முன்னெடுத்துச் செல்வதில் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன என்று சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து விரிவாக ஆராய்வதற்காக இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
இந்தக் கலந்துரையாடலைத் தொடர்ந்து, பாண் உள்ளிட்ட அனைத்து பேக்கரி உற்பத்திப் பொருள்களினதும் திருத்தப்பட்ட புதிய விலைகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளன.
எரிபொருள் விலை உயர்வு மற்றும் உற்பத்திச் செலவு அதிகரிப்பு என்பன நுகர்வோர் மற்றும் உற்பத்தியாளர்கள் என இரு தரப்பினரையும் பாதித்துள்ள நிலையில், இன்றைய தீர்மானம் மிகுந்த எதிர்பார்ப்பைத் தோற்றுவித்துள்ளது.



