எரிவாயு தேவையை தொடர்ச்சியாக பூர்த்தி செய்ய நடவடிக்கை – லிட்ரோ அறிவிப்பு

ஒவ்வொரு மூன்று நாட்களுக்கு ஒருமுறை எரிவாயு தாங்கிய கப்பல் நாட்டை வந்தடையத் திட்டமிடப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் (Litro Gas) தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாத இறுதி வரை தேவையான அளவு எரிவாயு கையிருப்பில் உள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமக்கான கையிருப்பு எரிவாயு தற்போது மாலைதீவில் உள்ள கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவிலிருந்து மேலதிகமாக 33,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் ஒன்று வியாழக்கிழமை (19) மாலைதீவை சென்றடையவுள்ளது.

அத்துடன், மற்றுமொரு 33,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் ஏப்ரல் 20ஆம் திகதி மாலைதீவுக்குச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நாட்டின் எரிவாயுத் தேவையை எவ்விதத் தடங்கலும் இன்றிப் பூர்த்தி செய்வதற்குத் வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன எனக் கூறியுள்ளார்.