மூத்த ஊடகவியலாளரும், ‘கடம்பம்’ சஞ்சிகையின் ஸ்தாபக ஆசிரியரும், பிரபல பதிப்பாளருமான கே.வி.எஸ். மோகன் வியாழக்கிழமை (28) சென்னையில் தனது 86-ஆவது வயதில் காலமானார்.
1940-ஆம் ஆண்டு பிறந்த கே.வி.எஸ். மோகன், இலங்கையின் தமிழ்ச் சஞ்சிகை வரலாற்றில் நீங்கா இடம் பிடித்தவர்.
இலங்கையின் ஆரம்ப கால தமிழ்ச் சஞ்சிகைகளில் ஒன்றான ‘கடம்பம்’ இதழை ஆரம்பித்து, அதன் ஆசிரியராகப் பணியாற்றி இலங்கையின் தமிழ் இலக்கியப் பரப்பை சர்வதேச தரத்திற்கு இணையாக வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றினார்.
அத்துடன் வீரகேசரி மற்றும் மித்திரன் வெளியீடுகளுக்கு பல்வேறு ஆக்கங்களையும் எழுதி பங்களிப்பு செய்துள்ளார்.
இவரது தந்தையாரான மறைந்த கே.வி.எஸ். வாஸ் வீரகேசரி பத்திரிகையின் முன்னாள் ஆசிரியராவார்.
அதேநேரம் சிறந்த எழுத்தாளரான கே.வி.எஸ். மோகன், புதிய தலைமுறை எழுத்தாளர்களுக்கு களம் அமைத்துக் கொடுப்பதிலும், வளர்ந்து வரும் இளம் திறமையாளர்களை இனங்கண்டு அவர்களுக்குத் தேவையான வழிகாட்டல்களை வழங்குவதிலும் முன்னோடியாகத் திகழ்ந்தார்.
இலக்கியவாதியாக மட்டுமன்றி, இந்தியத் தமிழ் சினிமாவின் நுணுக்கங்களை அறிந்த சிறந்த திரை விமர்சகராகவும் அவர் போற்றப்பட்டார்.
அவரது விமர்சனங்கள் மற்றும் கட்டுரைகள் இலக்கிய மற்றும் திரைத்துறை வட்டாரங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன.
அத்துடன், லயன்ஸ் கழகம், மற்றும் ரோட்டரி கழகம் போன்ற சர்வதேச சமூக சேவை அமைப்புகளில் நீண்டகாலம் இணைந்து பல்வேறு மக்கள் நலப் பணிகளிலும் அவர் ஈடுபட்டிருந்தார்.
நீண்டகாலமாக சென்னையில் வசித்து வந்த அன்னார், தனது மனைவி, இரண்டு பிள்ளைகள், மருமக்கள் மற்றும் பேரன் ஆகியோரை விட்டுப் பிரிந்துள்ளார்.




