தற்போதைய அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள ‘ஏக்கிய ராஜ்ய’ அரசியலமைப்பு உருவாக்கப்படுவதைத் தடுப்பதற்கும், இலங்கையின் ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறைமையை ஒழிப்பதற்கும், தமிழ்த்தேசத்தை அங்கீகரித்து அதன் தனித்துவமான இறையாண்மையை அடிப்படையாகக்கொண்ட கூட்டாட்சி அரசியலமைப்பை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு கோரி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அதன் தலைவர் பா.உ கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரியிடம் மகஜரொன்றைக் கையாளித்துள்ளார்.
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு புதன்கிழமை (5) நாட்டுக்கு வருகைதந்த இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரிக்கும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு புதன்கிழமை (5) பி.ப 2.00 மணியளவில் கொழும்பில் நடைபெற்றது.
இச்சந்திப்பின்போது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அவர்களது நிலைப்பாடுகள் அடங்கிய கடிதத்தை விக்ரம் மிஸ்ரியிடம் கையளித்தார். அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:
இலங்கையில் கடந்த 77 ஆண்டுகளாக இனப்பிரச்சினைக்கு முகங்கொடுத்துவரும் ஈழத்தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வொன்றைப் பெற்றுத்தருவதில் இந்தியாவின் தலையீட்டைக் கோருகிறோம்.
இனப்பிரச்சினைக்கான தீர்வாக இலங்கை அரசாங்கம் தற்போது புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறது. அந்த அரசியலமைப்பில் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் பிரதிபலிக்கப்படுவது இன்றியமையாததாகும். அந்த நோக்கத்துடன் தமிழ்நாட்டிலுள்ள எமது உறவுகளின் ஆதரவுடனும், தமிழக முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாட்டு அரசின் ஒத்துழைப்புடனும் இந்திய அரசின் தலையீட்டை நாடிவந்துள்ளோம்.
ஈழத்தமிழ் விடுதலைப் போராட்ட வரலாற்றில் இந்தியாவின் தலையீட்டின் விளைவாக 1987 ஆம் ஆண்டு இந்திய – இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அந்த உடன்படிக்கையில் தமிழர்கள் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் பாரம்பரியமாக வாழ்ந்துவந்த மக்கள் என அங்கீகரிக்கப்பட்டதுடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைந்த ஒரே நிர்வாக அலகாக இருந்து சுயாட்சியை அனுபவிக்கவேண்டும் என்ற கொள்கையும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இருப்பினும் இலங்கை அரசு அந்த உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதாகக் கூறி, அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை அறிமுகப்படுத்தி, ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்குள் மாகாணசபை முறைமையை நிறுவியது.
இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் உண்மையான நோக்கத்தையும் ஈழத்தமிழ் மக்களின் சுயாட்சிக்கான அரசியல் அபிலாஷைகளையும் பலவீனப்படுத்தும் நோக்கத்திலேயே மாகாணசபை முறைமை திட்டமிட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஒற்றையாட்சி அரசில் மத்திய அரசே அனைத்து அரச கட்டமைப்புக்களுக்கும் மேலான உயர்வான சட்ட அதிகாரத்தைக் கொண்டுள்ளது. பிரிக்கப்படமுடியாத இறையாண்மையே ஒற்றையாட்சி அரசின் அடிப்படை அம்சமாகும். அதாவது மத்திய அரசின் அதிகாரங்கள் எவ்வகையிலும் வரையறுக்கப்படாதவையாகும்.
இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கம் 2015 – 2019 வரையான காலப்பகுதியில் ஆட்சியில் இருந்த அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்ட ‘ஏக்கிய ராஜ்ய’ அரசியலமைப்பு வரைவை நிறைவுசெய்து, நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிட்டிருப்பதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் முன்மொழியப்பட்டுள்ள ‘ஏக்கிய ராஜ்ய’ அரசியலமைப்பு உருவாக்கப்படுவதைத் தடுப்பதற்கும், இலங்கையின் ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறைமையை ஒழிப்பதற்கும், தமிழ்த்தேசத்தை அங்கீகரித்து அதன் தனித்துவமான இறையாண்மையை அடிப்படையாகக்கொண்ட கூட்டாட்சி அரசியலமைப்பை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.





