ஐஆர்ஐஎஸ் டெனா கப்பல் தாக்குதல்: பல காயங்களும் நீரில் மூழ்கியதும் மரணத்திற்குக் காரணம்

ஈரான் நாட்டின் ஐஆர்ஐஎஸ் டெனா போர் கப்பலில் இருந்த கடற்படை வீரர்களின் சடலங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனையில், பல்வேறு காயங்களும் நீரில் மூழ்கியதும் மரணத்திற்குக் காரணமாக இருந்ததாக நீதித்துறை வைத்திய அதிகாரிகள் குழுவின் தலைவர் பேராசிரியர் யு.சி.பி. பெரேரா தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்பரப்பில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் மேற்கொண்ட தாக்குதலில் ஈரானிய கடற்படை வீரர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்போது கராப்பிட்டிய தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவற்றை காலவரையின்றி பாதுகாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பேராசிரியர் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

வைத்தியசாலையின் பிரேத அறையில் 40 சடலங்களை மட்டுமே வைக்கக்கூடிய வசதி இருப்பதாகவும், மீதமுள்ள சடலங்களை பாதுகாப்பதற்காக மற்றொரு கட்டிடத்தில் குளிரூட்டப்பட்ட வசதிகளை ஏற்படுத்தி வைத்தியசாலை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“ஆழமான உறைவிப்பான் வசதியுடன் கூடிய இரண்டு கொள்கலன்களை பெற்றுள்ளோம். ஆனால் மைனஸ் 20 முதல் 30 செல்சியஸ் வரை வெப்பநிலையை பராமரிப்பது ஒரு பெரிய சவாலாக உள்ளது. எனினும், சடலங்கள் உரிய மரியாதையுடன் பாதுகாக்கப்பட்டுள்ளன. இதனால் அதிக மின்சாரச் செலவு ஏற்பட்டாலும், 84 சடலங்களை பாதுகாப்பது எங்களின் பொறுப்பாகும்,” என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த 20 கடற்படை வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் அவர்கள் வெலிசறை கடற்படைத் தளத்திற்கு அனுப்பப்பட்டதாகவும், மேலும் 10 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலி தலைமை நீதிபதி சமீரா தொடங்கொட மற்றும் மேலதிக நீதிபதி மகேஷிகா விஜேதுங்க ஆகியோர் இந்தச் சம்பவம் தொடர்பான நீதித்துறை விசாரணையை நடத்தினர்.

பிரேதப் பரிசோதனையை பேராசிரியர் யு.சி.பி. பெரேரா தலைமையில் வைத்தியர் அஜித் ரணவீர, வைத்தியர் ஜானகி வருஷாஹந்தி மற்றும் வைத்தியர் ரோஹான் ருவன்புர ஆகியோர் மேற்கொண்டனர்.