ஐ.நா. அபிவிருத்தித் திட்ட ஊடக செயலமர்வுகளுக்கு தனியார் ஊடகங்களுக்கும் அழைப்பு விடுக்க வேண்டும்

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் அனுசரணையில் ஊடகவியலாளர்களுக்கு நடத்தப்படும் செயலமர்வுகளுக்கு தனியார் ஊடகங்கள் அழைக்கப்படாமல் மேற்கொள்ளப்படும் இந்த வேலைத்திட்டம் வெற்றியளிக்கப்போவதில்லை. அதனால் தனியார் ஊடக நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (22) ஊடக அமைச்சு ஆலாேசனை குழு அறிக்கையை சபைக்கு சமர்ப்பித்து உரையாற்றிக்கொண்டிருந்த ஊடக அமைச்சர் பந்துல குணவர்த்தனவிடம் இடையீட்டு கேள்வியொன்றை ஏழுப்பி குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவிக்கையில்,

நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் அனுசரணையில் ஊடகவியலாளர்களுக்கு செயலமர்வுகளை நடத்திவருகிறோம். அதில் துறைசார் ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டு செயலமர்வுகளை நடத்தி வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செயலமர்வில், தமிழ் உரைபெயர்ப்பும் வழங்கப்பட்டிருந்தது. எதிர்காலத்திலும் ஊடகவியலாளர்களுக்கு இவ்வாறான செயலமர்வுகளை நடத்தி ஊடக  நெறிமுகளை அறிவுறுத்த நடவடிக்கை எடுக்க இருக்கிறோம் என்றார்.

இதன்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல, நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் நடத்தப்படும் ஊடக செயலமர்வுகள் தொடர்பில் தெரிவித்திருந்தார்.

ஆனால் அந்த அறிக்கையை பார்க்கும்போது அந்த செயலமர்வுக்கு அழைக்கப்பட்டிருப்பது அரச ஊடகங்களை சேந்ர்ததவர்களாகும். தனியார் ஊடகங்களுக்கு அழைப்பு இல்லை.

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தினால் இதனை செய்வதாக இருந்தால், அரச , தனியார் இரண்டு ஊடகங்களையும்  அழைத்து செய்திருக்க வேண்டும்.

இந்த செயலமர்வை யாழ்ப்பாணத்தில் நடத்தியதாக அமைச்சர் தெரிவித்திருந்தார். ஆனால் யாழ்ப்பாணத்தில் அதிகம் விற்பனையாகும் பத்திரிகை உதயன் பத்திரிகையாகும்.

அவர்களுக்கு இந்த செயலமர்வுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அதனால் இவ்வாறான செயலமர்வுகளுக்கு  இரண்டு தரப்பினரையும் அழைத்திருக்க வேண்டும். அப்போதுதான் இந்த வேலைத்திட்டம் வெற்றியடையும் என்றார்.

அதற்கு அமைச்சர் பதிலளிக்கையில், செயலமர்வில் தனியார் ஊடகவியலாளர்களும் செயலமர்வில் கலந்துகொண்டிருந்தனர்.

எனது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த பெயர் பட்டியல் குறித்த செயலமர்வில் கலந்துகொண்டு அதனை முன்னெடுத்த விரிவுரையாளர்களாகும். ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தினாலே இவர்களுக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மாறாக எமது எந்த தலையீடும் அதில் இருக்கவில்லை என்றார்.