ஐ. நா சபையின் தேர்தல் தொழில்நுட்பத் தேவைகள் மதிப்பீட்டுக் குழு – ஹரிணி கலந்துரையாடல்

ஐக்கிய நாடுகள் சபையின் தேர்தல் தொழில்நுட்பத் தேவைகள் மதிப்பீட்டுக் குழுவின் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான கலந்துரையாடல் செவ்வாய்க்கிழமை (07)  பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

இதன்போது, இலங்கையில் முன்னர் நடைபெற்ற தேர்தல்களின் வெளிப்படைத்தன்மை மற்றும் துல்லியத்தன்மை குறித்து மதிப்பீடு செய்யப்பட்டதுடன், தேர்தல் நடவடிக்கைகளை நிர்வகிக்கும் நிறுவனங்களின் சட்ட மற்றும் செயல்பாட்டுக் கட்டமைப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

தேர்தல் ஆணைக்குழு உட்படப் பிரதான தேர்தல் நிறுவனங்களின் ஆற்றல் மற்றும் தயார்நிலை பற்றிய புரிதலைப் பெறுதல், அத்துடன் அரசியல் பங்குதாரர்களின் ஈடுபாடு ஆகியன குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபையின் தொழில்நுட்பத் தேர்தல் தேவைகள் மதிப்பீட்டுக் குழுவின் பிரதிநிதிகள், இலங்கையில் தற்போதுள்ள தேர்தல் வழிமுறைகளை கவனத்தில் கொண்டு, தேர்தல் செயல்பாட்டின் வெளிப்படைத்தன்மை மற்றும் துல்லியத்தன்மை ஆகியவற்றை உறுதிப்படுத்துவதில் எதிர்கொள்ள நேரிடுகின்ற சவால்களுக்குத் தீர்வுகளைத் தேடுவதற்குத் தமது ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தனர்.

பெண்கள் மற்றும் ஏனைய சிறுபான்மைச் சமூகங்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரித்தல், தேர்தல் நடவடிக்கைகளுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் மற்றும் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு வாக்களிப்பதற்கு வாய்ப்பளிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்தல் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

தேர்தல் செயற்பாட்டில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கு, அவர்களை வேட்பாளர்களாக மாத்திரம் அன்றி, செயலூக்கமிக்க வாக்காளர்களாகவும் செயல்பட, ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார்.

அத்தோடு, சுதந்திரமான, நீதியான அதேவேளையில் அரசியலமைப்புக்கு அமைவான தேர்தல்களை நடத்துவதற்கு, வன்முறை, ஊழல் மற்றும் அரச வளங்களைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.

இந்தக் கலந்துரையாடலில் பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், தேர்தல் உதவிப் பிரிவின் பணிப்பாளர் (DPPA) Michele Griffin, தேர்தல் கொள்கை நிபுணர் Dan Malinovich, அரசியல் அலுவல்கள் அதிகாரி (ஆசியா – பசிபிக் பிரிவு) (DPPA-DPO) திருமதி. Amanda Stark மற்றும் அரசியல்/தேர்தல் அலுவல்கள் அதிகாரி Mikyong Kim ஆகியோர் உட்பட ஐக்கிய நாடுகள் சபை தலைமையக மற்றும் UNDP இன் இலங்கைக்கான சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.