ஒப்பந்தத்திற்கு முரணாக செயற்படவில்லை என்கிறார் சுரேஸ்

“தமிழ்த் தேசிய பேரவையில் இருந்து நாங்கள் விலத்திச் சென்றதாக கஜேந்திரகுமார் சொல்லவில்லை. நாங்களும் எங்கும் கூறவில்லை” என்று ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் முக்கியஸ்தரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று இடம்பெற்ற கூட்டணியின் உயர்மட்டக் கலந்துரையாடலுக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “இன்றைய தினம் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் கட்டமைப்பை வலுப்படுத்துவது தொடர்பாகவும் எமது எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடியிருக்கிறோம்.

மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக அரசாங்கத்தில் இருப்போர் பல்வேறுபட்ட முரனான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். எனவே இந்தத் தேர்தல் நடக்குமா என்ற அச்ச உணர்வு தமிழ் மக்கள் மத்தியில் ஏற்ப்பட்டுள்ளது. எம்மை பொறுத்தவரை இந்தத் தேர்தல் நடாத்தப்படவேண்டும். அரசு அதற்கான ஏற்பாடுகளை விரைவாக செய்யவேண்டும்.

அத்துடன் தமிழ் மக்கள் ஐக்கியபடவேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாக உள்ளது. நாங்கள் ஐந்து அமைப்புக்களின் கூட்டாக இருக்கிறோம். ஏனைய தரப்புக்களையும் இணைத்துச் செல்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

கடந்தகாலங்களில் கூட்டாக இயங்கியிருந்தால் பெரிய ஒரு வாக்குப்பலத்தை பெற்றிருக்கலாம். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அவ்வாறான தவறுகளை விட்டிருக்கிறோம். எதிர்காலத்தில் அவ்வாறான தவறுகள் நடக்காமல் இருப்பதற்கு அனைவரும் இணைந்து செயற்படவேண்டும்.

தமிழ்த் தேசிய பேரவையில் இருந்து நாங்கள் விலத்திச் சென்றதாக கஜேந்திரகுமார் சொல்லவில்லை. விலத்திச் செல்வதாக தான் கருதுவதாகவே சொல்லியிருக்கிறார். நாங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரமே செயற்பட்டு வருகின்றோம். நாங்கள் அந்த ஒப்பந்தத்திற்கு முரனாக எதுவும் செய்யவில்லை.

அத்துடன் உத்தியோகபூர்வமாக விலத்தியதாக அவர் அறிவிக்கவில்லை. நாங்களும் விலத்தியதாக எங்கும் சொல்லவில்லை. எனவே இது தொடர்பாக அவர்களுடன் பேசுவோம்.

அத்துடன் 13 ஆவது திருத்தமே இலங்கை அரசியல் சாசனத்தில் இருக்கக்கூடிய ஒரு விடயம். அவ்வாறான விடயம் முழுமையாக அமுல்படுத்தப்படவேண்டும் என்பது எங்களது கோரிக்கை. நாம் மட்டுமல்ல தமிழரசுக் கட்சி உட்பட பலதரப்புக்கள் அந்தக் கோரிக்கையை முன்வைக்கின்றது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை சார்ந்தவர்கள் கூட அவ்வாறான ஒரு தேர்தல் வந்தால் அதில் போட்டியிடுவோம் என்று கூறுகின்றார்கள். தேர்தலை நடத்துமாறு கோரிக்கை வைப்பதும் பிழையானது இல்லை என அவர்கள் கூறுகின்றார்கள்.

எனவே அவர்களும் தான் இந்தக் கோரிக்கையினை முன்வைத்துக் கொண்டிருக்கின்றர்கள் என்பது எனது கருத்து. அவர்கள் இதனை பிழையாக விளங்கியிருந்தால் இது தொடர்பாக அவர்களுடன் நாங்கள் பேசுவோம்” என்றார்.

சமீபத்திய செய்திகள்