பணியிலிருந்து ஓய்வு பெறும் இலங்கை கடற்படை பணியாளர்களுக்கு கப்பல் மற்றும் கடல்சார் துறைகளில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொள்வது குறித்து கலந்துரையாடலொன்று திங்கட்கிழமை (30) கொழும்பில் உள்ள பாதுகாப்பு பிரதி அமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலை பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) மற்றும் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித்த ருவன் கொடிதுவக்கு இணை தலைமை தாங்கினர்.
சர்வதேச கடல்சார் தொழில்துறையில் வேலைவாய்ப்பு பெற தேவையான சர்வதேச அங்கீகாரம் பெற்ற தொழில்முறை தகுதிச்சான்றுகள் இல்லாமை மற்றும் பணியிலிருந்து ஓய்வு பெறும் கடற்படை உறுப்பினர்கள் அவ்வாறான தகுதிகளைப் பெற உதவும் ஒரு செயல்முறையை உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்து இக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.
ஆண்டு தோறும் அதிகளவு கடற்படை உறுப்பினர்கள் சிறந்த தொழில்நுட்ப அறிவும் சேவை அனுபவமும் கொண்டு சேவையை விட்டு ஓய்வு பெற்று வருவதாகவும் இந்த நிபுணத்துவத்தை பயன்படுத்தி அவர்களை சர்வதேச கப்பல் மற்றும் கடல்சார் துறைகளில் வேலைவாய்ப்பு பெற்றுக் கொள்ள அவசியமான திறனை மேம்படுத்துவதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.
மேலும், இவ்வாறான பணியாளர்களுக்கு அதிகளவிலான வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பதன் மூலம் அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைவாக நாட்டுக்கு தேவையான வெளிநாட்டு வருமானத்தை ஈட்ட உதவும் என்பது குறிப்பிடப்பட்டது.
இதற்காக, பணியிலிருந்து ஓய்வு பெறும் கடற்படை உறுப்பினர்கள் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தகுதி சான்றிதல்களைப் பெற உதவும் உள்நாட்டு அமைப்பொன்றை உருவாக்க வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இக் கூட்டத்தில் கடற்படை தளபதி, பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர், வர்த்தக கப்பல் போக்குவரத்து பணிப்பாளர் நாயகம் உட்பட , இலங்கை கடற்படை, பாதுகாப்பு அமைச்சு மற்றும் வர்த்தக கப்பல் செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துக் கொண்டனர்.





