சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணைக் கொடுப்பணவு தொடர்பான கலந்துரையாடல் அடுத்த வாரம் நடைபெறவுள்ளது. இரண்டாம் கடன் தவணை கிடைக்கும் என நம்புகிறோம். ஆனால் கடன் மறுசீரமைப்பில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (4) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கையில் உற்பத்திப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது மற்றும் உற்பத்திப் பொருளாதாரத்தின் ஊடாக உலகச் சந்தையைக் கடக்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்ற அடிப்படைக் கருத்தோட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி செயற்பட்டு வருகிறது. நாட்டிற்கு கட்டமைப்பு ரீதியான பொருளாதார சீர்திருத்தங்கள் தேவை. கடன் மறுசீரமைப்பு இல்லாமல் நாடு முன்னேற முடியாது. நாடு குறித்து சிந்திப்பதாக இருந்தால் கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணைக் கொடுப்பணவு தொடர்பான கலந்துரையாடல் அடுத்த வாரம் நடைபெறவுள்ளது. கடன் தவணை கிடைக்கும் என நம்புகிறோம். ஆனால் கடன் மறுசீரமைப்பில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பரிஸ் கிளப் மற்றும் இந்தியா கடனை மறுசீரமைப்புக்கு ஒப்புக்கொண்டதாக அரசாங்கம் கூறுகிறது.
சீனாவிற்கு வழங்கப்பட வேண்டிய 5.8 மில்லியன் டொலர்களை மறுசீரமைப்பதற்கு இலங்கை அரசாங்கம் சீனாவின் எக்ஸிம் வங்கியுடன் இணக்கம் கண்டுள்ளது. ஆனால் ஏனைய கடன் வழங்குனர்களுடன் இலங்கை செய்து கொண்ட ஒப்பந்தங்கள் தொடர்பில் வெளிப்படைத்தன்மையுடன் அரசாங்கம் செயற்பட வேண்டும். நாங்கள் எந்த அரசியல் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தினாலும், இந்நாடு எங்களுக்கு முக்கியம்.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் ராஜபக்ச குடும்பமும் அவர்களுடன் உள்ள குழுவினரும் நாட்டை வங்குரோத்தாக்கும் முடிவுகளை எடுத்துள்ளனர். 1994ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவால் ஆரம்பிக்கப்பட்ட ஏற்றுமதி கொள்கையை மாற்றியதால் ஏற்றுமதி வருமானம் குறைந்தது. இலங்கை வீழ்ந்த பள்ளத்தில் இருந்து மீள அரசாங்கம் சில உடன்பாடுகளுக்கு வர வேண்டும். இந்த உடன்பாட்டுகள் அனைத்தும் சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர்புடையவை.
நாட்டிற்கு கட்டமைப்பு ரீதியான பொருளாதார சீர்திருத்தங்கள் தேவையில்லை என்று பலர் கூறுகின்றனர். சீனா மற்றும் இந்தியாவுடன் பேசி கடனை அடைத்துவிட்டு நகரும் நோக்குகளையே அவர்கள் உள்ளனர். உடன்பாடு மற்றும் கடன் மறுசீரமைப்பு இல்லாமல் நாடு முன்னேற முடியாது. நாட்டைப் பற்றி நாம் சிந்தித்தால், கடன் மறுசீரமைப்பு செயல்முறையைத் தொடர வேண்டும்.
கலாநிதி மொன்டெக் சிங் அலுவாலியா சமீபத்தில் இலங்கைக்கு விஜயம் செய்தார். 1991 இல் இந்தியப் பொருளாதாரம் பூஜ்ஜியமாக வீழ்ந்தபோது,இந்தியாவின் பொருளாதாரத்தை மறுசீரமைக்க பாடுபட்டவர்.அரசியல் காரணங்களால் அரசுகள் மாறினாலும்,இந்தியாவின் பொருளாதார சீர்திருத்தத் திட்டம் தொடர்ந்து முன்கொண்டு செல்லப்பட்டது.இதனால் இந்தியா வேகமாக அபிவிருத்தியடையும் நாடாக மாறியுள்ளது.
இறக்குமதி மாற்றீடு மூலம் இலங்கையின் அபிவிருத்தியை மேற்கொள்ள முடியாது. நாட்டை உலகத்துடன் இணைக்க வேண்டும். இதற்கு ஏற்றுமதியில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.உலக சந்தையில் உலக நாடுகளுடன் தொடர்பு கொண்டு உறவுகளை ஏற்படுத்த வேண்டும். இதைச் செய்ய, பாரிய பொருளாதார சீர்திருத்தங்கள் தேவை. உற்பத்திப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது அவசியம், இதன் மூலம் உற்பத்திப் பொருளாதாரம் உலகச் சந்தையைக் கடக்க வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தி இந்த அடிப்படைக் கருத்து நோக்கின் அடிப்படையில் செயல்படுகிறது.
இலங்கையின் மிகக் கடுமையான பிரச்சினைகளில் ஒன்று சேமிப்பு இல்லாமையாகும்.குறைந்த சேமிப்பு என்பது முதலீடு செய்ய பணம் இல்லை என்பதை காட்டி நிற்கிறது.
இலங்கையில் தொழில்முயற்சியாண்மைகள் உள்ளன. ஆனால், தொழில்முயற்சியாண்மைகளர்களுக்குத் தேவையான மூலதனம் இல்லை. மூலதனத்தை பெற வெளிநாட்டு முதலீடுகள் பெறப்பட வேண்டும். இலங்கையில் வெளிநாட்டு முதலீடுகளைப் பெறுவதற்கு,நிதிச் சந்தைகளில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும். இந்த நம்பிக்கை ஏற்கனவே உடைந்து விட்டது.இதன் மூலம் உற்பத்திப் பொருளாதாரத்தை உருவாக்க முடியாது.
உற்பத்திப் பொருளாதாரத்தின் மூலம் உலகச் சந்தையைக் கடந்து,நாட்டின் சாதாரண பிரஜையும் நல்ல சம்பளத்துடன் நல்ல வேலையைச் செய்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தர நாம் முயற்சிக்கிறோம். நாட்டை வீழ்ச்சியடைந்த நிலையில் இருந்து மீட்பதற்கு சந்தையை எவ்வாறு ஒழுங்காக ஒழுங்குபடுத்துவது மற்றும் நியாயமான முறையில் வரிகளை விதிக்க முடியும் என்பதைப் பார்க்க வேண்டும்.
சமூக சந்தைப் பொருளாதாரத்தை உருவாக்குவதே ஐக்கிய மக்கள் சக்தியின் இலக்காகும். நல்லாட்சி அரசாங்கத்தின் போது ஆரம்பிக்கப்பட்ட ‘சக்தி அரசி வேலைத்திட்டம்’ மூலம், சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகளை ஒன்றிணைத்து ஞசு குறியீட்டை உருவாக்கி,இதன் மூலம் சந்தையை கைப்பற்ற முடிந்தது.தற்போதைய ஆட்சியாளர்கள் இதை தொடராது மாற்றியமைத்துள்ளனர் என்றார்.