தாய்லாந்திலிருந்து சட்ட விரோதமான முறையில் 8 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதிமிக்க குஷ் ரக போதைப்பொருளுடன் அதனை பயணப்பொதியில் மறைத்து வைத்து கொண்டுவந்திருந்த சந்தேகநபர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (26) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ரேகு போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பயணிகளுக்கான வெளியேறும் பிரத்தியேக வழியான கிரீன் சேனல் வாயிலினூடாக வெளியேற முற்பட்ட நிலையில் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (26) காலை பயணிகளுக்கான வெளியேறும் வாயிலினூடாக விமான நிலையத்திலிருந்து செல்ல முற்பட்ட சந்தேகத்திற்கிடமான பயணியை ரேகு போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளதுடன், அவரின் பயணப்பொதியைத் திறந்து பார்த்துச் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். இதன்போது சந்தேகநபரின் பயணப்பொதியினுள் இருந்த 19 பாக்கெட்டுகளாக பொதியிடப்பட்டிருந்த பொதிகளில் இருந்து பெருமளவான போதைப்பொருளை அதிகாரிகள் மீட்டிருந்தனர்.
இந்தச் சோதனையின் போது சுமார் 8 கிலோ 365 கிராம் குஷ் போதைப்பொருள் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது. மேலும் கைப்பற்றப்பட்ட குஷ் போதைப்பொருள் சுமார் 8 கோடியே 36 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதிமிக்கது என அதிகாரிகளால் மதிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் 24 வயதுடைய கம்பஹா பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் தாய்லாந்தின் பாங்கொக் நகரிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான யு.எல்- 403 என்ற விமானத்தின் மூலம் சந்தேகநபர் நாட்டை வந்தடைந்துள்ளார். இதேவேளை கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மற்றும் சந்தேகநபர் தொடர்பில் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



