கறுப்பு ஜூலை கலவரத்தை நினைவுகூர்ந்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம் !

கறுப்பு ஜூலை கலவரத்தை நினைவுகூர்ந்தும் ஒற்றுமையை வலியுறுத்தியும் வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை (14) மாலை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

சோசலிச இளைஞர் சங்கத்தின் ஏற்பாட்டில் மூவின மக்களின் பங்குபற்றுதலுடன் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இதில் ஈடுபட்டவர்கள் ‘இனியும் கலவரம் வேண்டாம்’, ‘பிரிவினைகள் வேண்டாம்’, ‘சமூக ஒற்றுமையை குலைக்காதே’, ‘ஆட்சியாளர்களே இனவாதத்தினை தூண்டாதே’, ‘யாழ் நூலகத்தை எரித்தது இனவாதமே’, ‘நாடு பூராகவும் ஜூலை கலவரத்தை திட்டமிட்டு நடத்தியது ஆட்சியாளர்களே’ என எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், இது தொடர்பில் பலவாறு கோஷங்களை எழுப்பினர்.

அத்தோடு, மாறி மாறி ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசிய கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும்   பொதுஜன பெரமுன என்பனவே நாட்டின் இன நல்லுறவு சீர்குலைந்து, கலவரங்கள் ஏற்படக் காரணம் எனவும், அவ்வாறான ஆட்சியாளர்களை விரட்டியடிக்க வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் இதன்போது கருத்து தெரிவித்தனர்.