கொழும்பு மாவட்ட அவிசாவளை பென்ரித் தோட்ட மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நான்கு ஏக்கர் காணியை தம்ரோ பெருந்தோட்ட நிறுவனம் அபகரிக்க எடுத்த முயற்சியை களத்துக்கு விரைந்த, கொழும்பு மாவட்ட எம்பியும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் நேரடியாக தடுத்து நிறுத்தியுள்ளார்.
மக்களுக்கு ஒதுக்கப்பட்ட காணியை சுற்றி முள்வேலி அமைத்து, அதற்குள் பெக்கோ மண்ணகழ்வு இயந்திரம் மூலம் துப்பரவு சாது, குழு தோண்டி புதிய இறப்பர் கன்றுகளை நட்டு, காணியை, புசல்லாவ பெருந்தோட்ட நிறுவனத்திடமிருந்து, உள்குத்தகைக்கு பெற்ற தம்ரோ பெருந்தோட்ட நிறுவனம் நடவடிக்கைகளை எடுத்து கொண்டிருந்தது.
இதுபற்றி கட்சி பிரதிநிதிகள் மற்றும் பிரதேச மக்கள் தெரிவித புகாரை அடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற மனோ கணேசன் எம்பி தலைமையிலான குழுவினர் பெருந்தோட்ட நிறுவனத்தின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தினர். இன்று முற்பகல் நடைபெற்ற சம்பவத்தின் போது, மனோ எம்பியுடன் கட்சியின் மக்கள் பிரதிநிதிகள், பாலசுரேஷ் குமார், பிரியாணி குணரத்ன, பாலச்சந்திரன் அப்பாதுரை, எஸ். தங்கதுரை மற்றும் மோசஸ் ஆகியோர் உடனிருந்தனர். சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு செல்லும் முன், முதலில் அவிசாவளை பிரதேச செயலகத்துக்கு சென்று பிரதேச செயலாளர் தில்ஹானியை சந்தித்த மனோ எம்பி, மக்களுக்கு ஒதுக்கப்பட்ட கனியை பாதுகாக்கும் கடமையில் இருந்து தவறி உள்ளதாக பிரதேச செயலாளரை குற்றம் சாட்டினார்.
இதுபற்றை ஊடகங்களிடம் கருது கூறிய மனோ கணேசன் எம்பி, தெரிவித்ததாவது;
நல்லாட்சியின் போது, கொழும்பு அவிசாவளை பென்றித் தோட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட வாயு கசிவில் அங்கு விபத்து ஏற்பட்டு, அயல் குடியிருப்பு மக்கள் பெரும் ஆபத்தை சந்தித்தனர். இதனால், மாற்று இடம் ஏற்பாடு செய்து, அதற்காக நான்கு ஏக்கர் காணியை அமைச்சரவை பத்திரம் சமர்பித்து, நான் பெற்றேன். அதற்கான நிதியும் எனது அமைச்சினால் செலுத்தப்பட்டது. இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
இதை பயன்படுத்தியே, இங்கே வாழும் தமிழ் குடும்பங்களுக்கு ஒதுக்கி தரப்பட்ட இந்த நான்கு ஏக்கர் காணியை, தோட்ட நிறுவனம் தந்திரமாக அபகரிக்க முயன்றுள்ளது.
ஒருவேளை நான் மீண்டும் அமைச்சர் ஆகி இதை செய்ய வேண்டும் என அதிகாரிகள் நினைத்தார்களோ தெரியவில்லை. அல்லது நான் மீண்டும் அமைச்சர் ஆக மாட்டேன் எனவும் அதிகாரிகள் நினைத்தார்களோ தெரியவில்லை. எது எப்படி இருந்தாலும், எனக்கு எதிரணியும் ஒன்றுதான். ஆளும் அணியும் ஒன்றுதான் என்று இன்று இங்கே இந்த அதிகாரிகளிடம் கூறினேன்.
தற்போது இந்த துர்முயற்சி நிறுத்தபட்டுள்ளது. இது தொடர்பில், கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவில் கலந்துரையாடி, காணி துண்டுகளை சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு நாம் பிரித்து வழங்குவோம்.